*{10} சிலம்பு பயணத்தில் மங்கல வாழ்த்துப் பாடல்*
சிலப்பதிகாரத்திலே
முக்காண்டத்தில் முதல் காண்டம் புகார்க் காண்டம். முக்காண்டத்தில் முப்பது காதைகள் பார்க்க உள்ளோம்.
ஒவ்வொரு காதையிலும் வருகின்ற
கதிரவனின் ஒளியில் ஒளிர்கின்ற பனிமலையின் சிகரத்தைப் போன்ற வைர வரிகளை -
கருத்தையும் சிந்தையையும் ஒருங்கே கவரும் சிறப்பான வரிகளை தேர்ந்தெடுப்போம். அதன் சொல் நயத்தில் - பொருள் நயத்தில் மூழ்கித் திளைப்போம்.
நம் பயணம் முழுதும் ஒவ்வொரு காதையிலும் வருகின்ற செய்யுளில் கருத்தைக் கவரும் - ஒளிரும் வரிகளை மட்டும் அறிந்து இன்புறுவோம்.
புகார்க் காண்டத்தில்
முதல் காதையாக முதலில் வருவது *மங்கல வாழ்த்துப் பாடல்.*
கொடுக்கப்பட்ட தலைப்போ *போற்றிப் பரவுவோம்*
மனம் கவர்ந்த வைர வரிகளை என் பார்வையில் நான்
வியந்து விதந்து ஓதியதும்
மழலை கவி மோகன் ஐயா அவர்கள் அவ்வரிகளின் மீது அவரது பார்வையை
பகிர்ந்து இடுவார்.
ஓர் உரையாடலாய் இதை முன்னெடுக்க விழைகிறோம்:
மழலைக் கவி மோகன்:
அடியேன்:
முதல் காதையாம் மங்கள வாழ்த்து பாடலில்
இளங்கோ அடிகள்
நிலவையும்,
கதிரையும், மழையையும், நாட்டையும் போற்றுகிறார்.
இறையை வாழ்த்தி துவங்குவதற்கு இணையாக இயற்கையை முதலில் வாழ்த்துகிறார். தாம் பிறந்த மண்ணையும் வாழ்த்திப் பாடுகிறார்.
இயற்கையை துதித்து வணங்கிப் பாராட்டி துவங்குவதால் சிலப்பதிகாரம் எனும் இக்காவியம் சிறப்பதிகாரம் ஆகிறது.
போற்றிப் பரவுவோம் பாடலில்
முக்கியமான நான்கு வரிகளை
மீண்டும் மீண்டும் படிக்கலாம்
படித்துப் படித்து களிக்கலாம்.
முதல் வரியே *திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்*
குளிர் வெண்குடை போன்ற
வெண்ணிற ஒளி பரப்புகின்ற
நிலவைப் போற்றுகிறார்.
பிறகு,
*ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்* - என உலக உயிர்களின் முக்கிய ஆதாரமாம் சூரியனை -
செங்கதிரோனை துதித்து மகிழ்கிறார்.
மூன்றாவதாக, *நீரின்றி அமையாது உலகு* என்பதால்
*மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்* - என மழை அன்னையை வணங்கி ஆராதிக்கிறார்.
நிறைவாக,
சிலம்பின் நாயகி கண்ணகியும் அவள் கணவன் கோபுரனும் பிறந்த மண்ணை பூம்புகாரை - சிலம்பின் கதைக் களத்தை- புகார் மண்ணை நன்றியோடு நினைத்து
*பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்*
என புகார் நகரை பாராட்டி அக மகிழ்கிறார்.
இவர் வைத்த வரிசையில்
நிலவும், கதிரும், மழையும் எவ்வளவு முக்கியமோ - அதுபோல, ஒருவனுக்கு
தான் பிறந்த மண்ணும் முக்கியம் என்பதை வலியுறுத்தும் இப்பாடலை
மீண்டும் மீண்டும் படித்து மகிழ்வோம்.
நாமும் இயற்கையை ஆராதிப்போம்.
நாம் பிறந்த மண்ணை வாழ்த்தி வணங்குவோம்.
மழலை கவி மோகன் ஐயா!
முதல் பாதையில் மங்கல வாழ்த்துப் பாடலில் என் மனம் கவர்ந்த நான்கு வரிகளை சிலாகித்துள்ளேன்.
தங்கள் பார்வையையும் பகிரலாமே!
*மழலைக் கவி மோகன்:*
நிச்சயமாக ஐயா.
தங்களின் மனம் கவர்ந்த வைர வரிகளின் மீதான எனது பார்வை இதோ :
சிலப்பதிகாரத்தின் முதல் காண்டமான புகார் காண்டத்தில் முதல் காதையாக வருவது " மங்கல வாழ்த்துப் பாடல்."
கடவுள் வாழ்த்தோடு காப்பியங்களை, உயர்ந்த நூல்களை தொடங்குவது மரபு.
கவிஞன் தான் வழிபடுகின்ற கடவுளையாவது அல்லது தான் பாட எடுத்துக் கொண்ட பொருளுக்கு ஏற்புடைய கடவுளையாவது வாழ்த்தி நூலைத் தொடங்குவது மரபு என்பார் பரிமேலழகர்.
நம் சமணத் துறவி இளங்கோ அடிகள், இங்குதான் மரபிலிருந்து மாறுபட்டு,
நிலவையும் , சூரியனையும், மழையையும், கதைக் களத்தையும் போற்றி காப்பியத்தை தொடங்குகிறார்.
இவை யாவருக்கும் பொது. அரச குலத்தைச் சார்ந்த அடிகள் பொதுவுடமைகளை,மங்கலப் பொருட்களாகப் போற்றி வாழ்த்துவது இக் காவியத்தின் தனிச்சிறப்பு.
மழை, நீர், நிலம் இவற்றைப்போற்றி, " சோழ வளநாடு சோறுடைத்து" என உணர்த்துகிறார்.
இயற்கையைப் போற்றும் இவர்தம்
வழி நடந்து இருந்தால்,புவி வெப்பம் எனும் வெம்மை நம்மைத் தீண்டியிருக்காதோ!
குளிர் நிலவின் தண்மை போல உள்ள *"வெண்கொற்றக் குடை"* கோலாச்சும் அரசனின் இரக்கத் தன்மையையும், 'கொடை'ப் பண்பையும் குறிக்கும்.
*"ஆயிரம் கரங்கள் நீட்டி.... தாயினும் சாலப்பரிந்து சகலரையும் அணைக்கும்"** (கவியரசுக்கு நன்றி)
*ஞாயிறு* போல் அரசனும் குடிகளை பாகுபாடின்றி காப்பான்.ஆதலால் " *"ஞாயிறு போற்றுதும்".*
சோழ மன்னின் ஈகை *மாமழை* போல எங்கும் சுரக்கும் என்ற போது *மாமழையைப் போற்றுகிறார்.* மாதம் மும்மாரி பொழிய கோவின் கோலோச்சும் பண்பும் ஒரு காரணமாக இலக்கியங்களில் கூறப் படுகிறதன்றோ!
நீரையும் அரசையும் இணைக்கும் இந்நோக்கு, ஔவையின் "வரப்புயர... குடி உயர, கோன்
உயரும் " என்ற பாடலுடன் ஒப்பு நோக்கத் தக்கது.
இரண்டு துறவிகள் உலக இயலிலிருந்து அகன்று நின்று உலகவியலை உய்விக்கும் இயற்கையோடிணைந்த வாழ்வைப் போற்றுவது அன்னாரின் பரந்த பார்வையைப் பறை சாற்றுகிறது.
கதைக்களமான பூம்புகார் அழகுடன் ( பூம்) மட்டுமின்றி, காவிரி நதி கடலில் புகும் இடத்தில் உள்ளதால் புகார் எனப் பெற்றதாம்.
காவிரி நீரும் புகாரும் ஒன்றோடு ஒன்று எப்போதோ கலந்து விட்டன போலும்!
கதை நடக்கும் களம் ,
புகாராக,இருப்பினும் எங்கெல்லாம் நாயகனும் நாயகியும்
*"செம்புலப் பெயல் நீர்"* போல அன்புடன் பின்னிப்
பிணைந்து , வாழ்வை நடத்தும் ஒவ்வொரு இல்லத்தையும் குறிக்கும்.
சேர அரசு குலத்தில் பிறந்த அடிகள் ,சோழ மன்னனின் கோலோச்சும் சிறப்பை இயற்கையோடு இணைத்து மங்கலம் பாடியோதோடன்றி, நாடும், மக்களும் இன்புற்றே வாழ்ந்த ஒரு பொற்காலத்தில்
காவியம் தன் பயணத்தைத் துவக்கும் என்று மங்கல வாழ்த்திலேயே, ஒரு முன்னோட்டம் காட்டுகிறார்.
இக்கால திரைப்பட முன்னோட்டங்களுக்கு, ஒரு முன்னோடி!
இந்தப் பீடிகை போதும்.
சிலம்பொடு நம் பயணத்தை துவக்குவோம். நீண்ட நெடும் பயணம், சோழ நாட்டில் துவங்கி, பாண்டிய நாடு சென்று , முடிவில் சேர நாடு அடையும் பயணம்.
அடிகளின் தமிழடிகளைப் பின்பற்றி, சோர்வின்றிப் பயணிப்போம், தங்கள்ஆதரவுடனும் , ஆசியுடனும்.
🙏🙏
(அடுத்த பதிவில் இரண்டாம் காதையின் வைர வரிகளோடு நாம் மீண்டும் சந்திப்போம்)
No comments:
Post a Comment