( நடை) பாதைகள் படும் பாடு!
*************
" தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா"
என்று பாடிக்கொண்டே நடந்தேன் சாலயோரம்.
அடுத்த நிமிடம் தரையில் விழுந்து முட்டிக்கு முட்டி அடி.
தலை நிமிர்ந்து சென்றதன் விளைவு!ஆம்! நடை பாதை இருந்தால்தானே! இருந்தால் அதில் நடக்க இடம் இருந்தால்தானே!
என்று கேட்டுக்கொண்டே போகலாம், சுந்தராம்பாள் அம்மையார்" என்ன என்ன " என்று கேட்டுக் கொண்டே செல்வது போல.
பல மேடு பள்ளங்களை சொந்தம் கொண்டாடும் நடைபாதைகள், அப்படி ஒன்று இருந்தால்.
பலருக்கு ஏன் பலவற்றுக்கு வாழ்வாதாரமே நடை பாதைகள்தாம்- கையேந்தி பவனங்கள், இரு சக்கர வண்டிகள், சிறு கடைகள் எனப் பலப்பல!
பாதை கண்டு பிடித்து நடக்க " புவியிடங்காட்டி"(GPS)தேவைப்படுமோ?
" உலகே மாயம்; வாழ்வே மாயம்"என்றபாடலைக் கேட்டிருக்கிறோம். ஆனால்
" நடை பாதையே மாயம்
இருந்து நடந்தாலும் காயம்"
என்ற பாடத்தோன்றுகிறது.
ஏன்இப்படி என்று கேட்காமல் வாழ்க்கை இல்லை!
அசுர வேகத்தில் வளரும் வாகனங்களின் எண்ணிக்கையால் தோற்கடிக்கப்பட்டதால் நடைபாதைகள் -இல்லை! இல்லை!
வாழ்க்கைப்பாதையில் நடை போடும் சென்னை பாதசாரிகள் தோற்றனர் !
பாவப்பிறவிகள்!
உச்ச நீதிமன்றம் நடைபாதைகளை அமைக்க, ஒழுங்குபடுத்த இட்ட ஆணைகள் எவ்வளவோ!
அவற்றை துச்சமாக மதிக்காமல் அமல்படுத்த அதிகாரிகள் உள்ளனரா?!
நடக்காமல் மோட்டார் வாகனங்களிலயே எப்போதும் பயணிப்பரோ?
இந்தக் கேள்விகள் முட்டி வலியை விட இதயத்தில் வேல்பாய்ச்சும் வினாக்கள்.
" நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது" என்றார் கவிஞர்.
ஆம்
நம்நடை பாதைகளில் நடப்பதே நாட்டியமாடிக் கொண்டுதான்!
என்று தணியும் என் நடை பாதையின் தாகம்?
என்று மடியும் அதிகாரிகளின்
சாலை விரிவாக்க மோகம்?!
ஆங்கிலத்தில்" pedestrian" என்றால் பாதசாரி என்று ஒரு
பொருள்; சலிப்பு( boring) என்று மற்றும் ஒரு பொருள். அதிகாரிகள்அகராதியில் இரண்டாவது பொருள்தான்
உள்ளதோ?!
இந்த மெய்ப் பொருள் என்று கைப்படும்? அன்று !அன்று!
எப்போது கால்படும்?
⁃ கால் போன போக்கில் எழுந்த எண்ணங்கள்!
No comments:
Post a Comment