திரைப்படப் பாடல்களின் சகாப்தம் கண்ணதாசன்.
**********************
இளங்காலைப்பொழுது.
"பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது (கவியரசர்). நினைவாலே!" என்ற
இசைத்தென்றலோடு
என்னை எழுப்பிய இளம்பூரணியாம் என் தமிழ்த்தாய்க்கு முதற்கண்வணக்கம்.
என்னையும் மேடையேற்றிய மகாகவி பாரதி சங்கத்தாருக்கு நெஞ்சு நிறை நன்றி.
மிகப் பொறுமையுடன் நேரம் ஒதுக்கி என் கவியையையும் கேட்க விழையும் பார்வையாளர்களுக்கு வணக்கமும் நன்றியும்.
தாய் என்னை ஏன்
எழுப்பினாள்?
அவளின்இளைய மகன் கவியரசர் கண்ணதாசனின் நூறாண்டு விழாக் கொண்டாட்டம்.
"நீ மறந்து விட்டாயோ ? "என்றாள்.
"கவியரசர் என்னை விழிக்க வைத்து விட்டார்,"என்றேன்.
அன்னை சிரித்தாள்.
"வா, நாமிருவரும் சேர்ந்து சகாப்த நாயகரைப் போற்றுவோம்" என்றாள்.
நானும் தாய் முன் அவள் மகன் சகாப்தத்தைப் பேச வந்தேன்.
சகாப்தம் என்பது ஒரு சிறப்பான காலப்பகுதி எனில் 1927-1981
காலகட்டம், கண்ணதாசனின்
சகாப்தம். கண்ணதாசனே ஒருகாலம்.இவருக்கு ஏது கால வரம்பு?சந்தத்தின்நாயகனுக்கு அந்தம் ஏது?
அந்தகன் இவரைக் கவர்ந்தான் ஆயினும்,அவன் கால அளவுகளை மீறிக் காவிய மன்னரின் படைப்புகள் யுகங்களைத் தாண்டி நிற்கிறதே; அவன்உடல்தான் மறைந்தது.
" கம்பன் ஏமாந்தான்" என்று கவி பாடியவரிடம் காலன் ஏமாந்தான்!
சிறுகூடல் பட்டியிலிருந்து, சிகாகோ வரை , சீரும் சிறப்பும் மிக்க கவிதை மலர்களை தன்வாழ்க்கைப்பாதையில் தூவி ,தமிழ்மணம் அகிலம் பரவச்செய்தான்.நாம்செய்த தவப்பயனாக, தமிழ்க்கடலில் கண்டு எடுத்த முத்து ஐயா, இந்த முத்தையா!
சகாப்தம் எனும்வெறும் காலக்கணக்கீட்டையும் தன்னால் ,பெருமைப்பட வைத்த இவர்சகாப்தர் அன்றோ!
திரைப்படப்பாடல்களில் முதன் முதலில் "கலங்காதிரு மனமே "எனத் தைரியமூட்டி ஆரம்பித்து "கண்ணே கலைமானே நீதான் என்சந்நிதி " என்று கண்ணீர் அஞ்சலியோடு காதலை வழிபட்டு முடித்த இவரின் திரைப்படப் பாடல் படைப்புகள் , ஐயாயிரத்துக்கும் மேலாம்.
மனித வாழ்க்கையே இவர்பாடல்களானது.
ஒவ்வொன்றும் தமிழ்த்தாயின் தமிழ்ஆரத்தில் பதிக்கப்பெற்ற நறுமணம் வீசும் பொன்மலர்கள்!
செயற்கை நுண்ணறிவும் கணக்கிட மூச்சு முட்டுமே!
இவர் பாடல் பெற்ற புலவரன்று; பாடல்கள் இவரால் பெருமை பெற்றவை அன்றோ!
இவர் ஒரு வார்த்தை ஜாலர்!
"தான் "என்னும்அகந்தையைக்
காதலில் கரைத்தவர், சொல் விளையாட்டாடி!!
'கையில் இணைத்தான் வளைத்தான் பிடித்தான் அணைத்தான் எப்படி சொல்வேனடி….' என்பார்.
"தான் தான் "என்று வார்த்தைச்சிலம்பாடி, கவர்ந்து விட்டார் நம்மையும்தான்!
தேன் என்றாலே இனிப்பு. அதில் காதல் சுவையும் ஊறினால் இன்னும்இனிப்பு. கவிச்சந்தமும் சேர்ந்தால் இனிப்போ இனிப்பு.
எப்படி?
"சிங்க நடை போட்டு சிகரத்தில் நின்ற " நம் பெண்மையின்ரசிகர் இசைக்கிறார்:
"பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத்துடித்தேன்.
அன்று உனைத்தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன்" என்று!
மலைத்தேன் என மலைத்தேன் என்ற சிலேடை வேறு! நானும் ரசித்தேன்; சுவைத்தேன்; உங்களிடம் பகிர்ந்தேன்.
தலைவன் தலைவி ஊடலை கலிங்கத்துப்பரணி பரக்கப் பேசும்.தலைவி தலைவனிடம் கொண்டாள் பொய்க்கோபம்.தலைவன் துகிலை இழுக்கையில்,
" விடுமின் எங்கள்துகில் விடுமின்" என்று தலைவி ஊடிய மாதிரி நடித்து,தலைவன் இன்னும் சிறிது நேரம் "துகிலைப் பிடிமின் என்ற பொருள் விளைய"நின்றாளாம்.
நம்கவியரசர் பொய் ஊடலை,
"ஆடை தொட்டு இழுக்கும் போது
போதும் போதும் என்பதில்
இன்னும் வேண்டும் என்பதன்றி வேறு
அர்த்தம் காண முடியுமா?"
என்பார்.
பாமரனும் பாடப் பாக்களை எளிமையாக்கிய ஏழைப்பங்காளன், நம்ஐயா!
தத்துவக் குப்பைகள்இன்றி
வாழ்வின் நியதியை எளிதில் விளக்குவார், இந்த " மானிட ஜாதியின் தனி மனிதன்":
'ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...'என்று.
இதுவும்கடந்து போகும் என்று ஏட்டுச்சுரைக்காய் விதி கூறார்;
இன்பமும், துன்பமும் மாறி மாறி வரும் என வாழ்க்கையின் நியதியைப் புட்டுப் புட்டு வைப்பார்.
சுவடிகளைப் புரட்ட வேண்டியதில்லை தத்துவம் அறிய; கவிஞரின் சுவடுகளைப் பின்பற்றினாலேயே போதுமே!
தானும்சிரித்து நம்மையும்
சிரிக்க வைத்து சிறையிலிட்டார் இந்த நகைச்சுவை நாயகர்.
"சிரிப்பு வருது
சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க
சிரிப்பு வருது
சின்ன மனுஷன்
பெரிய மனுஷன்
செயலைப் பாக்க
சிரிப்பு வருது"
என்று சிரிப்பிலயே சிந்திக்க வைத்து நம் சிந்தையைக் கவர்ந்தார்.
பலபரிமாணங்கள், இந்த சகாப்தத்துக்கு. மிக்க சரி.
ஆனால்,என்
மனதில்நிற்பது என்ன?
இன்று நாம் காண்பது, இளைய சமுதாயம் பரிட்சை வலைகளில் சிக்கி மனம்தளர்ந்த நிலையை.
அன்றே கவிஞர் இளையவர் தோளில் கை போட்டுக் கூறிய அறிவுரை" நச்" சென்று:
"மயக்கமா கலக்கமா...
எதையும் தாங்கும் இதயம் இருந்தால் ...
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்....
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு".
இவர் "நீட்டாக" ஒழுங்காக
வாழ்க்கையை வாழ ,நம்பிக்கையுடன் எதிர்கொள்ள அறிவறுத்தும்கீதாசாரியன் ஆனார்!
காதலா, கண்ணீரா, இன்பமா, துன்பமா ,வாழ்க்கைப்பாடமா கண்ணதாசன் வருவார் தன் வைரவரிகளால் வழி காட்ட.
நெற்றியில்
உள்ள கவலையின் வரிகளை அழிக்க;தெள்ளிய தமிழில் தெளிவை ஊட்ட.
தாய் தலையாட்டி ஆமோதித்தாள், அவள்மூக்குத்திப் பட்டொளி வீச. புரிந்து கொண்டாய் நீ என்று சிரித்தாள்.
நான்அந்த முல்லை முகை முறுவலை ரசித்து,
"கண்ணதாச சகாப்தம் காலங்களையும் கடந்து வழும் சாகாவரம்பெற்றது. எனவே,
காலன்ஏமாந்தானே!தமிழ் மகன் வென்றானே!,"என்றேன்.
தாய் கையை அசைத்து ஆமோதித்து,ஆசீர்வதித்து மறைந்தாள்.
நன்றி வணக்கம்.🙏🙏
- இ.ச.மோகன்
No comments:
Post a Comment