Thursday, May 14, 2026

பயணங்கள் முடிவதில்லை…பயணக் கட்டுரை(16)

 *லாஸ் வேகாஸ் பாலைவனத்தில் பூத்த ஒளிக் கனவு*

இயற்கையை இரசித்த நாங்கள், மனிதனின் படைப்பாற்றலை ருசித்துப் பார்க்கும் ஆவலுடன் புறப்பட்டோம். அமெரிக்காவின் நெவாடா (Nevada) மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா நகரம் லாஸ் வேகாஸ் (Las Vegas) நோக்கி சாலைப் பயணம்.

இந்தியாவில் இருந்து தினசரி அழைப்புகளில், அடுத்த பயணத் திட்டங்களை அறிந்துகொள்ளும் என் குடும்பத்தினர், “லாஸ் வேகாஸ் (Las Vegas)” என்ற பெயரைக் கேட்டதும் உடனடியாக ஒரு எதிர்வினையை வெளிப்படுத்தினர். “அங்கு எதற்கு? என்ன இருக்கிறது? சூதாட்டம் தானே!” என்ற கேள்விகள் சரமாரியாக வந்தன. பலருக்கும் லாஸ் வேகாஸ் (Las Vegas) பற்றிய புரிதல் இன்னும் அந்த அளவில்தான் இருக்கிறது.

*பாலைவனத்தின் நடுவே ஒளியை விதைத்து மனிதன் உருவாக்கிய அதிசய நகரம்* லாஸ் வேகாஸ் (Las Vegas).

*இவ்வளவு வெறிச்சோடிய, பாலைவன நிலத்தின் நடுவில் இப்படி ஒரு கனவு நகரத்தை உருவாக்க முடியுமா?* நகரத்தின் எல்லையைத் தொட்டவுடன், அதன் ஒளிமயமான வானம் கண்முன் விரிந்தபோது, அந்தக் கேள்வி தானாகவே பதிலாக மாறியது.

வெறும் நகரம் அல்ல. அது *மனித கற்பனையின் எல்லையைச் சோதித்துப் பார்க்கும் ஒரு பிரம்மாண்டமான மேடை.* நாம் மதுரையை *தூங்கா நகரம்* என்கிறோம். *அமெரிக்காவின் தூங்கா நகரம் லாஸ் வேகாஸ் (Las Vegas).* தூங்க மறுக்கும் நகரம்.

*உலகின் பல்வேறு நாடுகளையும் ஒரே தெருவில் கொண்டு வந்து நிறுத்திய மாய உலகம்.*

ஒளியால் உயிர் பெறும் தெரு, *தி ஸ்ட்ரிப் (The Strip)*

என்று உலகம் அறிந்த அந்த சாலையில் நடக்கும் போது, உண்மையிலேயே வேறொரு உலகுக்குள் நுழையும் உணர்வு ஏற்படுகிறது. *சூரியன் மறையத் தொடங்கும் நேரத்தில் கட்டிடங்கள் ஒளியால் உயிர் பெறுகின்றன.* ஒரு பக்கம் பாரிஸ் லாஸ் வேகாஸ் (Paris Las Vegas) இன் உயரமான ஈபிள் டவர் (Eiffel Tower) நகல். அதன் மேல் ஏறி நகரத்தைப் பார்க்கும் போது, *பிரான்ஸுக்குப் போகாவிட்டாலும் அதன் நிழலைத் தொட்டுவிட்ட மகிழ்ச்சி* மறுபக்கம் தி வெனிஷியன் ரிசார்ட் (The Venetian Resort). உள்ளே நுழைந்தவுடன் முழு மேற்கூரையும் நீல வானம் போல வரையப்பட்டிருக்கிறது. கீழே வெனிஸ் கால்வாய் போல நீர் ஓடுகிறது. கோண்டோலா (Gondola) படகில் அமர்ந்து செல்லும் போது, சில நொடிகளுக்கு *நான் அமெரிக்காவில் இருக்கிறேனா, இத்தாலியில் இருக்கிறேனா?* என்ற குழப்பம் வருகிறது.

அடுத்து லக்ஸர் ஹோட்டல் & கேசினோ . *பிரமிட் வடிவிலான கட்டிடம்,* அருகில் ஸ்பிங்க்ஸ் (Sphinx) சிலை. இரவில் அதன் மேலிருந்து விண்ணைத் துளைக்கும் ஒளிக்கற்றை *எகிப்தின் பண்டைய மர்மத்தை அமெரிக்கப் பாலைவனத்தில் நிறுத்தி வைக்கிறது.*

அடுத்து, நியூயார்க் ஹோட்டல் நியூயார்க் இன் நகரக் காட்சி, ரோலர் கோஸ்டர், பரபரப்பான தெருக்கள் ஒரே இடத்தில் பல உலகங்கள் கண்முன் திறக்கின்றன.

இந்தியாவில் ரிசார்ட் என்றால் ஓய்வுக்கான தங்கும் இடம். ஆனால் *இங்கு ரிசார்ட் என்பது ஒரு முழுமையான மினி சிட்டி (Mini City)!* ஒரே கூரையின் கீழ் சூதாட்ட விடுதி (Casino), நட்சத்திர ஹோட்டல்,செலிபிரிட்டி செஃப் உணவகங்கள் (celebrity chef restaurants), இசை அரங்கம், ஷாப்பிங் மால்,ஸ்பா அனைத்தும். ஒரு *ரிசார்ட்டுக்குள் நுழைந்தால் வெளியே வரத் தேவையே இல்லை. முழுமையான உலகம் உள்ளே உருவாக்கப்பட்டிருக்கிறது.*

*உலகம் முழுவதும் சுற்றிப் பார்க்க முடியாவிட்டாலும், சில நகரங்கள் உலகத்தையே நம்மிடம் கொண்டு வந்து நிறுத்திவிடுகின்றன.* என்று ஒரு நிம்மதி. 

என்னை மிகவும் கவர்ந்த அனுபவம் பெல்லாஜியோ நீரூற்றுகள் (Bellagio Fountains). இசைக்கு ஏற்ப ஆயிரக்கணக்கான நீரூற்றுகள் ஒருங்கிணைந்து உயர்ந்து, வளைந்து, விழும் அந்தக் காட்சி *ஒரு நீரூற்றுக்காட்சி அல்ல அது ஒரு திரைப்பட நடன நிகழ்ச்சி.* “விவா லாஸ் வேகாஸ் (Viva Las Vegas)” பாடலின் இசையோடு தண்ணீர் வானை நோக்கி எழும்பும் போது, ஒளி, இசை, நீர் மூன்றும் சேர்ந்து ஒரு கவிதையாக மாறுகின்றன. அந்தக் காட்சியைப் பார்க்கும் *ஒவ்வொரு முகத்திலும் பிரமிப்பும், மகிழ்ச்சியும் ஒன்றாகத் தெரிகின்றன.*

அருகிலேயே உள்ள பெல்லாஜியோ கன்சர்வேட்டரி & பாட்டானிக்கல் கார்டன்ஸ் மலர் தோட்டம் இன்னொரு அதிசயம். இயற்கையையே கலை வடிவில் மாற்றி, ஒவ்வொரு பருவத்துக்கும் புதிய அலங்காரத்துடன் வைக்கிறார்கள்.

மற்றொரு மிகப் பெரிய ஆச்சரியம், ஸூக்ஸ் (Zoox) ரோபோ டாக்சி. அமேசான் (Amazon) நிறுவனத்தின் சொந்த நிறுவனம் உருவாக்கிய *முழு டிரைவரில்லா கார். திசைத் திருப்பி இல்லை, டிரைவர் இல்லை. முழுக்க முழுக்க புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட வாகனம்.*

*லேன் கோடுகள் (lane lines), போக்குவரத்து சிக்னல்கள் (traffic signals), பாதசாரிகள் (pedestrians), அருகிலுள்ள வாகனங்கள் (nearby vehicles), வேக வரம்புகள் (speed limits) என எல்லாவற்றையும் துல்லியமாகக் கண்காணித்து, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்துச் சென்றது.*

*ஒரு மனிதன் கண்களால் பார்க்கும் வேலையை, AI + சென்சார்கள் (sensors) சேர்ந்து செய்கின்றன என்பதை நேரில் உணர்ந்தேன். *எதிர்காலம் ஏற்கனவே வந்துவிட்டது* என்பதை தெளிவாக உணர முடிகிறது.

பலருக்கு லாஸ் வேகாஸ் என்றால் தி ஸ்ட்ரிப் (The Strip) மட்டுமே. ஆனால் டவுன்டவுன் (Downtown) பகுதியைப் பார்க்கும் போதுதான் நகரத்தின் இன்னொரு முகம் தெரிய வருகிறது. ஃப்ரீமாண்ட் ஸ்ட்ரீட் எக்ஸ்பீரியன்ஸ் இல் பழைய வேகாஸ் (Vegas) இன்னும் உயிருடன் இருக்கிறது. *தெரு இசைக்கலைஞர்கள், பிரம்மாண்ட எல்இடி (LED) மேற்கூரை, சிரிப்பொலி, சுதந்திரமான இரவு வாழ்க்கை இவை நகரத்தின் பழைய ஆன்மாவை இன்னும் காத்து வருகின்றன.*

*தி ஸ்ட்ரிப் உலகை ஆச்சரியப்படுத்தும் வேகாஸ் (Vegas).*

*டவுன்டவுன் (Downtown) வேகாஸ் (Vegas) இன் உண்மையான இதயம்.*

சூதாட்ட விடுதிகளுக்குள் கடிகாரங்களும், ஜன்னல்களும் இல்லை. இரவு, பகல் தெரியாது. வெளிச்சம் எப்போதும் ஒரே மாதிரி. தொடர் இசை. *இது தற்செயல் அல்ல.* *மனித மனதை நுணுக்கமாகப் புரிந்து வடிவமைக்கப்பட்ட உளவியல்.* *நேரத்தை மறக்கச் செய்து, நீண்ட நேரம் தங்க வைப்பதே நோக்கம்.* இது ஒருபுறம் கவர்ந்தாலும், எச்சரிக்கையும் தேவைப்படுகிறது.

நகரத்தை விட்டு சற்று வெளியே சென்றபோது இயற்கையின் அற்புதமான முகங்கள் காத்திருந்தன.

ரெட் ராக் கேன்யான் தேசிய பாதுகாப்பு பகுதி (Red Rock Canyon National Conservation Area) சிவப்பு பாறைகள், அமைதி நிறைந்த பள்ளத்தாக்குகள், வானைத் தொடும் மலைச் சரிவுகள்.

வேலி ஆஃப் ஃபயர் ஸ்டேட் பார்க் (Valley of Fire State Park) செவ்வாய் கிரகத்தில் நடப்பது போன்ற பிரமிப்பான சிவப்பு மணல் பாறை உருவாக்கங்கள்.

இந்தப் பாலைவனமும் லாஸ் வேகாஸ் இன் அழகின் ஒரு முக்கிய பகுதி என்பதை உணரமுடிகிறது.

இது எனக்கு வெறும் பயண நினைவுகளை மட்டும் தரவில்லை.

*மனித கற்பனை எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை உணர்த்தியது.*

*ஒளி, இசை, தொழில்நுட்பம், ஆடம்பரம், இயற்கை இவை அனைத்தும் ஒன்றாகக் கலந்தால் எப்படி ஒரு கனவு நகரம் உருவாகும் என்பதை காட்டியது.*

தனியாகவோ, குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ எப்படிச்சென்றாலும் லாஸ் வேகாஸ் (Las Vegas) ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான கதையையும், . நினைவையும் பரிசளிக்கும். திரும்பி வர வேண்டும் என்ற ஆசையை மனதில் விதைக்கும்.

*இங்கு எந்த Resort Casino விற்குள்ளும் செல்ல நுழைவுக் கட்டணம் இல்லை என்பதும், எதிர்கால தொழில்நுட்பத்தை உணர்த்தும் Zoox தானியங்கி பயணமும் இலவசமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.*

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...