*ஞாயிறும் திங்களும்*
வாரம் ஓடும் கடிகார முட்களுக்கு
நேரம் தரும் வார விடுமுறை !
அலாரம் விடுத்து விழிக்கும் விடுப்பு!
அவசரம் விடுத்த சுவாசத்தின் துடிப்பு!
வேளை தவறிய வேளையில் சிற்றுண்டி!
வேலை இல்லாமல் உணவு இடைவேளை!
நேரம் ஒரு பறவையெனில்,
நினைவுகள் அதன் இறகுகள் —
பிடிக்க நினைத்தால் பறந்து விடும்
பறக்க நினைத்தால் மறைந்து விடும்!
காலை ஒளி கண்களில் விலக,
மாலை நிழல் மடியில விழும்!
புத்தக குழந்தை தோளில் தவழ
பழைய பாடல்களால் தூக்கம் தழுவும்!
கனவு தலையணையில் ஞாயிறு தூங்கும்!
அக்னி நட்சத்திரத்தில் திங்கள் பிறக்கும் !
ஞாயிறு நினைவுகள் நெஞ்சில் அகன்று,
திங்கள் நடைகள் மீண்டும் தொடங்கும்!
போக்குவரத்து நெரிசல் வழியை மறிக்கும்!
வியர்வை துளியால் உடம்பு குளிக்கும்!
ஒலிபெருக்கி சத்தம் காதை குடையும்!
ஒளியின் வெப்பம் குடையை தேடும்!
பணிச்சுமை தோளில்- உணவோ பையில்!
அலுவலுக மூச்சில் அவலும் பொரியும்!
மின்னஞ்சல் மழையில் கணிப்பொறி நனையும்!
தோழமை மேகம் நெஞ்சை குளிர்க்கும்!
No comments:
Post a Comment