*பயணங்கள் முடிவதில்லை…*
*திகைப்பு… அறியாமை… பின்னர் புரிதல்…*
*உணவகங்களை மிஞ்சும் கோயில்கள்*
அமெரிக்காவில் வாழ்பவர்கள் வாரம் ஒரு முறை மட்டுமே சமைத்து, அதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து வாரம் முழுவதும் சாப்பிடுவார்கள் என்று நாம் கேள்விப்பட்டு வந்துள்ளோம். நானும் அதையே நம்பியிருந்தேன். ஆனால் இங்கு வந்தபின் உண்மை வேறுவிதமாகத் தெரிந்தது.
ஒரு பழைய திரைப்படத்தில் நடிகர் Senthil எந்த கோயிலில் எந்தப் பிரசாதம் கிடைக்கும் என்று அட்டவணை போட்டுக்கொண்டு, அதன்படி சுற்றி உணவுத்தேவையை முடித்துக் கொள்வார். அதைப் போலவே இங்குள்ளவர்களும் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் சாய்பாபா, முருகன்,ராதா கிருஷ்னா கோயில் என்று சென்று, அழகாக பெட்டிகளில் அடுக்கி வழங்கப்படும் “பிரசாதம்” என்ற பெயரில் முழு உணவையே வாங்கி வந்து, அடுத்த வேளைகளுக்கும் உண்ணலாம் என்று.
சம்பாதிப்பதில், வாரத்தில் மூன்று நாட்களுக்கு மட்டும் சமையல் செய்து சேமிக்கலாம் என்று. 😂
*Cosco வா? Costco வா? (T Makes the difference)*
T for Thiagarajan என்று அர்த்தம் கொண்டால் நான் பொறுப்பல்ல 😆)
அமெரிக்கா கிளம்புவதற்கு முன் பலரும், “Costco-க்கு செல்லுங்கள்… எல்லாம் மலிவாகக் கிடைக்கும்!” என்றனர்.
என் நினைவுகள் 1970–1976 காலப் பள்ளி பருவத்திற்கு சென்றது. அப்போது டென்னிஸ் விளையாட எங்களுக்கு “Cosco” என்ற பிரபல டென்னிஸ் பந்தை வாங்குவது ஒரு கனவாக இருந்தது. பள்ளியிலிருந்து விடுதிக்கு செல்லும் வழியில் இருந்த டென்னிஸ் கிளப்பில் professionals பயன்படுத்திய பந்துகளை குறைந்த விலைக்கு விற்பார்கள். நாங்கள் நாலு–ஐந்து பேர் சேர்ந்து பணம் சேர்த்து வாங்கினால், “Cosco பந்தின் உரிமையாளர்கள்!” என்று பெருமையுடன் உலா வருவோம்.
இங்கு வந்தபின் தான் “T” எங்கு சேர்ந்தாலும் மாற்றம் தானாக வரும் என்று. 😆
Costco Wholesale — 1983-ல் தொடங்கப்பட்ட wholesale நிறுவனம். *இது ஒரு “கடை” அல்ல; ஒரு “கடல்” என்று* உள்ளே சென்றவுடன் அந்த உண்மை புரியும்.
இங்கு வாங்குபவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு கடை வைத்திருப்பார்களோ என்று எண்ணும் அளவுக்கு bulk-ஆக வாங்குகின்றனர். அதன்பின் மாதக்கணக்கில் குளிர் சாதனப்பெட்டியில் வத்திருந்து expiry ஆகிவிட்டது என்று குப்பையிலிடுவது வேறு விடயம். நுழைவாயிலிலேயே பெட்ரோல் பங்கும் உண்டு. அதுவும் Costco க்கு உரிமையானது தான். 15–20% வரை விலை குறைவாக இருக்கும்; அதே சமயம் தரத்தில் எந்த சமரசமும் இல்லை.
இவர் Costco marketing நபரோ! என்ற உங்கள் *மனக்குரல் கேட்கிறது!*
இங்கு ஒரு முக்கிய அம்சம் உள்ளது: பெரும்பாலான பொருட்களை, சில ஆண்டுகள் கழித்தும் திருப்தியில்லையெனில் திருப்பிக் கொடுக்கலாம். அது “lifetime warranty” என்பதல்ல. அது ஒரு return policy. இந்த நம்பிக்கை தான் மக்களை இன்னும் உறுதியாக வாங்க வைக்கிறது. *இது மட்டும் இந்தியாவில் இருந்தால் நான் வருடம் தவறாமல் கட்டில் மற்றும் sofa களை புதுப்பொலிவுடனும், புது வடிவமைப்புடனும் மாற்றிக்கொள்வேனே! 😆
பொருள்களை எப்படியாவது விற்பனை செய்ய பிரம்ம பிரயத்தனம் செய்யும் இக்காலத்தில் இங்கு, யார் வேண்டுமானாலும் உள்ளே சென்று பொருள் வாங்க முடியாது. Membership அவசியம். உறுப்பினர் அட்டை இருந்தால்தான் இந்த “கடல்” உலகிற்குள் நுழைய இயலும். Sample என்ற பெயரில் பல திண்பண்டங்கள் இங்கு சிறிய அளவில் கிடைக்கும். ( பலமுறை வாங்கிக்கொள்ளலாம்)
நம் ஊரில் சாலையில் நடந்து செல்லுபவர்களை அழைத்து, “வாங்க உள்ளே பாருங்க!” என்று கடைக்குள் இழுப்பது இங்கில்லை. கதவுகள் திறந்திருந்தாலும், உள்ளே செல்ல உறுப்பினர் அட்டை அவசியம்.
எங்குமே விற்பனைக்கென்று உதவியாளரோ, பிரதிநிதியோ கிடையாது. தங்களுக்குத் தேவையெனில் நாமாக அப்பொருளைத் தெரிந்து எடுத்து பணத்தை கொடுத்து வர வேண்டும்.
பெட்ரோல் பங்குகளில் நாமே தான் பெட்ரோல் நிரப்பிக் கொள்ள வேண்டும். பணமும் card மூலம் pay செய்ய வேண்டும். நாமே போட்டுக்கொள்வதால் *1 point 2 point ஏமாற்றுகிறார் என்கிற சந்தேகம் இல்லை.*
நான் பெட்ரோல் பங்க் சென்ற போது விலையை பார்த்தேன் USD 2.39. உடனே நம் இந்திய மனம் 2.39 × 90 = 215.10 என்று கணக்கிட்டது. “ஓ… நம் ஊரே ஊயர்ந்தது! ரூ 100க்கு பெட்ரோல் கிடைக்கிறது. இங்கு 2 மடங்கு விலை!” என்று ஒரு குரூர திருப்தி.
பின் தான் அது 1 gallon விலை என்று உணர்ந்தேன். gallon என்பது 3.785 லிட்டர். அதாவது 1 லிட்டர் விலை வெறும் 56.82 மட்டுமே.
இப்போது புரிகிறதா அமெரிக்காவில் ஏன் வீட்டை விட்டு கீழே இறங்கும் போதே காரில் இறங்குகிறார்கள் என்று?
கேரள மாநிலத்தவர் சந்திர மண்டலம் சென்றாலும் அங்கு ஒரு தேநீர் கடை வைத்து பிழைத்துக்கொள்வார் என்று ஒரு பேச்சு உண்டு. அது போல இங்கு குஜராத் மற்றும் ஆந்திர மாநிலத்தவர்கள் பல கடைகள் நடத்துகின்றனர். அமெரிக்கா என்றாலே mega in size தான்; இந்த கடைகளும் அப்படியே, *விலையும் அப்படியே!!!*
India bazar என்ற ஒரு கடையில் பிளாஸ்டிக் வெற்றிலையுடன் சிறிய பிளாஸ்டிக் டப்பிகளில் குங்குமம், மஞ்சள் நிரப்பப்பட்டது. இந்தியாவிலிருந்து வந்துள்ளது. விலை INR லேயே உள்ளது ரூ 7.45. அதன் அமெரிக்க விலை USD 9.
அதாவது 9 × 90 = 810 ரூபாய்.
5 gm குங்குமம் மற்றும் 5 gm மஞ்சள். *இதை விளைவித்த நம் இந்திய விவசாயிக்கு எவ்வளவு கிடைத்திருக்கும்?*😧
சினிமா செட்களை பார்த்து இருக்கிறேன். இங்கு வீடுகளே செட்டுகளாக உள்ளன. நான் இருப்பது 3 மாடிகள் கொண்ட குடியிருப்பு; மொத்தமும் மரத்தால் கட்டப்பட்டவை. சுவர்கள் frame, உள்புறம் foam insulated, பின் மர பலகை பார்ப்பதற்கு அச்சு அசலாக சுவர். மரம் என்பதால் Undulations இல்லை. Frame இடைவெளியில் தண்ணீர் குழாய் ஆதலால் literally no Seepage. குறை அழுந்தி நடந்தால் சப்தம்; மேல் தளத்தின் அசைவுகள் கீழ் தளத்தில் இம்சைகள்.
குளியல் அறை bathtub குளியல் தான்; தண்ணீர் கீழே சிந்துதல் கூடவே கூடாது. கழிவறை கேட்கவே வேண்டாம் tissue paper எ துணை.
இங்கு தான் நமக்கு ஒரு சந்தேகம். சுற்றுச்சூழல் பற்றி உலகுக்கே அறிவுறுத்தும் அமெரிக்கா காடுகளை அழித்து இப்படி கட்டிடங்கள் கட்டலாமா? அவர்கள் அழிப்பது இல்லை; *சுழற்சி முறையில் வளர்த்து வெட்டுவது.*
Texas முழுவதுமே carry bag க்காக காசு வாங்குவதில்லை. முற்றிலும் இலவசம்; *மிக நேர்த்தியான quality யான காகிதப் பைகள்.* தெரிந்தவரை நெகிழி பைகள் இல்லை.
மற்றொரு அம்சம் automatic car wash. *20 டாலருக்கு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் கழுவிக்கொள்ளலாம்.*
நாம் நம் குடியிருப்பில் கார் துடைக்க 600 முதல் 2000 வரை கொடுக்கின்றோம். சராசரியாக 1000 என்று கணக்கிட்டால், 20 நிமிடங்களில் ஒரு கார். 8 மணி நேரத்தில் அதிகபட்சம் 24 கார்கள். அவரது வருமானம் ரூ 24000/= மட்டுமே.
இங்கு கார்களை track ல் விடவேண்டும்; belt தானே உட்கொண்டு செல்லும். Foam spray செய்யும்; 5 புறமும் தண்ணீருடன் roller brush சுற்றி சுத்தம் செய்து, அடுத்து blower முன் நிறுத்தி நீர்த்திவளைகளை நீக்கி வெளியில் கொண்டு வந்து விடுகிறது. இதற்கு ஆகும் நேரம் 2 நிமிடங்கள்.
உள்புற cleaning க்கு தனி bay blowers உள்ளன. Carpet dry clean செய்ய roller உள்ளது. அனைத்தும் 5 முதல் 10 நிமிடங்களில் முடித்துக்கொள்ளலாம். அதுவே ஒரு நல்ல அனுபவமாக உள்ளது.
பயணம் முடிவதில்லை…
*விலையைப் பார்த்து கணக்கிடும் மனம்,*
*அறியாமையிலிருந்து புரிதலுக்குச் செல்லும் சிந்தனை,*
*புரிதலிலிருந்து அனுபவமாக மாறும் வாழ்க்கை…*
அதனால் தான்… பயணங்கள் முடிவதில்லை…
No comments:
Post a Comment