Friday, May 8, 2026

பயணங்கள் முடிவதில்லை…பயணக் கட்டுரை(15)

 


பயணங்கள் முடிவதில்லை…


இது உங்களுள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனில், அதற்கு அந்த இயற்கையின் அழகோ அதிசயமோ காரணமல்ல, அதன் மகத்துவத்தை உரிய முறையில் சொல்ல என்னால் இயலவில்லை என்பதே காரணம்


பாறைகள் பேசும் இடம் -Zion National Park

பயணம் என்பது இலக்கை மட்டும் நோக்கி செல்வதல்ல, வாழ்க்கையைக் கண்டுகொள்வதும் தான். 

Las Vegas செல்ல வேண்டும். ஆனால் எந்த வழியில் செல்வது என்ற கேள்வி எழுந்தது. Grand Canyon போகலாமா, Zion National Park போகலாமா என்று விவாதம் நடந்தது. ஜனநாயகம் வென்றது, பெரும்பான்மை குரல், Zion-க்கே சாய்ந்தது. காரணம், பாறைகளை தூரத்தில் இருந்து பார்ப்பதைவிட, அவற்றுக்கு நடுவே நடந்து, தொட்டு, உணர்ந்து அனுபவிப்பது அதுவே உண்மையான பயணம்.


சாலையே ஒரு கவிதை

புதிய நாள், புதிய உற்சாகம். வாகனம் புறப்பட்டது. பாதை சாதாரணமானதல்ல, Utah மாநிலத்தின் நெஞ்சை கிழிக்கும் நிலப்பரப்பு வழியாக செல்லும் அந்த சாலை, வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒன்று. ஒவ்வொரு திருப்பத்திலும் ஒரு புதிய உலகம் திறக்கிறது. மலைகளும் பள்ளத்தாக்குகளும் அலை அலையாக கடந்து வருகிறது. Zion-இல் நுழைந்தவுடன், காட்சி முற்றிலும் மாறுகிறது. 

சிவப்பு. ஆம், கண்ணை மூடினாலும் தெரியும் அந்த சிவப்பு. கோடிக்கணக்கான ஆண்டுகளாக காற்றும் நீரும் செதுக்கிய சிவப்பு மணற்கல் மலைகள். இருபுறமும் 2,000 முதல் 3,000 அடி உயரத்தில் வானை முட்டும் மலைகள். நடுவே அமைதியாக, கலங்காமல் ஓடும் Virgin River. அந்தக் காட்சியைப் பார்த்தபோது, வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை, மனசு ஆஹா! என்றது.


Virgin River-இன் வழியே… (பார்த்தது மட்டுமே, பயணப்படவில்லை)

Zion-இன் உண்மையான ஆத்மா இருப்பது அதன் பள்ளத்தாக்கில். Virgin River ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பாறைகளை அரித்து உருவாக்கிய அந்த பள்ளம், கண்களால் பார்க்க முடியாத ஆழம். நதியின் நடுவே நடந்து செல்லும்போது, இருபுறமும் நேராக எழும்பும் மலைச்சுவர்கள் வானத்தை ஒரு கீற்றாக காட்டுகின்றன. சில இடங்களில் நீர் இடுப்பு வரை வருகிறது, ( நான் இந்த விளையாட்டில் இல்லை 🤩) கால்கள் நனைகின்றன, மனசு விழிப்படைகிறது, உடல் இப்போது இருக்கும் இந்த கணத்தில் மட்டுமே இருக்கிறது.

அந்த நடையில் ஒரு விசித்திரமான அமைதி உண்டு. நகர வாழ்க்கையின் சத்தம், அவசரம், தொலைபேசி அறிவிப்புகள் எல்லாம் மறைந்துபோகின்றன. மலைகள் பேசவில்லை, ஆனால் அவற்றின் மவுனம் ஒரு தெளிவான செய்தி சொன்னது. அவசரமில்லை… வாழ்க்கையை ரசிக்கவும்.


Angels Landing தைரியமுள்ளவர்களுக்கு

Zion-இல் ஒரு சவால் காத்திருக்கிறது. Angels Landing. உலகின் மிகவும் துணிச்சலான hiking trails-இல் ஒன்று என்று புகழ் பெற்றது. இப்போது இதற்கு முன்கூட்டியே permit வாங்க வேண்டும். ஏன் என்று சென்றால் தான்  புரியும் ( நாங்கள் யாருமே செல்லவில்லை 😂) கடைசிப் பகுதியில் இருபுறமும் ஆழமான பள்ளம், நடுவே குறுகிய பாதை. மன உறுதியும் உடல் சமநிலையும் இல்லாமல் அந்த இடம் உங்களை மன்னிக்காது. ஆனால் மேலே சென்று நிற்கும்போது தெரியும் அந்த உச்சியிலிருந்து பார்க்கும் காட்சி, ஒவ்வொரு அஞ்சிய நிமிடத்திற்கும் பரிசு தருகிறதாம்.!!!


இயற்கை ஆலயம்

பூங்காவுக்குள் தனியார் வாகனங்கள் எல்லா இடங்களுக்கும் போக முடியாது. Shuttle bus மட்டுமே நம்மை உள்ளே அழைத்துச் செல்கிறது குறிப்பாக Peak Season-இல். இது ஒரு புத்திசாலித்தனமான விதி. இயற்கையை பாதுகாக்க, மனிதன் கொஞ்சம் வசதியை தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது. அந்த அனுமதி கொண்டே நாம் உள்ளே செல்கிறோம்.

Zion-இல் நடந்த அந்த மணி நேரங்கள் மனசில் பதிந்தது வேறு எதுவுமில்லை.  இயற்கையின் பிரமாண்டம், பிரமாண்டம், பிரமாண்டம் மட்டுமே. ஆனால் ஒரு நிம்மதி, விடுதலை. 


பயணம் தொடர்ந்தது Las Vegas நோக்கி. ஒளி மின்னும் நகரம் காத்திருந்தது. ஆனால் Zion கொடுத்த அந்த அமைதி, இன்னும் மனசில் தங்கியிருந்தது.

Grand Canyon-ஐ தூரத்திலிருந்து பார்த்திருந்தால் கண் நிறைந்திருக்கும். Zion-ல் நடந்ததால் நெஞ்சு நிறைந்தது. அதுவே வித்தியாசம்.

பார்ப்பது பயணமில்லை, உணர்வதே பயணம்.

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...