Saturday, May 16, 2026

சிலம்பொடு ஒரு பயணம்* (21) *அரங்கேற்ற காதை* *இசை வெள்ளத்தில் அழகிய நடனம்*

 ••••••••••••••••••••••••••••••••

*{21} சிலம்பொடு ஒரு பயணம்*


*அரங்கேற்ற காதை*


*இசை வெள்ளத்தில் அழகிய நடனம்*

••••••••••••••••••••••••••••••••


ஆட அரங்கம் தயார்.. ஆடப்போகும் நாயகியும் இன்னிசை முழக்கத்தோடு மேடை ஏறி, நடனமாடத் தயார்..

நடனத்தைக் கண்டு களிக்க அரசன் உள்ளிட்ட அவையோர் தயார்..

அடுத்து நடக்கப் போவதை பார்க்க நாமும் தயார் தானே! 


எல்லாம் ஆயத்த நிலையில் இருந்தவுடன், நடனத்திற்கான இசை ஒலிக்கத் துவங்கியது. 


*குழல் வழி நின்றது யாழே;* *யாழ் வழித் தண்ணுமை நின்றதுதகவே;* *தண்ணுமைப் பின் வழி நின்றது முழவே;* 

*முழவொடு கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை*


முதலில் குழல் இசைத்தது.

அதன் வழியில் யாழ் உடன் சேர்ந்து இசைத்தது. 

யாழ் வழியில் தண்ணுமை (மத்தளம்) இணைந்தது. 

தண்ணுமை வழியில் முழவும் சேர்ந்து கொண்டது.

முழவு வழியில் ஆமந்திரிகை (இடக்கை தோல் வாத்தியம்) இணைந்து ஒலித்தது.

அனைத்து இசைக் கருவிகளும் ஒத்திசையோடு நல்லிசை எழுப்பின. 

இசை வெள்ளம் பொங்கிப் பெருகியது 


*கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி*

*வந்த முறையின் வழிமுறை வழாமல்,*

*அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர்,* 


ஆமந்திரிகை இசைக்குப் பின்னர் இருமுறைக் கொட்டல் நிகழ்ந்தது. 

இப்படிப் பதினொரு சுழற்சி முழக்கிக் காட்டப்பட்டது. 

இறுதியில் அந்தரக்கொட்டு என்னும் தன்னிசை முழக்க நிறைவு நடந்தேறியது.


ஒரு தாளத்திற்கு இரண்டு பற்றாக பஞ்ச தாளத்திற்காக பத்தும், அதோடு தீர்மானம் ஒன்றும் ஆக பதினொரு பற்றிலே ஒரு கூத்தினை கூத்து நூல் கூறியுள்ள விதிமுறைப் படி தவறாது மாதவி ஆடினாள். அந்தரக் கொட்டு என்றும் முகம் என்றும் கூறப்படும் கூத்தை அவள் நிகழ்த்தினாள்.


*மீத்திறம் படாமை வக்காணம் வகுத்து,*

*பாற்பட நின்ற பாலைப்பண் மேல் நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து,*

*மூன்று அளந்து, ஒன்று கொட்டி,* *அதனை ஐந்து மண்டிலத்தால் கூடை போக்கி,*

*வந்த வாரம் வழி மயங்கிய பின்றை,*


மாதவிப் பொன் மயிலாள் எப்படி ஆடினாள் தெரியுமா!


கால அளவுக்கு மிஞ்சாமல் ஆடினாள் -

பல்வேறு கோணங்களில் சுழலும் வக்காணம் வகுத்து ஆடினாள். -

வகைவகையான பாலைப்பண் இசைக்கேற்ப ஆடினாள். -

நான்காம் நரம்பின் இசையை ஒதுக்கிவிட்டு ஆடினாள். -

ஒவ்வொன்றையும் மூன்று முறை ஆடினாள். -

ஒரு இசைக் கொட்டுக்கு ஐந்து வகையான கூடைப் பாவனைகளைக் காட்டி ஆடினாள். -

இப்படியாக நடன இலக்கணம் வழுவாது சிறப்பாக  ஆடினாள்.


மழலைக் கவி மோகன் ஐயா எழுதுகிறார்:


ஐயா,

முதல் வரிசையில் தங்களுடன் அமர்ந்து , சிரக்கம்பம் செய்தவாறு நான்

 "பெருந்தோள் மடந்தை தாது அவிழ் புரிகுழல் மாதவி" யின் நடனத்தை , ரசித்த விதத்தைப் பகிர்கிறேன்.


இசை முழக்கம்:

அரசர் அவர் குழாமோடு  ஆடலைக்காண வந்திருக்கின்றார் என்றால் வலப்புறம் நிற்கும் மாதவி சட்டென்றா ஆடத் துவங்குவாள்?

தாங்கள் விவரித்த இசைக்கருவிகளின் ஒருங்கிணைந்த இசை முழக்கம், அவள்ஆடப்போகும் நடனத்தின் சிறப்புக்கு, கட்டியம் (screen raiser) கூறுவது போல அமைந்தது. குழல், யாழ்  இவற்றின் 

இசை இனிதாக  ஒலித்து,மத்தளம்( தண்ணுமை), முழவு( பறை எனலாம்) ஆமந்திரிகை( இடக்கையால் வாசிக்கப்படும் தோற்கருவி)

 போன்ற தாள வாத்தியங்களோடு இணைந்து.  ஒருங்கிணைந்த 

இசை விருந்து அவையோருக்கு அளிக்கப்பட்டது.

இதில் கவனிக்க க் கூடிய சிறப்புகள்- 

"அந்தரம் இன்றி"- இடைவெளி இல்லாமல். பல்வேறு இசைக்கருவிகள் ஒருங்கணிந்து சுருதிபேதம்இன்றி , வாசித்த முறை. 

"மண்டிலம் "என்பது சுழற்சி.இது பதினோறு முறை நிகழ்ந்தது.

" வக்காணம்" - ஆலாபனை  அல்லது இராக விஸ்தாரம்" எனக் கொள்ளலாம்.

"அந்தரக்கொட்டு "என்பது ஆடல்மகள் வெவ்வேறு நடனங்களை ஆடுவதற்கு முன் ஆடும் கூத்து வகை எனக்கொள்ளலாம்.

இந்த இசைக்கருவிகளின் கலவையைப் பார்த்தால் குழல், யாழ் போன்ற மெல்லிசையில் தொடங்கி, தாள வாத்தியங்களின்  கம்பீர ஒலிகளோடு இணைந்து ,  உச்ச ஸ்தாயில் சென்று ( ஆங்கிலத்தில் crescendo) பின் படிப்படியாக , குறைந்து அந்தரக்கொட்டில் முடித்திருக்கலாம் எனத்தோன்றுகிறது.


தேசிக்கூத்து:

மாதவி பதமாக , நடன இலக்கணங்கள் வகுத்த அளவுகளை மீறாமல் ஆடிய கூத்து இது. தமிழ் பாரம்பரியத்தில் கூறப்படும் பல வகை கூத்துகளில் இது ஒன்று.

நாட்டுப்புற மக்களின் வாழ்வு மற்றும் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பழங்கலை. நாடக வடிவின் ஆரம்பமே கூத்துகள் எனலாம்.  கூத்தை சாதாரணமாக மதிப்பிடக் கூடாது. நாட்டியக் கலையை எளிய முறையில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் அரிய கலை இது.


“ஐந்து மண்டிலத்தால் கூடை போக்கி" என்பது ,மாதவி ஆடும்போது, ஐந்து வகையான மண்டில  நிலைகளை  அமைத்து, அதற்கு ஏற்றவாறு ஐந்து வகையான கூடை ஆடல் வகைகளைச் சுழன்று ஆடினாள். இது நாட்டிய நூல்களில் கூறப்பட்ட விதிமுறைகளின் படி, மிகவும் நேர்த்தியாக, பொன்னால் செய்யப்பட்ட கொடி சுழல்வது போலச் சுழன்று ஆடிய கலைத் திறனை விவரிக்கிறது.


"பாற்பட நின்ற பாலைப்பண் மேல் நான்கின் ஒரீஇய" 

இது ஏழு நரம்புகளைக் கொண்ட பேரியாழில் இருந்து, நான்கு நரம்புகளை நீக்கி, குறிப்பிட்ட பண்ணை இசைக்கும் முறையைக் குறிக்கிறது.

இங்கு இசைக்கப்படும் பண் ( இராகம்) , பாலைப்பண் ஆகும்

இது மகிழ்ச்சியைத் தரும் மங்கலப் பண் மற்றும் நண்பகலுக்குரிய பண் என அறியப்படுகிறது. தலைவனைப்பிரிந்த தலைவி பிரிவுத்துயரில் வாடுகையில  பாடும் பண்  , வழிப்பறிக் கொள்ளையரிடம் தப்பிக்க , பொருநர்கள் யாழில் இசைத்த பண் என்றும் காணப் படுகிறது!

இங்கு மங்கலம் போற்றுவதாகவே , கொள்ளலாம். துன்பியல் தொடங்க இன்னும்  நாம்சற்று  மேலே பயணிக்க வேண்டும்.


 "நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து"

அரங்கேற்றப்படும் கூத்து வகைகளில் நால்வகை உறுப்புகள் (பாடல், தாளம், பண்ணு, வாரம்) என்று கூறப்படுகிறது. அல்லது, மங்கலப் பாடலில் குறைபாடான உறுப்புகளை நீக்கி, குற்றமற்ற நான்கு உறுப்புகளைக் கொள்ளுதல் எனப் பொருள் கொள்ளலாம்.


"வந்த வாரம் வழி மயங்கிய பின்றை"

மாதவி ஆடும்போது, இசை மற்றும் நரம்புக்கருவிகளின் (யாழ், முழவு) முறையான வழியைப் பின்பற்றி, பாட்டுக்கும் கூத்துக்கும் இடையிலான மயக்கம் (ஒருங்கிணைப்பு) ஏற்பட்ட பிறகு என்று பொருள்படும்.


இப்படி மாதவி ஆடும்ஆடலை இன்றைய கவிஞர் பார்த்தால், 

"அவள் ஒரு நவரச நாடகம்

ஆடும் நடையே நாட்டியம்" எனப் போற்றி இருப்பார். நாமும்தானே!


*பயணம் தொடரும்*

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...