Friday, February 27, 2026

டெக்சாஸ் சாலைப் பயணம்-பயணக் கட்டுரை(6)

 பயணங்கள் முடிவதில்லை…

*சோதனைகளும், சொதல்பல்களும் தான்…*


*இந்த பயணக் குறிப்புகள் தீர்ப்புகள் அல்ல; அனுபவங்களின் தடங்கள் மட்டும். நான் கண்ட காட்சிகள், நான் கணக்கிட்ட எண்ணங்கள், நான் உணர்ந்த மாற்றங்கள் அவற்றின் பதிவு. பார்வைகள் பலவாக இருக்கலாம்; என் பார்வை இவ்விதம்.*


*டெக்சாஸ் சாலைப் பயணம்*


Dallas, Texas இலிருந்து மாநிலத் தலைநகர் Austin சென்று, அங்கிருந்து San Antonio, பின்னர் Houston வரை சாலை மார்க்கமாகச் சென்று வரலாம் என்ற திட்டத்துடன் புறப்பட்டோம். மொத்தத் தூரம் சுமார் 480 மைல் கிட்டத்தட்ட 780 கிலோமீட்டர். ஏறத்தாழ 7 மணி நேர ஓட்டத்தில் கடந்து விட முடிகிறது.


நாம் சென்னையிலிருந்து பெங்களூரு 335 கிலோமீட்டர் செல்லவே 6 மணி நேரம் எடுக்கிறது என்பதை நினைத்தால், இங்குள்ள சாலை வசதியை புரிந்துகொள்ளலாம்.


இங்குள்ள பெரும்பாலான நெடுஞ்சாலைகள் நான்கு வழித்தடங்களுடன் அமைந்துள்ளன. நம் நாட்டிலிருந்து மாறுபட்டு, இங்கு *ஓட்டுனர் இருக்கை இடப்புறத்திலும், வாகனங்கள் சாலையின் வலப்புறமாகவும் இயக்கப்படுகின்றன.* சாலையின் வலதுபுறம் உள்ள இரண்டு வழித்தடங்கள் கார்களுக்கானவை. மூன்றாவது வழித்தடத்தில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி. நான்காவது வழித்தடம் மஞ்சள் கோடு இழுத்து தனியாகக் காட்டப்பட்டுள்ளது; அது அவசர சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.


அந்த மஞ்சள் கோட்டிற்கு அடுத்ததாக *”Rumble Strip* எனப்படும் சிறிய உயர்வுகள் அல்லது ஆழ்த்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனம் தவறுதலாக அந்த கோட்டைத் தாண்டினால் டயர்கள் அதிர்வை உண்டாக்கும், ஓசை கேட்கும், *ஓட்டுனர் தன் பாதையிலிருந்து விலகியதை உணர முடியும்.*


முழு நெடுஞ்சாலையிலும் குறுக்கு சாலை இல்லை. திடீரென யாராவது கடந்து விடுவார்களோ என்ற அச்சமின்றி செல்லலாம்.


Interstate, U.S. Highway, Turnpike


அமெரிக்காவில் “Interstate”, “U.S. Highway”, “Turnpike” என்ற பெயர்கள் காணப்படுகின்றன. இவை ஒரே மாதிரியானவை அல்ல.


Interstate Highway —உதாரணமாக I-10, I-35. 

1950-களில் தேசிய பாதுகாப்பு மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான வேகமான போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்டவை. முழுமையான கட்டுப்படுத்தப்பட்ட நுழைவுடன் அமைக்கப்பட்டுள்ளன. சிக்னல்கள் இல்லை. குறுக்கு சாலைகள் இல்லை. ரேம்ப் வழியே மட்டுமே நுழைவு மற்றும் வெளியேற்றம்.


இதில் எண்ணியல் முறை உண்டு. I என்பது Interstate ஐ குறிக்கும். இரட்டை படை எண்கள் கிழக்கு ↔ மேற்கு திசை. 

ஒற்றை படை எண்கள் வடக்கு ↔ தெற்கு திசை. 

மூன்று இலக்க எண்கள் நகர லூப் அல்லது கிளைச் சாலை.


U.S. Highway System என்பது பழைய அமைப்பு. நகரங்கள் மற்றும் சிற்றூர்களை கடந்து செல்லும். சிக்னல்கள் மற்றும் குறுக்கு சாலைகள் இருக்கும்.


Turnpike என்பது கட்டண நெடுஞ்சாலை. Toll Tag / EZ Tag / TxTag வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்படும். சாலையில் உள்ள சென்சார் அதை பதிவு செய்து *கட்டணம் வங்கி கணக்கிலிருந்து நேரடியாக கழிக்கப்படும்.* Tag இல்லையெனில் கேமரா number plate படம் பிடித்து வாகன உரிமையாளரின் முகவரிக்கு பில் அனுப்பப்படும். அது Tag கட்டணத்தை விட அதிகமாக இருக்கும். *கட்டணக் கேட் எங்கும் இல்லை. வரிசையும் இல்லை.* பொதுவாக Turnpike-கள் சிறப்பாக பராமரிக்கப்படும் மற்றும் வேகமான பயணத்திற்கு உதவும்.


ஒவ்வொரு 125–150 கிலோமீட்டர் இடைவெளியிலும் சுத்தமான ஓய்வறைகள் உள்ளன.


Google Maps ஒவ்வொரு சாலையின் வேகக் கட்டுப்பாட்டையும் காட்டுவதோடு, நாம் செல்கிற வேகத்தையும் குறிக்கிறது. அருகில் போலீஸ் இருப்பின் எச்சரிக்கை வரும். 

*Still there?* என்ற கேள்வியும் திரையில் தோன்றும். ஓட்டுனர் *இல்லை* என்று பதிவு செய்தால் பின்னால் வரும் பயணிகளுக்கு அந்த எச்சரிக்கை தெரியாது.


*Austin நோக்கி*


Austin நோக்கிச் செல்லும் வழியெங்கும் விரிந்த வெற்று நிலப்பரப்புகள். “50 acres for sale”, “100 acres for sale” என்ற பலகைகள். சில இடங்களில் “1000 acres on sale for 10 acre price” என்ற விளம்பரம். 

10 ஏக்கர் விலைக்கே 1000 ஏக்கர் என்ற சலுகை போல.


அவ்வளவு பரந்த நிலங்களைப் பார்த்தபோது இங்கு நிலம் வாங்கி பண்ணை அமைக்கலாமா என்ற சிந்தனை தோன்றியது.


பின்னர் சென்றது Texas State Capitol.


ஆம், *Capitol* தான். எழுத்துப்பிழை இல்லை.


Capital (“a”) = அரசு அமைந்துள்ள தலைநகர் நகரம்.

Capitol (“o”) = சட்டமன்ற உறுப்பினர்கள் கூடும் அரசு கட்டிடம்.


Austin என்பது Texas மாநிலத்தின் Capital. அதில் அமைந்துள்ள அரசு கூடும் கட்டிடம் தான் Capitol.


1888 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. *United States Capitol கட்டிடத்தைவிட உயரமானது என்பது சுவாரஸ்யமான தகவல்.*


இங்கு நுழைவுசீட்டு தேவையில்லை. Security என்ற பெயரில் அதிக கெடுபிடி இல்லை. உள்ளே official guide விளக்கம் அளிக்கிறார். Photo எடுக்க தடை இல்லை.


இங்கு Governor ஆக இருந்து பின்னர் அமெரிக்க President ஆனவர் George W. Bush. *நம் நாட்டைப் போலவே இங்கும் சாலைகளுக்கு தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன*


*Member மரியாதை*


*பயணம் என்றாலே கட்டுச்சாப்பாடு எடுத்துச் செல்லும் பழக்கம்.* எடுத்துச் சென்ற இட்லிகளை அங்கேயே அமர்ந்து சாப்பிடலாமா என்று கேட்டபோது, Hilton Hotels & Resorts நிர்வாகம் உறுப்பினர் (Member) என்ற மரியாதைக்காக உடனே அனுமதி வழங்கியது.


சுமார் 200 பேர் அமரக்கூடிய விசாலமான மண்டபம். நாங்கள் கொண்டு வந்த உணவைச் சாப்பிட அவர்கள் food box, tissue papers, spoon, fork அனைத்தையும் மரியாதையுடன் கொடுத்தனர். lift பராமரிப்பு பணிகள் காரணமாக ஏற்பட்ட சிறிய சிரமத்திற்காக chips மற்றும் தண்ணீர் பாட்டில் கூட வழங்கினர்.


*அந்த நாள் நாங்கள் அங்கு தங்கவில்லை.* வெறும் Hilton Member என்ற அந்த அங்கீகாரமே இந்த அன்பான வரவேற்பிற்குக் காரணம். அந்த மரியாதையும் விருந்தோம்பலும் மனதை நெகிழச் செய்தது.


*Mount Bonnell – காட்சியும் களவும்*


Mount Bonnell மலை உச்சியில் அமைந்துள்ள சிறிய, அழகிய பூங்கா தான் Covert Park. மேலிருந்து Colorado River ஐ தெளிவாகக் காண முடியும்.


சுமார் 100-க்கும் மேற்பட்ட படிகளை ஏறிச் செல்ல வேண்டும். உச்சியை அடைந்தவுடன் நகரமும், ஆறும், மரங்களால் சூழப்பட்ட மலைப்பகுதியும் ஒரே பார்வையில் விரிகின்றன. சூரிய அஸ்தமன நேரத்தில் (Sunset) இங்கு தோன்றும் காட்சி மிகவும் அழகாக இருக்குமாம். ஆனால், *நமக்குக் குமரி முனையே ஆகச்சிறந்தது* என்ற மனநிலையுடன் நாம் திரும்பிவிட்டோம்.


புகைப்படங்கள் எடுக்க மிகச் சிறந்த இடம். சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் விரும்பும் ஓய்வு தளம். நாம் சென்றபோது, பெட்டி நிறை beer can களுடன் ஒருவர் அமைதியாக அமர்ந்து தனது நேரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார். இயற்கை அமைதியும், நகரத் தோற்றமும் சேர்ந்து தரும் அமைதி தனித்துவமானது.


எங்களுடன் வந்த உறவுப் பெண்மணி பகிர்ந்த 2023 ஆம் ஆண்டின் அனுபவம் அங்கு இன்னொரு பரிமாணத்தைச் சேர்த்தது. மேலே சென்று திரும்பும் முன், கார் கண்ணாடி உடைக்கப்பட்டு, அதில் இருந்த passport, புதிய ladies watch, மற்றும் சில ஆயிரம் பணத்துடன் கூடிய கைப்பை திருடப்பட்டுவிட்டதாம். போலீசார் வந்து வழக்கமான நடவடிக்கைகள் செய்தார்களாம்; ஆனால் பயன் எதுவும் இல்லை.


அந்தச் சூழலில் ஒரு வியப்பான திருப்பம் *திருடர்* passport ஐ குப்பைத்தொட்டியில் வீசி சென்றிருந்தாராம். கைப்பையில் இருந்த தொலைபேசி எண் குறிப்பின் மூலம் ஒருவர் தகவல் தெரிவிக்க, passport மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில் அனைவரும் அந்த *கருணை கொண்ட திருடரை* வாழ்த்தினார்களாம்! 😆


Mount Bonnell பகுதி 19-ஆம் நூற்றாண்டிலிருந்தே Austin மக்களுக்குப் பிரபலமான பார்வை இடமாக இருந்து வருகிறது. “Covert Park” என்ற பெயர், அந்த நிலத்தை நன்கொடையாக வழங்கிய Covert குடும்பத்தின் நினைவாக வழங்கப்பட்டிருக்கிறது.


நகர வாழ்க்கையும், இயற்கை அமைதியும் ஒரே நாளில் அனுபவிக்க முடியும் தனிச்சிறப்பு கொண்ட இடம் இது.

*San Antonio நோக்கி…*


San Antonio நோக்கி மீண்டும் பயணம். சுமார் 80 மைல் 128 கிலோமீட்டர் வெறும் 1 மணி நேர பயணம்.


அங்கேயே *தொடங்கியது அடுத்த “சோதனை”!*


Airbnb மூலம் 3 அறைகள் கொண்ட தனி வீடு முன்பதிவு செய்திருந்தோம். Password மூலம் கதவைத் திறந்தோம். வீட்டுக்குள் சென்றபோது, ஒரு அறையில் எந்த electrical switch-மும் இல்லை. வீட்டின் அனைத்து switch-களையும் on செய்தும் அந்த அறையில் light, fan எதுவும் இயங்கவில்லை.


இரவு 10 மணி. நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ள message மட்டுமே வழி. உடனடியாக வந்த பதில் அந்த அறை முழுவதும் remote மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று!


சாப்பிட்டுவிட்டு San Antonio River Walk செல்ல 11 மணியளவில் கிளம்பினோம். அப்போது புதிய பிரச்சினை கதவை எப்படி பூட்டுவது?


எல்லா முயற்சிகளும் தோல்வி. நம்மூர் automatic door என்று நினைத்து, உள்புற knob ஐ close செய்து மூடிவிட்டேன். கதவு lock ஆகிவிட்டது. ஆனால் திறப்பது number lock மூலம். இந்த knob lock கிற்கும் number lock கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை!


இரவு 11 மணி. மீண்டும் message. பதில்:

“கீழே உள்ள knob மூலம் பூட்ட வேண்டாம். Number lock-ல் நடு பொத்தானை அதிக நேரம் அழுத்தினால் பூட்டிக்கொள்ளும்.”


இப்போது நமக்கு தேவை கதவை திறக்கவேண்டும்!  பூட்டுவது அல்லவே!!! அனைத்து பொருட்களும் உள்ளே. *நாங்களும் காரும் மட்டும் வெளியே.*


Message க்காகக் காத்திருந்தோம். வந்த பதில்:

*There is a small rock opposite to black table at entrance.*


இப்போது அந்த இருளில் rock ஐத் தேட வேண்டும்! அதை வைத்து என்ன செய்ய? கதவை உடைக்க வேண்டுமா?


கடைசியாக தோட்டத்தில் தேடி கண்டுபிடித்தோம். அது சாதாரண கல்லல்ல. அதன் அடிப்பாகம் திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. உள்ளே வீட்டின் சாவி!


அந்த நிமிஷத்தில் அனைவருக்கும் உயிர் திரும்பி வந்தது. 


மறுநாள், அதே message ஐ காட்டி மற்றவர்களை “treasure hunt” விளையாடச் செய்தோம். யாரும் சாவியை கண்டுபிடிக்க முடியவில்லை.


என்னால் ஏற்பட்ட சொதப்பல் என்னாலேயே நிவர்த்தி செய்யப்பட்டது என்ற ஒரு *சிறிய பெருமிதம்.* “அதிபுத்திசாலி” என்ற பட்டமும் உள்ளுக்குள் வழங்கிக் கொண்டேன். 😄

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...