கொஞ்சு தமிழ்
தஞ்சமிடும் எங்கும்,
விஞ்சு புகழ்
மிஞ்சி நிதம் பொங்கும்,
பஞ்சமிலா பாட்டெழுதிய
பாரதியின் சங்கம்!
கொஞ்சம் சிறு தவறிடினும்,
கோணாத கோலாய்,
கெஞ்சி நின்று குமுறிடினும்,
கூனாத நெறியாய்,
விஞ்சுமிகு சீர்நடிப்பால்,
விருதுதனை பெற்றாய்!
பங்கமிலா வாய் புகழும்,
கஞ்சமிலா கரவொலியும்,
மிஞ்சிபொழி பொற்காசாய்,
எஞ்சி இங்கு வழியும்!
பிஞ்சுகவி
நெஞ்சுநிறை விஞ்சுகவி மொழியும்!
மஞ்சம் விழை வஞ்சியென,
தினம் தமிழ் தஞ்சமிட,
மனம் கொஞ்சித் திளை கவிஞனுக்கு,
வஞ்சமிலா இசை மழையாம்!
நஞ்சுமிலா சொல் விருந்தாம்!
கவியரங்கத்திற்குக்
கால் பாய்ச்சிய நிர்வாகிகளுக்கும்...
சின்னத்திரையில்
கோலோச்சுகிற நெறியாளருக்கும்...
வியந்திங்கு
வீற்றிருக்கும் விருந்தினர்களுக்கும்...
நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்கும்
பாடலிசை கலைஞர்களுக்கும்,
ஆரவாரமுடன்
எமை ஆதரிக்கும் சபையோருக்கும்,
வணக்கம்!
சிந்து கவிபாடிச்
சித்திரம் வரைந்த மகன்!
சிந்தும் கண்ணீரில்
சரித்திரம் படைத்த மகன்!
முந்து தமிழ் மறையின்
மூச்சினில் கலந்த மகன்!
சந்தமிகு காவியத் தாயின்
இளைய மகன்!
"படைத்தவன் தானே என்று"
கம்பீரமாக பாடிய...
கவியரசு கண்ணதாசன்
புகழ்பாட வந்துள்ளேன்!
மலர்ந்தும் மலராத
பாதி மலராக...
விடிந்தும் விடியாத
காலைப் பொழுதாக...
மழித்தும் முளைக்காத
பால் முகமாக...
இருபத்து இரண்டிலே,
காலங்களில் வசந்தமாய்,
மாதங்களில் மார்கழியாய்,
கவி படைத்தாய்!
விட்டில் பூச்சிகளாய்
உன் பாட்டில் விழுந்த
எளிய வார்த்தைகள்...
வண்ணத்துப் பூச்சிகளாய்
எழுந்து
வெள்ளித் திரையின்
வானம் தொட்டன!
மின்மினிப் பூச்சிகளாய்
அரிதாரம் பூசிய நடிகர்கள்,
உன் பாட்டொலியால்... நட்சத்திரங்களாகி
நாடாண்டார்கள்!
“எங்கே வாழ்க்கை தொடங்கும்...
அது எங்கே எவ்விதம் முடியும்!...”
என்று
வாழ்க்கையின் நிலையாமையைப் பாடினாலும்;
“வாழ்க்கை என்றால்
ஆயிரம் இருக்கும்!
வாசல் தோறும்
வேதனை இருக்கும்!”
என்று...
துவண்டு விழும் மாந்தரின்
கண்ணீரை வென்றாய்!
தோல்விக்குத் தோள் கொடுக்கும் தோழனாய் நின்றாய்!
"பசுமை நிறைந்த நினைவுகளே!
பாடித் திரிந்த பறவைகளே! "
என்று...
நினைவில் நின்ற நட்புடன்
நேரில் கூடினாய்!
நனையும் விழிகளோடு
பிரியாவிடை பாடினாய்!
“நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா?”
என்று...
காலையில் பூத்து
காதலை சூடினாய்!
மாலையில் வாடி
கண்ணீரை நாடினாய்!
சொக்க வைக்கும்
உன் சுக்கான் வரிகள்,
திக்கற்ற வாழ்வை
திசை திருப்பியது!
“மயக்கமா?
கலக்கமா?
மனதிலே குழப்பமா?”
என்ற பாடல்தான்...
வாய்ப்பின்றி வாடி
ஊர்வழி நாடிய
வாலியை மீட்டு வந்தது!
வெள்ளித் திரையில்
விருதுகளை ஈட்டித் தந்தது!
“மாலைப் பொழுதின்
மயக்கத்திலே நான்
கனவு கண்டேன் தோழி!”
என்ற பாடல்தான்...
ஞான தேசிகன் என்ற
ராசய்யாவை...
இசைஞானி
இளையராசாவாக்கியது!
“அதோ
அந்தப் பறவை போல
வாழ வேண்டும்” என்றது...
சுதந்திர ஏக்கத்தில்
சிறகாய் விரிந்த வரிகள்!
“மனிதன் என்பவன்
தெய்வமாகலாம்” என்றது...
மனிதனை மாண்பின் உச்சிக்கே உயர்த்திய வரிகள்!
மனிதன்...
தன் தவறுகளுக்கு
வக்கீலாகவும்,
பிறர் தவறுகளுக்கு
நீதிபதியாகவும் இருக்கிறான்.
ஆனால்...
வனவாசத்தில் உன்னை நீயே நீதிமன்றத்தில் நிறுத்தி...
மனவாசத்தில்
உன் மனசாட்சியையே
கேள்வி கேட்டாய்!
அர்த்தமுள்ள இந்துமதம்—
ஆன்மீகத்தின் ஆழம் என்றால்!
இயேசு காவியமோ—
அன்பின் உயரம்!
“சேரமான் காதலி”—
நீ சாதித்த சாகித்ய விருது!
தமிழ் எமக்கோ தாய்மொழி!
உனக்கோ அது தவமொழி!
உன் வரிவழி அன்றோ?!...
சொல்லில் இசையும்,
இசையில் உயிரும் மலர்ந்தது!
உன் வரிகளில்
எம் வாழ்வே ஒலிப்பதிவானது!
அதுவே
பண்பலையிலும் வானொலியிலும்
மீள் ஒலிபரப்பானது!
பாட்டுக்கு பாட்டு வழியாக
பாமரனும் பாடகனாக
சாமரம் வீசியவன்!
ஒத்திகையில்லா எழுத்து…
ஒப்பனையில்லா வாழ்க்கை…
ஒப்பீடில்லா புலமை…
இசைக்கு ஒத்த உன் வரிகள்!
சிறுகூடல் பட்டியில்
பிறந்த முத்தைய்யா!
நீ
செம்மொழிக் கடலில் பூத்த
முத்து
ஐயா!
“நான் நிரந்தரமானவன்
அழிவதில்லை!
எந்த நிலையிலும்
எனக்கு மரணமில்லை!”
என்று
உனக்கு நீயே
மரணசாசனம் எழுதினாலும்...
“மானார்தம் முத்தமொடும், மதுக்கோப்பை மாந்தியவன்
மறைந்து போக...
தானே எந்தமிழினி மேல்,
தடம்பார்த்துப் போகுமிடம்... தனிமைதானே!”
என்று
வாழும்போதே உனக்கு நீயே இரங்கற்பாவும் எழுதினாய்!
காலம் உனை ஆட்கொண்டாலும்...
ஞாலம் உள்ளவரை—உன்...
“உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காது!”
நாணேற்றும் பெருங்களமாய்,
நான் ஏற்றம் பெறும் தளமாய்,
தமிழ் சங்கத்திற்கு... புன்னகையால் நன்றி சொல்லி...
துன்பத்திலே துணை வரும்
கவியரசின் பாடல்களுக்கு...
கண்ணீரால் நன்றி சொல்லி
அமர்கிறேன்!
நன்றி! வணக்கம்!
- திருஞானசம்பந்தம்
No comments:
Post a Comment