Saturday, October 10, 2026

காதல் உலகின் பெருந்தலைவன் கண்ணதாசன் - கவியரசு 100

 காதல் பேரரசன் கண்ணதாசனுக்கு…


தமிழ் காதலர்களுக்கும்,

கவி ரசிகர்களுக்கும்,

என் அன்பான வணக்கம்!


கவியரசு நூறு கவியரங்கம்


கவியரசுக்கே கவிதையா?

கனவிலும் காணவில்லை!

காதல் பேரரசன் கண்ணதாசனுக்கு

காதல் கடிதங்கள்!


யார் கையிலும் சிக்காமல்,

தென்றலாய் உலா வந்தேன்…

மகாகவி விதைத்த தமிழில்,

மலர்ந்த கவியரசே,

உன்னிடம் நான் தஞ்சம் புகுந்தேன்…

உன் கற்பனைக் கடலில்,

சிப்பிக்குள் பிறந்த

முத்தாய்,

நான் பிறந்தேன்…

உன் பேனா முனை

என்னைத் தீண்ட,

நான் உன் வசமானேன்…

உன் சிந்தனைத் துளிகளில்

சிறகுகள் பெற்றேன்;

பல்கலைக்கழகமாய்

நான் உயர்ந்தேன்…

நிலவைச் சுற்றி

நீ வலம் வர,

நிலவைச் சுற்றி

நீ வலம் வர,

உன் நிழலில்

நான் நட்சத்திரமாய் ஜொலித்தேன்…

கவியரசு கண்ணதாசா!

என் உலகின் ராசா நீயே!

இப்படிக்கு,

உன் மீது தீராக் காதல் கொண்ட

கவிதை — கவியுலக தேவதை!


உன் பார்வை பட்டதும்

நான் மீண்டும் உயிர் பெற்றேன்…

என்னை வில்லாய்

வளைத்து வடித்தாய்;

பாமரன் நெஞ்சத்திலும்

பாரதியின் சொல் பேச வைத்தாய்!

பாடலாய் பிறந்த உன் சொற்களால்,

பல்லாயிரம் மனங்களுக்குள்

என்னை விதைத்தாய்…

நீ எழுதிய ஒவ்வொரு வரியும்

தமிழ்த்தாயின் அணிகலனே!

நீ விட்டுச் சென்ற கவியுலகம்

என்றென்றும்

மக்களின் மாபெரும் செல்வமே!

இலக்கிய உலகின்

இளைய மகனே — கண்ணதாசா!

தமிழ் பேசும் நல்லுலகம்

என்றென்றும்

உனக்குக் கடன்பட்டதே!

இப்படிக்கு,

உன் மீது தீராக் காதல் கொண்ட

தமிழ் இலக்கிய உலகம்!


என்னை பார்த்து,

அறியவும் முடியாது…

எங்கும் தேடினாலும்,

வாங்கவும் முடியாது…

பள்ளியும் இல்லை —

அடையாள அட்டையும் இல்லை…

என்னைப் படிக்கத்,

தனிப்பாடமும் இல்லை…

மூன்றெழுத்து அம்பாய்

என்னை ஏய்தவுடன்!

கொட்டும் அருவியாய்

கவி பொழிந்திடுவான்!

எனக்குத் தகுதியும்,

அடையாளமும் கொடுத்தாய்…

கோழைகளுக்கு நான்,

சரி படமாட்டேன் என்றாய்…

இரசனையோடு துணிவும் வேண்டும் என்றாய்;

தடுமாறும் நெஞ்சங்களுக்குத்,

துணிவும் தந்தாய்…

உணர்ச்சிகளைக் கவிதைகளாய் வர்ணித்தாய்;

உள்ளங்களின் ரகசியத்தை,

வரிகளாய் திறந்தாய்…

நான் உன் வாசல் வந்தால்

உன் கவிதையால் ஆரத்தி எடுப்பாய்…

சொல்லை நீ தொடுக்கும்போதெல்லாம்

என் மௌனம் பாடலானது…

மலர்க்கொடியாள் என

நீ அழைக்க…

மணமாய் உன்னுள் பரவினேன்…

கண்ணே கலைமானே! கன்னி மயில்!

என நீ அழைக்க,

உனக்கே நான் உயிரானேன்…

பூ பூக்கும் வரை உலகம் இருக்கும்…

பூ பூக்கும் வரை உலகம் இருக்கும்…

காதல் கவிஞன் கண்ணதாசா!

உன் கவிதையால் நான் என்றும் பூத்திருப்பேன்!

இப்படிக்கு,

உன் மீது தீராக் காதல் கொண்ட

காதல் தேவதை!


கண்டதும் காதல்;

கண்ணில்லா காதல்…

கற்பனை காதல்…

காண காண காதல்;

காத்திருக்கும் காதல்…

காதல் காவடி தூக்கும்

தெய்வீக காதல்…

கூடிய காதல்;

கைக்கூடா காதல்…

"போனால் போகட்டும் போடா..."

கனவில் தொடங்கும் காதல்,

நினைவில் தொடரும் காதல்…

மௌனத்தில் மலர்ந்த காதல்

பேசியே மயக்கிய காதல்…

ஊடலில் மலரும் காதல்,

கூடலில் மண்டியிடும் காதல்…

உள்ளத்தில் புதைத்த

ஒருதலைக் காதல்…

நட்பே வழித்துணையாகும் காதல்…

தாய் சேய் காதல்…

பாசத்தில் வளரும்

பாச மலர் காதல்…

கணவன் மனைவிக்குள்

கனிந்து நிற்கும் காதல்…

இளமையிலும் காதல்…

முதுமையிலும் காதல்…

தன்னையே காதலிக்க

பெண்ணின் மனதுக்குக் கற்றுத் தந்த

காதல் கவிஞனோ!

நீ காதலை வர்ணிக்கவில்லை —

காதலுக்கே ஒரு மொழி தந்தாய்…

காதலின் ஆயிரம் முகங்களைக் காட்டினாய்…


"நான் பேச நினைப்பதெல்லாம்

நீ பேச வேண்டும்…

நாளோடும் பொழுதோடும்

உறவாட வேண்டும்…" என்ற

உன் வரிகளில்

உயிர் பெற்றது காதல்…

புதிதாய் பிறந்த காதலோ…

"ம்ம்ஹ்ம்…"

"ஹ்ம்ம்…"

"ம்… ம்…"

என்று

உச்சுக் கொட்டியே முடிந்துவிடும்

மனதை

மூடிக்கொண்ட காதல்…

காதலுக்காக ஒன்றை இழந்தாலே,

புலம்புகின்ற

இன்றைய காதலன்…

இன்னும் படிக்கவில்லை,

உன் சேரமான் காதலி!

ஒன்றாய் வாழ்ந்து பார்க்கும்

பரிட்சைக் காதல்…

பல digital வழி காதல்…

Profile Picture பார்த்து காதல்…

sticker-யில் சிரிக்கும் காதல்…

Voice Note-ல் வழுக்கும் காதல்…

Video Call-ல் விடியும் காதல்…

மனிதர்களிடம் பேச மறந்து

AI-யிடம் மனதை திறக்கும் காதல்…

இப்படி…

காலம் மாற,

காதலும் மாறியது…

காதலிக்கும் வழிகள் மாறின…

ஆனால் —

காதலின் உணர்வு மட்டும் மாறவில்லை!

ஒரு வரியில் சிரிக்க வைத்தாய்,

ஒரு வரியில் அழ வைத்தாய்,

ஒரு வரியில்

காதலிக்க வைத்தாய் —

காதல் பேரரசன் கண்ணதாசா!

காதல் செய்ய

இன்று ஆயிரம் Apps…

காதல் பாடங்களுக்கோ,

உன் காதல் வரிகளே

காலம் கடந்தும் கைக்கொடுக்கும்

காதல் App!

காதலைக் கவிதையாக்கிய கவிஞர் அல்ல…

கவிதைக்கே காதலைக் கற்றுக் கொடுத்த

காதல் பேரரசன் — கண்ணதாசன்!

உன் பேனா ஓய்ந்தாலும்,

நம் காதல் ஓயவில்லை —

பார்த்தேன், ரசித்தேன்…

சிலிர்த்தேன், மலைத்தேன்…

இப்படிக்கு,

உன் மீது தீராக் காதல் கொண்ட

தமிழ் தேனீக்கள்!


வாய்ப்பு கொடுத்த

மகாகவி பாரதி தமிழ் சங்கத்திற்கும்,

கண்ணதாசன் வரிகளோடு,

மலரும் நினைவுகளில்

காதல் உலகில் பயணித்த

கவி ரசிகர்கள் அனைவருக்கும்…

என் மனமார்ந்த நன்றி!


- சுல்தானா

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...