*{20} சிலம்பொடு ஒரு பயணம்*
*அரங்கேற்ற காதை*
*தலைக்கோல் சிறப்பு*
ஆடரங்கம் தயாராய் இருக்கிறது.
அரசன் முதல் அனைவரும் ஆட அரங்கில் வந்து அமர்ந்தும் விட்டனர்.
ஆட்டம் துவங்கும் முன்,
முக்கிய பொருள் பற்றி சிலம்பு கூறுகிறது..
அப்பொருள் யாது..!
அதன் அருமை பெருமைகள் என்னென்ன..!! பார்த்திடலாமா!
*பேர் இசை மன்னர் பெயர் புறத்து எடுத்த சீர் இயல் வெண்குடைக் காம்பு நனிகொண்டு கண் இடை நவமணி ஒழுக்கி*
புகழ்பெற்ற பற்பல பேரரசர்களுடன் போரிட்டு அவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்து, அவர்களின் வெண் கொற்றக் கொடையின் பிடிகளில் உள்ள கணுக்களில் எல்லாம் நவமணிகளை பதித்தனராம். கணுக்களுக்கு இடையில் பொன் தகடுகளால் பூண் அமைத்தனராம்.
*வெண்குடை மன்னவன் கோவில் இந்திர சிறுவன் சயந்தன் ஆக என வந்தனை செய்து வழிபடு தலைக்கோல் புண்ணிய நன்னீர் போர்க் குடத்து ஏத்தி... மாலை அணிந்து.... பொலம்பூண் ஓடை*
நாடாளும் மன்னன் வெண்கொடை வீற்றிருக்கும் அரண்மனையில் இந்திரன் மகன் சயந்தனாக (இளங்கோவடிகளே சாபம் பெற்ற சயந்தனை குறிப்பிடுகிறார் பாருங்கள்) விளங்குக என தலைக்கோலுக்கு வந்தனையும் வழிபாடுகளும் செய்தனராம். புண்ணிய நதிகளில் இருந்து பொற் குடங்களில் எடுத்து வந்த புனித நீரால் நீராட்டினராம். பின்னர் அதற்கு நறுமண மலர் மாலைகள் சூட்டி, ஒரு நல்ல நாளில் பொற்பூணும் அழகிய நெற்றிப் பட்டமும் சூட்டப்பட்ட பட்டத்து யானையின் துதிக்கையில் தந்து வாழ்த்தொலி முழங்கினராம்
பின்னர்,
*அரைசொடு பட்ட ஐம்பெருங்குழுவும் தேர் வலம் செய்து கவிகைக் கொடுப்ப ஊர்வலம் செய்து புகுந்து முன்வைத்து ஆங்கு*
பற்பல வாத்தியங்கள் பண்ணிசைக்கும் முரசறையும் வீதிகளில் அரசரும் அவருக்குத் துணையாக ஐம்பெருங்குழுவினரும் உடன் வர தேர்வலம் வரும் வீதிகளில் ஊர்வலம்
வந்து, அரங்க வாயிலில் பெரும் கவிஞன் கையில் தர கவிஞன் அத் தலைக்கோலை ஆடரங்கில் கூடியுள்ள அவையோருக்கு முன்பாக வைத்தானாம்.
அடுத்ததாக
*குயிலுவ மக்கள் நெறிப்பட நிற்ப வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து வலத்தூண் சேர்தல்*
வாத்தியங்கள் இசைப்போர் வரிசையாய் நிற்க, மாதவி உள்ளே வந்து வலது காலை வைத்து ஏறி அரங்கத்தில் வலது தூண் பக்கம் வந்து நின்றாளாம். இதுதான் மரபு. (இக்காலத்தில் திரைப்படங்கள் நாடகங்கள் ஆகியவற்றில் வலது பக்கமே மக்கள் கவனம் அதிகம் செல்லும் என்பதால் அநேக கலைஞர்கள் அப்பக்கம் வந்து நிற்பதையே விரும்புவார்களாம். இதனை சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்தவர்கள் அறிவார்கள்)
*இடத்தூண் சேர்ந்த தொழில்நெறி இயற்கைத் தோரிய மகளிரும் சீர் இயல் பொலிய*
வாத்தியம் இசைக்கும் பெண்களும் முறைப்படி
இடத் தூண் அருகே வந்து வரிசையாக நின்றனாம்
*வாரம் இரண்டும் வரிசையில் பாட பாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும் கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்*
அப்போது நல்லன சிறக்க தீயன அகல ஓர் ஒற்று வாரம் ஈரொற்று வாரம் எனும் துதிப் பாடல்களை முறையாக பாடினராம். பாடும் பொழுது பக்கவாத்திய இசைக்கருவிகள் எல்லாம் பாடலோடு சேர்ந்து இன்னிசை மீட்டி அவ்வரங்கை நிறைத்தனவாம்.
நம் கண் முன்னே அக்காட்சியும் தெரிகிறது - செவிகளில் அப்பாடல்களும் இன்னிசையும் கேட்கிறது அல்லவா!
இப்போது மழலை கவி மோகன் ஐயா:
இவ்வாரப் பயணத்தில், தலைக்கோல் அமைதி, மாதவி அரங்கு ஏறல் என்ற இரண்டு நிகழ்வுகளை என் பார்வையில் காண அழைப்பு விடுக்கிறேன்.
தலைக்கோல் அமைதி:
எதிரி மன்னர்களை வென்று அவர்களின் வெண்கொற்றக் குடையின் காம்பினை, சிதைவில்லாமல் எடுத்து - "சீர் இயல் வெண்குடைக் காம்பு", அதன் கணுக்களை, தூய்மை செய்து நவமணிகளால் அலங்கரித்து, கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதிகளை "சாம்பூநதம்" எனும் பொன்னால் பொற்கொல்லர் அலங்கரிப்பர்.
அது என்ன பொன் ஐயா?
நமக்கு 18 காரட், 24 காரட் போன்ற வகைகளை அதுவும் சேதாரத்தோடு அறிவோம்.
இந்த சாம்புநதம்-நாவல் மரத்தின் சாறு ஒழுகிப் பெருகும் இடத்தில் கிடைக்கும் பொன் என விவரிக்கப்படுகிறது.
தமிழ் இலக்கியத்தில். இது சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம் ஆகியவற்றுடன் இதுவும் உயர்வகைப் பொன்னாக, கருதப்படுகிறது.
பெரும்பாலும் பொற்கொல்லர்கள் அலங்கார வேலையே செய்வர்; ஆனால் பொற் கொல்லர்களில் ஒருவன், கதாநாயகனின் "கொல்லர்"- கொல்பவர்( என் பார்வையில் ... தமிழில் அல்ல!)
இந்த தலைக்கோலை இந்திரன் மகன் சயந்தனாக கருதி வழிபாடுகள் செய்வர். இதுவே தலைக்கோல் .
இதனை, தாங்கள் விவரித்தபடி , சிறப்பான ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்டு, கவிஞனும் அரங்கத்தில் சேர்த்துவிட்டான்.
எப்படிப்பட்ட ஊர்வலம்!
அரசர் ,அவர்கூட ஐந்து முக்கிய துறைகளில் நிர்வாகம் செலுத்தும் ஐவர் குழாம் என உயர்மட்டக்குழு மரியாதை செலுத்திய தலைக்கோல்.
தற்காலத்தில், உலக மட்டையடி
பந்தய மைதானத்தில், கோப்பையை யாவரும் காணும்படி வைப்பது போல ஒரு நிகழ்வு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்!
மாதவிக்கு சிறப்பு செய்ய , காத்திருக்கிறது. என்ன தகைமை வாய்ந்த சிறப்பு!
வெறுமனே சால்வை போர்த்தி,
புகைப்படம் எடுக்கும் சிறப்பு அல்ல!
மாதவி அரங்கு ஏறல்:
தற்காலத் திரைப் படங்களில் முக்கிய நாயகி வருகைக்கு , கட்டியம் கூறுவதை போல பல வாத்தியங்கள் முழங்குமே, அது போல் ஒருங்கிணைந்த
வாத்திய குழுவின் வரவேற்பு. முரசு, யாழ், முழவு எனப் பலப்பல இசைக் கருவிகள் மூலம் சப்த ஸ்வரங்களின் அஞ்சலி நாட்டியாஞ்சலி நங்கைக்கு, அதுவும் பேரரசர் முன்.
மாதவி மேடையின் மேல் வலது காலை வைத்து, வலது பக்கமாக ஏறினாளாம். இது ஒரு மங்கலத்தின் அறிகுறி. ஆட வல்லாள் மேடை முழுவதும் மட்டும் அல்ல காப்பியத்திலும்
வலம் வரப் போகிறாளே!
" தோரிய" மகளிர் பின்பாட்டு பாடுபவர்கள்;" வாரம்" எனும் தெய்வப்பாடல்கள இசைப்பவர். ( தே வாரம்- தெய்வங்களைப் போற்றும் பாடல்).இவர்கள் ஓரொற்று வாரம், ஈரொற்றுவாரம் ஆகிய பாடல் முறைகளை, வாத்திய கோஷ்டி இசை கூட்ட சபையோரை, தெய்வப்பரவசத்தில் ஆழ்த்தினர்.
அகில இந்திய வானொலியின் அக்கால கோஷ்டி கானம் நினைவுக்கு வருகிறது.
ஓரொற்று வாரம்: ஒரு ஒற்று (மெய் எழுத்து) தொடர்ந்து வரும்படியாக அமைந்த பாடல் வகை.
ஈரொற்று வாரம்: இரண்டு ஒற்றுகள் (மெய் எழுத்துக்கள்) தொடர்ந்து வரும்படியாக அமைந்த பாடல் வகை.
மாதவி மங்கை ஆடத் தயாராக விட்டாள். எதிர்பார்ப்பில் நம் கால்களும் தாளமிடத் தொடங்கி விட்டன!
*பயணம் தொடரும்*
No comments:
Post a Comment