காலத்தை கடந்து நிற்கும் கலா ரசிகன் கண்ணதாசன்
கலா ரசிகன்
கண்ணதாசன்
தாயே தமிழே வணக்கம்!
தாய்த் தமிழை ரசிக்க வீற்றிருக்கும் உங்கள் அனைவருக்கும்
இந்த ரசிகையின்
இனிய காலை வணக்கம்!
அவன்!
கற்ற கல்வியோ கடலளவு!
கவிதையோ அலையளவு!
கற்றதை எல்லாம் கரைத்து கொடுத்த கவிஞன் அவன் !
கவர்ந்த நூல்கள் பல உண்டு !
கலந்து செய்த பா உண்டு!
கவர்ந்த கதையை சொல்கிறேன் கேளுங்கள்!
ஓலை சுவடியில் உறங்கிய கவிதையை உலகெங்கும் ஒலிக்க வைத்தவன் யார்?
புத்தகத்தில் பூட்டி வைத்திருந்த பொருளை பாமரன் கையில் கொடுத்தவன் யார்?
பெரிய தத்துவங்களை கூட சிறிய வார்த்தையில் அடக்கியவன்யார்?.
ஆம்!
அவன் வெறும் கவிஞன் அல்ல!
ஒற்றை வாழ்வில் இரட்டை வாழ்க்கை வாழ்ந்தவன்!
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் இருக்கும் யாவற்றிற்கும் பாட்டெடுத்த ஒரே புலவன் அவன்!
ஆம்!
அவன் வாழ்க்கையும் எளிமை தான்!
பட்டு சட்டை போடவில்லை !
பகட்டா வாழ வில்லை !
குடிசையாயினும் கோபுரமாயினும் !
கூடி அமர்ந்தான் ஒன்றாக!
வேட்டி கட்டிய கவிஞனவன்!
வீரம் மிக்க தமிழன் அவன் !
படித்த நூல்கள் பல்லாயிரமிருப்பினும்,
பற்றிய நூல்கள் பத்து தான்!
குரளில் அறமெடுத்தான்! கம்பனில் கவி எடுத்தான்!
ஆண்டாளில் காதலெடுத்தான்! பட்டினத்தில் தத்துவம் எடுத்தான்!
வள்ளலாரின் கருணை எடுத்தான்! சேக்ஸ்பியரின் ஐயம் கலைந்தான்!
எளிமையாக சிரித்தான். எளிமையாக சிந்தித்தான்! எளிமையான
தவறு செய்தான் !
எளிமையாக மன்னிப்பும் கேட்டான்!.
எளிமையின் சிகரம் மட்டுமல்ல, இலக்கியங்களின் சங்கமம் அவன்!
மதத்தை வைத்து மனிதனை பிரிக்கவில்லை! மனிதத்தை வைத்து மதத்தை பார்த்தான். !
வள்ளுவன் சொன்னான் "அன்புடைமை" என்று!
இவன் சொன்னான் "அன்புக்கு நான் அடிமை "என்று !
சங்க காலம் காதலை தலைவன் தலைவி என்றது !
காதலை"பொது உடைமை "என்றான் இவன்!
பெண்ணுக்கு மட்டும் பூட்டிய கற்பணியை
பொதுவில் வைத்த புரட்சி இவன்!
கம்பன் காதலை சொன்னால் "மையோ! மரகதமோ"! என்பான்.
இவன் காதலை சொன்னால் "மானோ மயிலோ" என்பான்!
பாரதி" நிமிர்ந்த நன்னடை" என்றான்!
இவனோ "நிமிர்ந்து நில் !துணிந்து சொல் "என்றான்!
"வாரணமாயிரம் சூழ வலம் செய்து" என்ற ஆன்டாளின் கனவை
"கன்னிப் பெண்ணின் கனவெல்லாம் கண்ணன் தான்" என நிஜமாக்கினான்.
வாளின் வீரத்தை வரைந்தது புறநானூறு!
வாழ்வின் வீரத்தை வடித்தான் இவன்!
வேலின் வீரம் பேசியது பழைய மரபு !
வேதனை தாண்டும் வலிமையே இவன் இயல்பு!
இவன் தானே வளரவில்லை பல இலக்கியங்களை விழுங்கி வளர்ந்த ஆலமரம் இவன்.!
குறள் என்பது ஒரு மாத்திரை ஒரு குறள் போதும் ஒரு வாழ்க்கைக்கு என்றான்.!
பட்டினத்தாரை பற்றினான்
பணம் புகழ் பொய் என உணர்ந்தான்!
"ஆடிய ஆட்டமென்ன தேடிய செல்வம் என்ன" ?
"ஆயிரம் இருந்தும் அமைதி இல்லை" என்றான்.
கண்ணுக்குத் தெரியாத கருத்தை
கண்முன் கொண்டு வந்தான்!
சங்கத்தின் சாரமெடுத்து சந்தத்தில் கலந்து கொடுத்தான்!
கலையின் காதலன் அவன்! கவிதையின் காவலன் அவன்!
காலம் கடந்தவன்! காவியம் படைத்தவன்!
காலனையும் வென்றவன்!
இவன்!
கல்லையும் கனிய வைப்பான்!
கள்ளையும் கவியாய் வடிப்பான்!
சொல்லையும் சிலையாய் செதுக்குவான்!
சோகத்தை கூட சுகமாய் எழுதுவான்!
இவன்!
வாழ்ந்தபோது வரிகள் ஆனான்!
வீழ்ந்த போதும்
வெற்றியானான்!
வானம் போல விரிந்தவன்!
வாசல் தோறும் விருந்தானவன்!
அரசனுக்கும் ஆண்டிக்கும் பாடினான்!
அழகுக்கும் அறிவுக்கும் பாடினான்!
காதலுக்கும் கடவுளுக்கும் பாடினான்!
கள்ளுக்கும் கவிதைக்கும் பாடினான்!
தொட்டிலுக்கும் பாடினான்!
தூக்குக் கயிற்றுக்கும் பாடினான்!
பிறப்புக்கும் பாடினான்! இறப்புக்கும் பாடினான்!
சொல்லில் சுருக்கம் ! சொர்க்கத்தின் நெருக்கம்!
இவன் சொன்னதெல்லாம் மந்திரம்!
சொல்லாததும் தந்திரம்!
கண்ணை திறந்தான்! கருத்தை விதைத்தான்! மண்ணில் பிறந்தான்!
விண்ணை அளந்தான்!
அவன் வெறும் கவிஞன் அல்ல !
தமிழை காத்த காவலன்!
அவன் பாட்டை திறந்தால் தமிழ் கொட்டும்!
சொல்லில் தமிழ்! சொந்தத்தில் தமிழ்! சோகத்தில் தமிழ்! சொக்க வைக்கும் தமிழ்! சொல்ல சொல்ல தமிழ்! தேன் தமிழ்!
அவன் எழுத்தில் அமுது கொட்டும்!
அழகு கொட்டும் !
அறிவு கொட்டும்!
அவன் தொட்டதெல்லாம் தமிழ்!
தொடுத்ததெல்லாம் தமிழ்! தொகுத்ததெல்லாம் தமிழ் ! தொடர்ந்ததெல்லாம் தமிழ்!
முத்து முத்தாய் தமிழ்! சித்தம், சித்தாய் தமிழ்! சொல்லு சொல்லு தமிழ்!அள்ளு அள்ளு தமிழ்! சந்தம் தமிழ்! சங்கத்தமிழ்! சந்தனத்தமிழ் ! சாகா தமிழ்!
அவன் ஒரு வரி எழுதினால்
தமிழ் ஆசிரியருக்கும் பாடமாகும் !
தமிழ் மாணவனுக்கும் வேதமாகும்!
அவனே தமிழன்!
தமிழின் தலைமகன்!
கருத்தின் காவியம் படைத்த கலா ரசிகன்!
இசையை ரசித்தான்! இயற்கையை ரசித்தான்! இனிய தமிழை உயிராக ரசித்தான்!
மரபை மாற்றவில்லை! மாறாக!
மக்கள் மொழியில் மொழி பெயர்த்தான்!
'அர்த்தமுள்ள இந்து மதம்' எழுதிய இவன் தமிழ் எங்கே?
அர்த்தமே இல்லாததை ரசிக்கும் இன்றைய இளைய தலைமுறையின் தமிழ் எங்கே?
ஆனால் இங்கோ!
இவனே தொடக்கம்!
இவனே முடிவு!
மாற்றம் இவனது மானிட தத்துவம்!
காலம் இவனை வெல்லவில்லை!
இவன் தான் காலத்தை வென்றான்!
கவிஞன் இறந்தான்! கவிதை இறக்கவில்லை! மனிதன் இறந்தான்!
மனிதம் இறக்கவில்லை! உடல் மறைந்தது !
புகழ் மறையவில்லை!
வியக்கிறேன் அவன் திறமை கண்டு!
வியக்கிறேன் அவன் தெளிவு கண்டு!
ஆயிரம் நூல்கள் படித்தும் அகந்தை இல்லை!
அத்தனையும் எளிமையாய் சொன்ன அடக்கம்!
ஆம்! அதனால்தான் சொல்கிறேன்
அவன் வெறும் கவிஞன் அல்ல!
பாமரனும் விரும்பும் கலா ரசிகன்! காலத்தை வென்ற கண்ணதாசன்! என்று!
கண்ணதாசனை கற்போம்!
கன்னித் தமிழை வளர்ப்போம்!
நன்றி!
No comments:
Post a Comment