•••••••••••••••••••••••••••••••
*{19} சிலம்பொடு ஒரு பயணம்*
*அரங்கேற்ற காதை*
*ஆடல் அரங்கம்*
•••••••••••••••••••••••••••••••
அன்பு நிறை வாசகர்களே!
அரங்கேற்று காதை துவங்கிய பதிவில்
அகத்திய முனியின் சாபத்திற்க்காளான
ஊர்வசி சயந்தன் பற்றி பகிர்ந்தது
நினைவிருக்கும்.
ஊர்வசி மாதவியாக பிறந்தாள்.
சயந்தன் (தேவேந்திரன் மகன்)
வேணுவாக, அதாவது மூங்கில் ஆகப் பிறந்தான்.
இளங்கோ அடிகள் மாதவியின் அரங்கேற்றக் காதையில்
முக்கிய நிகழ்வாக ஆடரங்கத்தைப் பற்றி விரிவாக விளக்குகிறார்.
மாதவியாய் பிறந்த ஊர்வசியின்
நடன அரங்கேற்றத்திற்கு
அரங்கம் அமைக்க மூங்கிலே பிரதானமாகிறது.
அதாவது இந்திரன் மகனே மூங்கிலாய் பிறந்து நடன அரங்கத்தின் கட்டமைப்புக்கு உதவுகிறான்.
சாபம் பெற்ற பிறகும் அவளைப் பிரியவில்லை அவன் என்பது போன்ற சித்தரிப்பு இது.
*மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு*
அதாவது, முதற்கண்
நாட்டிய மேடை அமைப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்ட நிலத்தை அளந்து வகுத்தனர்.
பின்னர், புனிதமான மலைகளில் (சாபமிட்ட அகத்தியர் உறைந்த பொதிய மலை) வளர்ந்த நீண்ட மூங்கில் குச்சிகள் கொணர்ந்து,
மூங்கிலின் கணுக்களுக்கு இடையே ஒரு சாண் அளவு இடைவெளி கொண்ட சரியான மூங்கிலைத் தேர்வு செய்து, நாட்டிய நூல் சொல்லும் மரபுப் படி, அந்த மூங்கில்களைக் கொண்டு மேடையை அளந்தனர்.
இதற்கு மேல் தான் நீள, அகல, உயர விவரங்களை தெளிவாக விளக்குகிறார் ஆசிரியர்.
*நூல் நெறி மரபின் அரங்கம் அளக்கும்கோல் அளவு இருபத்து நால் விரல் ஆக,*
*எழு கோல் அகலத்து, எண் கோல் நீளத்து,ஒரு கோல் உயரத்து, உறுப்பினது ஆகி,*
*உத்தரப் பலகையோடு அரங்கின் பலகைவைத்த இடை நிலம் நால் கோல் ஆக,*
*ஏற்ற வாயில் இரண்டுடன் பொலிய,*
எவ்வளவு நுணுக்கமாக மேடையின் அளவினை விளக்குகிறார் பாருங்கள்.
பொதிய மலையிலிருந்து கொண்டு வரப்பட்ட மூங்கிலை குறிப்பிட்ட அளவில் வெட்டினர். அதாவது, நன்கு வளர்ந்த சராசரி மனிதனின் கை பெருவிரலில் இருபத்தி நான்கு வரும்படி அளந்து ஒரு கோல் நறுக்கினர்.
ஏழு கோல் அகலமும், எட்டுக்கோல் நீளமும், ஒரு கோல் உயரமுமாக நடன அரங்கம் அமைக்கப்பட்டது.
மேலும் கூறுகிறார்:
*பூதரை எழுதி, மேல் நிலை வைத்து;*
*தூண் நிழல் புறப்பட, மாண் விளக்கு எடுத்து; ஆங்கு,*
*ஒரு முக எழினியும், பொரு முக எழினியும்,*
*கரந்து வரல் எழினியும், புரிந்துடன் வகுத்து -*
அதாவது, நாற்புறமும் தூண்களை நிறுத்தி, அவற்றின் மேல் உத்தரப் பலகைகளைப் பொருத்தினராம். உத்தரப் பலகைகளுக்கும் நடனமேடைக்கும் இடையே நான்கு கோல் அகல இடைவெளி இருந்தது என்பது அறிக. அரங்கத்தின் உள்ளே போவதற்கும் வருவதற்குமாக இரண்டு வாயில்கள் அமைக்கப் பட்டனவாம். இக்கால என்ட்ரி (entry) மற்றும் எக்ஸிட் (exit) வாயில்களைப் போல.
அரங்கின்
மேல்நிலை மாடத்தில், யாவரும் தொழுது போற்றுமாறு, தேவர் உருவங்கள் எழுதப் பட்டிருந்தவாம். தூண்களின் நிழல் அரங்கில் விழாத வண்ணம் விளக்குகள் வைக்கப் பட்டிருந்தனவாம். (இது எவ்வளவு முக்கியமான, மிக நுணுக்கமான விடயம் பாருங்கள்)
ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்துக்கு நகரும் திரையாகிய *ஒருமுக எழினி*, இரண்டு பக்கங்களிலிருந்தும் நகர்ந்து வந்து நடுவில் பொருந்துமாறு அமைக்கப்பட்டிருந்த திரையாகிய *பொருமுக எழினி*, மேலே மறைந்திருந்து திடீரென இறங்கி மூடும் திரையாகிய *கரந்துவரல் எழினி* ஆகியவை சுருண்டு நின்று அழகு சேர்த்தன. நடன அரங்கில் அமைக்கப்பட்ட திரைகளுக்கு எவ்வளவு விளக்கம் பாருங்கள்.
*ஓவிய விதானத்து, உரை பெறு நித்திலத்து*
*மாலைத் தாமம் வளையுடன் நாற்றி;*
*விருந்துபடக் கிடந்த அரும் தொழில் அரங்கத்து*
இதனால் அவர் கூறுவது: மேல் திரையில் (விதானத்தில்) அழகிய வண்ண ஓவியம் தீட்டப் பட்டிருந்தது. முத்து மாலைகள் வளைந்திருக்கும் படித் அழகுற தொங்க விடப் பட்டிருந்தன. புதுமையான வேலைப்பாடுகள் ஆடரங்கினுள் அமைக்கப் பட்டிருந்தன.
மொத்தத்தில் மாதவி அரங்கேறும் மேடை அழகும், பொலிவும், அருமையும், அரிய கலைநயமும் வாய்ந்ததாக அமைந்திருந்தது. பார்ப்போரின் கண்களைக் கவர்ந்ததோடு கருத்தையும் நிறைத்தது.
இவ்வளவு நுணுக்கமான விவரங்களை எழுதி முடிக்கையில் நமக்கே மலைப்பாக இருக்கிறது. கலைகளில் எவ்வளவு சிறந்து விளங்கி இருக்கிறது நமது தமிழ்ச் சமூகம். நம் தலைகள் பெருமையோடு தானாக நிமிர்ந்து நிற்கின்றன.
(அரங்கத்தின் சிறப்பை தன் பார்வையில் விளக்க இதோ வருகிறார் நம் மழலைக் கவி மோகன் ஐயா):
ஆடல் சிறப்புற அமைய அடிவாரமாக அமையும் ஆசான், குழலோன் எனப் பல சிறப்புகளை அனுபவித்தோம்.
ஆடும் அரங்கு?
இக்காலத்தவருக்குப் புரியும்படி
கூற விழைகிறேன்.
*களம் அமை* (ஆங்கிலத்தில் set the stage) என்பார்கள்.
ஆடும் களம், என்பது, அமைப்பது பற்றி மட்டும்அல்ல.
இந்தக் களம் காப்பியத்தில் புதிய திருப்பம் ஒன்றை ,
அமர்க்களமாக ஏற்படுத்தப்போகும் , ஓர் ஆண்மகனின் வாழ்வை இரண்டு படுத்தும் இரண்டாம் கதாநாயகியை அரங்கேற்றும் களம்.
சரி .
களம் எப்படிப் பட்டது ?
மட்டைப்பந்து விளையாட்டில் வல்லுனர்கள் ஆட்டம் ஆரம்பிக்கும் முன்பு களத்தை ஆய்வது போல நீர் விவரமாக களத்தை ஆய்ந்து விட்டீர், எனக்கு ஒரு கணு மூங்கில் அளவு இடம் விடாமல்!
தங்களின் ஆட்ட விவரணம் மிகச்சிறப்பு.
இருப்பினும் நானும் முயற்சிக்கிறேன்.
முதலில் அரங்க அளவுகள் எடுக்க உதவும் மூங்கில்கள். " புண்ணிய நெடுவரைப்போகிய நெடுங்கழை" கள் அவை.
என்ன பொருத்தம்!
தமிழ் மகள் மாதவி ஆடும் அரங்கம் அளவிட, தமிழ்முனி அகத்தியர் உறையும்
பொதியமலை மூங்கில்கள்!
மேடை நீள , அகல, உயர அளவுகள் யாவும் " கோல் " அடிப்படையில்.
பொதுவாக 1 கோல் என்பது 24 அங்குலம். (2 அடி)
அரங்க மேடை நீள அகல உயர அளவுகள்
நீளம்- 8 கோல் அகலம் 7 கோல் உயரம்1 கோல்
எனவே 16x14x2 அடிகள்.
மேல் கூரைக்கும் மேடைக்கும் உள்ள இடைவெளி 8 அடி.
அடுத்து திரைச்சீலைகள்:
மூன்று வித திரைகளை விவரித்தீர்கள்.
மேடையை முழுவதும் மூடும் திரை, பக்க வாட்டில் நகரும் பின்புலம், மேலிருந்து கீழ் இறங்கும் பின்புலம் என மூன்று வகை.
ஒரே பின்புலம் இருந்தால் சலிப்பை உண்டாக்கும் என்பதால் பல பின்புலங்களை, காண வழி செய்யும் திரைகள்.
இரண்டு வாயில்கள் அரங்கத்துக்கு, ஒரே வாயில் வெளியே போவதற்கும், உள்ளே நுழைவதற்கும் என்றில்லாமல். (தீயணைக்கும் படையின் உத்தரவு போலும்!)
மேல் விதானத்தில் பல சித்திரங்கள் வரையப் பட்டிருக்கும். தொங்கும் முத்து மாலைகள் பல அழகு வேலைப்பாடுகள் எனத் தற்கால நவீன திரையரங்கை நினைவூட்டும் அரங்கம்.
நிழல் விழாத ஒளிஅமைப்பு என்பது அக்கால தொழில் நுட்ப அறிவின் உச்சகட்டம், அதுவும், பி. சி. ஶ்ரீராம் போன்றவர்கள், பிறப்பதற்கு பல நூறாண்டுகள் முன்பே!🙏🙏
மிகச்சிறந்த ஆசானால் பயிற்றுவிக்கப் பட்ட அழகு சுந்தரி மாதவியின் அரங்கேற்றம், இக்கால ஆடல் அரங்குகளை விட பல மடங்கு
சிறந்த அமைப்புகளை , கொண்ட அரங்கம் என முன்னோட்டங்களைக் கண்டோம்.
அரசர் அழைப்பில் வந்துள்ளோம். முன் வரிசையில் அமர்ந்து இனி வரும் நிகழ்வுகளை இரசிக்க , தயார் ஆவோம்.
*பயணம் தொடரும்*
No comments:
Post a Comment