நற்றுணையாவது நம் தமிழே!
நற்றமிழ் என்றும் நம் உயிரே!
எமை வழிநடத்தும் தமிழன்னைக்கும் உள்ளத்தில் உறைந்து உரம் ஏற்றும் மகாகவிக்கும் முதல் வணக்கம்.
கவியரங்க நிகழ்ச்சியை சிறப்பிக்க வந்துள்ள சிறப்பு விருந்தினருக்கும்,
கவியரங்க நெறியாளர் நம் நிதி செயலருக்கும், கரவொலியால் கவியரங்கத்தை வெற்றிகரமாக்கும் அவையோருக்கும்
தமிழ் வணக்கம்
கவியரசு 100 எனும் இக்கவியரங்கத்தில்
அடியேனுக்கான தலைப்பு
*தினை அளவு சொல்லி பனையளவு விளக்கும் ஞானப் பேராசான் கண்ணதாசன்*
சங்க கால சான்றோர்கள் தினை அளவு சொல்லி பனையளவு விளக்கும் ஞானப் பேராசான்கள்.
உலகளந்த பெருமாளாம் வாமனனுக்கு உலகளக்க தேவைப்பட்டது
மூவடி.
உலகப் பொதுமறை தந்திட்ட நம் அய்யன் வள்ளுவனுக்கு தேவைப்பட்டது ஈரடி.
தமிழ் மூதாட்டி, ஆத்திசூடி தந்த அவ்வைப் பிராட்டி க்கு உலகளக்க தேவைப்பட்டது ஒரே அடி.
இவர்களை வாசித்த முண்டாசு கவிஞனுக்கும் புதிய ஆத்திசூடியில் தேவைப்பட்டது
ஒரு அடி தானே.
பாரதியை நேசித்த கவியரசும் தினை அளவு சொல்லி பனையளவு விளக்கம் ஞானப் பேராசாந்தானே!
அது எப்படி என கவியரங்கத்தில் அலசிடலாமா!
தெள்ளத் தெளிவாக விளக்கிடலாமா!
வாருங்கள் நண்பர்களே..
பொருள் தெரியா சொற்கள்
புவிதனில் பற்பல உண்டாம்
பொருள் கூற அறிஞர்கள் பலரும்
பக்குவமாய் வந்தனராம்
பக்கம் பக்கமாய் பொருள் பல எழுதியும்
அச்சொற்களின் விளக்கமோ யாருக்கும் விளங்காததாம்.
இந்நிலை மாற்ற இன்முகத்தோடு வந்திட்டார் நம் கவியரசு
சித்தாந்தம் என்றாலும் வேதாந்தம் என்றாலும் சுனாமியில் சிக்கிய படகு போல்
சிக்கி திணறுவார் பலரும் இங்கே.
சிக்கலைப் போக்க சிக்கனமாய்
இரு வரியில்
விளக்கம் தந்திட்டார் கவியரசு.
கவிதைக்கு விளக்கமாக பாரதி சொன்ன
*தெளிவுற அறிந்திடுதல் தெளிவு தர மொழிந்திடுதல்*
எனும் ஈரடியை
உள்வாங்கி,
அதே தெளிவு என்னும் சொல்லாடலை முன்வைத்து கவியரசு அற்புதமாய் சொல்லிவிட்டார்:
*தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்..*
*அது தெரியாமல் போனாலே வேதாந்தம்*
என இரண்டே அடிகளிலே எளிமையாக விளக்கி விட்டு அமைதியாக சென்றுவிட்டார் கவியரசு.
சித்தாந்தம் என்று சொன்னதும்
உலகத்து மக்கள் எல்லாம்
பொதுவுடமை என்பார் தனியுடைமை என்பார்
அவற்றிற்கு அறிஞர்கள் கொடுக்கின்ற விளக்கங்களை படிப்பதற்கு நேரமில்லா -
படித்தாலும் புரிந்து கொள்ளா -
மனிதருக்கு உதவியாக வந்திட்டார் நம் கவிஞர்:
*படித்த மாந்தர் நிறைந்த நாட்டில் பார்க்கும் யாவும் பொதுவுடமை* என்று எளிமையாய் விளக்கம் சொன்னார்.
எல்லாமே பொது உடமையா என்று கேட்டால்,
அடுத்த வரியில் அற்புதமாய் கூறுகிறார்
*நல்ல மனமும் பிள்ளை குணமும் நமது வீட்டின் தனி உடமை..*
ஆம்.. நல் மனம் கொண்ட மனையாளும்
மழலை பேசும் குழந்தைச் செல்வமும் நம் வீட்டின் தனிமையுடைமை என்று அருமையாக விளக்கி விட்டார்.
அதோடு கூட,
*வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை நீங்கி இந்நாட்டில் வரவேண்டும் பொதுவுடமை*
என தன் உள்ளத்து விருப்பத்தையும் பதிவு செய்தார்.
இப்போது கூறுங்கள் அன்பர்களே!
தினை அளவு கூறி பனையளவு விளக்கும் ஞானப் பேராசான்
எம் கவியரசு தானே!
இல்லை இல்லை நம் கவியரசு தானே!!
தலைமை மாண்பு அருகி வரும் இந்நாளில்
தலைமைப் பண்போடு தலைவராவோர் எவர் எனும் கேள்விக்கு ஈரடிகளில் கவியரசு
சிறப்பாக விடையளித்தார்:
*தன்னைத் தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவது இல்லையா!*
இதற்கு மேலும் விளக்கம் தேவையா அவையோரே?
ஆறறிவு கொண்ட மனித இனம் மட்டும்
ஆசை பாசம் உறவு என சிக்கித் தவிப்பது ஏன்
எனும் வினாவிற்கு -
உளவியலால் எளிமையாக விளக்க முடியா ஒரு விடயத்திற்கு - விளக்கம் சொல்கிறார் நம் கவிஞர்:
*மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா*
உறவுகளில் வரும் உளவியல் குழப்பங்களுக்கு மனமே காரணம் என்று ஆணி அடித்தார் போல் அழகாக சொல்லிவிட்டார்!
இப்போது கூறுங்கள்..
தினை அளவு கூறி பனையளவு விளக்கும் ஞானப் பேராசான் எம் கண்ணதாசன் தானே!!
இல்லை இல்லை நம் கண்ணதாசன் தானே!!
இளமை என்றாலே வண்ண வண்ணக் கனவுகளும் இன்பமான நினைவுகளும் நிறைந்தது தானே!
கனவு மயத்தில் வாழ்கின்ற இளம் பெண் திருமணம் ஆகி கைம்பெண் ஆகிவிட்டால் அவளின் கையறு நிலை அப்பப்பா மிகக் கொடுமை!
அவளின் மன உளைச்சலை,
உள்ளக் குமுறலை எப்படி எளிமையாக நெஞ்சில் தைக்கிறார் போல் சொல்கிறார்.
*இளமை எல்லாம் வெறும் கனவு மயம் அதில் கழிந்தது சில காலம் ...*
*தெளிவும் தெரியாது எதுவும் புரியாது மயங்குது எதிர்காலம்..*
எதிர்காலமே கேள்விக்குறியாகி வாழ்க்கையே மயங்கிய நிலையில் போன இளம் கைம் பெண்ணின் துயரத்தை
வேறு எவரே இவ்வளவு நயத்துடன் கூறிட இயலும்.
அதே பாடலில் வேறொரு இடத்தில், மனித வாழ்க்கை என்றால் இன்பமும் துன்பமும் மாறிவரும் என்பதை கேள்வி கேட்கும் இரண்டு வரிகள்:
*இன்பம் கனவில்.. துன்பம் எதிரில்..*
ஆம்.. அவர்களால் கனவில் மட்டும் தானே இன்பம் காண முடியும்
நிசத்தில் துயரம் மட்டும் தானே..
அந்த இளம் விதவையின் மனவலியை நமக்கும்
இரண்டே அடிகளில் கடத்துவது கவியரசுக்கு மட்டுமே சாத்தியம்!
இப்போது கூறுங்கள் அவையோரே!
தினை அளவு கூறி பனையளவு விளக்கும் ஞானப் பேராசான்
எம் கவியரசுதானே! இல்லை இல்லை நம் கவியரசு தானே!
கையறு நிலையை கவியரசு கூறியது அற்புதம் என்றால்
இன்னலைக் களைய
துன்பத்தை விரட்ட
வழிகாட்டும்
ஞானப் பேராசான் கவியரசின் வரிகளும் மிக மிக அற்புதமே!
*வருகின்ற துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை*
என துன்பத்தை எதிர்கொண்டு துரத்தச் சொல்கிறார் நம் கவிஞர்!
*உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு* - என
எப்போதும் சுய கழிவிறக்கத்தில் பொழுதைக் கழிக்கும் நபர்களுக்கு அறிவுரையும் சொல்கிறார்!
வேறொரு பாடலில்
நம்பிக்கை தரும் நல்வழிகளை நயமுடன் எழுதிட்டார்:
*மறுபடி திறக்கும் உனக்கு ஒரு பாதை உரைத்தது கீதை"* -
என
துன்பப்படுவோரின் வாழ்க்கையில் இலக்கணம் மாறாது.. இலக்கியம் ஆகாமல் போகாது என உற்சாகம் தருகிறார்.
இப்போது கூறுங்கள் அவையோரே!
தினை அளவு கூறி பனையளவு விளக்கும் ஞானப் பேராசான்
எம் கவியரசுதானே! இல்லை இல்லை நம் கவியரசு தானே!
என்றென்றும் கவியரசின் புகழ் பாடுவோம்!
கவியரசின் புகழ் வாழ்க!
அவர் புகழ் பாடும் இக் கவியரங்கம் வெல்க!
மகாகவி பாரதி தமிழ்ச்சங்கம் வாழ்க! வளர்க!!
நல் வாய்ப்பினை தந்திட்ட நம் சங்கத்திற்கும்,
நலமுடன் கேட்டு நயமுடன் ரசித்து மகிழ்ந்து அவையோர்க்கும்
நன்றி நவில் கிறேன்
No comments:
Post a Comment