கவியரசே உமக்கு நூற்றாண்டு விழா,
ஒரே ஒரு சூரியன் தான்,
ஒரே ஒரு சந்திரன் தான்,
ஒரே ஒரு கவியரசர் தான்,
தொடுவானத்தைத் தொட முடியுமா?
உம் புகழை எட்டத்தான் முடியுமா?
முகவரிக்கும் உமது பாடலே நினைவுக்கு வருகிறது,
யார் தருவார் இந்த அரியாசனம்,
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம் என்று எழுதி,
இங்கே பல கவிகள் மேடையில் வீற்றிருக்க,
எனக்கும் இதில் பாட ஒரு வாய்ப்பளித்த,
நமது கலைஞர்களை எண்ணி உள்ளபடியே நான் பெருமைப்படுகிறேன்.
கவியரசர் நூற்றாண்டு விழா,
எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு,
வாழ்வியலை கூறும் தத்துவ ஆசான்,
கவியரசரே கண்ணனுக்கு தாசனாக பெயர் மாற்றம் கண்டீர்,
பின்னர் கண்ணனையே உனக்கு தாசனாக்கிக் கொண்டீர்.
எண்ண முடியுமா கண்ணன் பாடல்களை,
அவ்வளவு பாடல்கள் எழுதினீர்,
பிறப்பின் விளிம்பில் வருவது மட்டும் தத்துவம் அல்ல,
கவியரசரே அதைத்தான் உமது பாடல்களில் காண்கிறோம்,
தாலாட்டிலும் தத்துவம்.
காலம் இது காலம் இது கண்ணுறங்கு மகளே,
காலம் இதை தவறவிட்டால்,
தூக்கம் இல்லை மகளே என்று எழுதினீர்.
காதல் பாட்டுகளிலும் தத்துவம்,
நீலவு வந்ததும் மலர் மலர்ந்ததா , மலர்மலர்ந்ததால் நிலவு வந்ததா?என்று எழுதினீர்.
வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா, வாய் திறந்ததால் வார்த்தை வந்ததா,
பதில் அளிக்க முடியாத வினாக்கள்,
சொல் விடை அளிக்க முடியாத வினாக்களும் தத்துவமே என்பது கண்ணதாசன் கருத்து.
கோபத்திலும் தத்துவம்,
யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க,
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க,
குளத்திலே தண்ணீயில்லே,
கொக்குமில்லே மீனுமில்லே,
பெட்டியிலே பணமில்லை,
பெத்த புள்ளே சொந்தமில்லை,
என்று கோபத்தில் எழுதினீர்.
இயல்பான பாடல்களிலும் தத்துவம்,
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை,
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை,
நூற்றுக்கு நூறு சரியாக சொன்னீர்கள்.
ஒரே பாடலில் எத்தனை தத்துவ வைர வரிகள்,
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்,
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்.
நீயும் நானும் வாழ்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே,
அந்த நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே.
வண்டியோட சக்கரங்கள் இரண்டு மட்டும் போதும்,
அந்த இரண்டில் ஒன்று சிறிய தென்றால் எந்த வண்டி ஓடும்,
மலருக்கு மணமூட்ட முடியுமா,
தேனுக்கு இனிப்பூட்ட முடியுமா,
தேனீக்கள் பூக்களை தேடிச் சென்று தேனை எடுத்து நமக்கு தருவது போல்,
இதிகாசங்களிலும் புராணங்களிலும் உட்புகுந்து,
உள்ள தேனை எடுத்து நமக்கு தந்துள்ளீர்கள்.
வானத்தில் நட்சத்திரங்களை கூட எண்ணி விடலாம்,
உமது பாடல்களின் தத்துவ வரிகளை எண்ண முடியுமா.
செத்த பிணத்தில் பூகுந்துகொண்டு சாகப் போகும் பிணங்கள் அழிகின்றன,
இது பட்டினத்தார் வாக்கு,
இது படித்தவர்களுக்கு வேண்டுமானால் புரியலாம்
பாமர மக்களுக்காகவும் நீ எழுதினாய்,
போனால் போகட்டும் போடா,
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா,?
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்,
இதற்கொரு மருந்தை கண்டேனா,??
இருந்தால் அவளை தன்னந்தனியே,
எரியும் நெருப்பில் விடுவேனா,??
பூக் குரலாலே கிடைக்காது,
அது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது,
அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது.
என்ன மாதிரி ஒரு வரிகள்,
இன்னும் எழுதுவார்,
வாழ்க்கை என்பது வியாபாரம்,
அதில் ஜனனம் என்பது வரவாகும், மரணம் என்பது செலவாகும்,
போனால் போகட்டும் போடா.
மற்றுமொரு பாடல்,
வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை,
கடைசி வரை யாரோ, கடைசி வரை யாரோ.
தொட்டிலுக்கு அன்னை, கட்டிலுக்கு கன்னி,
பட்டினிக்கு தீனி, கெட்ட பின்பு ஞானி.
ஐயா கண்ணதாசனே,
கடல் உள்ளவரை
காற்று உள்ளவரை, நீர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பீர்,
உமது கவிதையில் வைர வரிகள்.
பின்வருவது,
பிறப்பின் முன் வருவது யாதென கேட்டேன்,
பிறந்து பார் என்று இறைவன் சொன்னான்.
இறப்பின் பின் வருவது யாதென கேட்டேன்,
இறந்து பார் என்று இறைவன் சொன்னான்,
கண்ணதாசனே,
இறப்பின் பின் வருவதை அறிந்து கொள்ள சென்றுவிட்டீரோ,
இறப்பின் பின் வருவதை அறிந்து கொள்ள சென்றுவிட்டீரோ.
சாவே உனக்கு சாவு வராதா,
என்று சாவுக்கே சாவு கொடுத்த கவிஞரே,
சாவே உனக்கு சாவு வராதா என்று,
சாவுக்கே சாவு கொடுத்த கவிஞரே,
உம் முடிவுரையையும் நீயே எழுதிக் கொண்டீர்,
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை,
எந்தநிலையிலும் எனக்கு மரணம் இல்லை என்று எழுதிவிட்டீர்.
ஐயா கண்ணதாசரே,
உலகம் உள்ளவரை, நிலம் உள்ளவரை,
நீர் உள்ளவரை,
தமிழ் உள்ளவரை, திருக்குறள்
உள்ளவரை, சமூக சொந்தங்கள் உள்ளவரை, நூற்றாண்டு விழா மட்டுமல்ல, இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் உமது பெயரும் புகழும் நிலைத்திருக்க வேண்டும் என்று கூறி வாய்ப்பளித்த தமிழ் சங்கத்திற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன், நன்றி வணக்கம்.
- R. பிச்சைமணி
No comments:
Post a Comment