Saturday, August 31, 2024

மான்களே ! உஷார் !

 மான்களே ! உஷார் ! 


கலைத் தோலில் சில காட்டு விலங்கும் உலவும்

   கனவு வலையில் சிக்கும் மான்கள் பாவம்


விலை ஒன்று சொல்லி நடிக்க அழைக்கும்

   விண்ணில் பறக்கும் புகழ் போதை ஏறும்


தலை கொடுக்கும் மான்கள் விழித்திருக்கணும்

   தலை கொய்ய மிருகம் வர வீதிக்கு வரணும்


மலையாளத் திரையின் வண்டவாளம் நாளும்

   மண்வெட்டி, கடப்பாரை.. எங்கே? காணோம்


__  குத்தனூர் சேஷுதாஸ்

உலக கடித தினம்(I)

 கடிதம்.....

கடிதம் எழுதியவரின் எண்ணங்கள்....

தபால்காரர்....

ஸ்டாம்ப்...... இதற்காக தவமிருந்த நாம்....


இன்று வாட்ஸ் அப்பில் வரும் முக்கால்வாசி கடிதங்களை படிக்காமலே புறக்கணிக்கிறோம்......

மனிதா....என்னே உன் வளர்ச்சி 

😊 சாயி 😊

-------------------------

 கடிதங்கள்

செய்திகளையா 

கொண்டு வந்தன..

இல்லையில்லை

உறவுகளின்

கையெழுத்தினை..

எழுத்துகளினால் அன்பினை..

அன்பான உணர்வுகளை...

உணர்வுகளின் உச்சத்தை..


வாட்ஸ்அப்பும்

மின்னஞ்சலும்

எந்திரமயமாக்கியது

நமது 

அன்பினை,

உணர்வுகளை,


********************

மின்னஞ்சல் எந்திரமயமாய் செய்தியைக் கடத்தும்.


கடிதங்களோ

உணர்வுபூர்வமாய்

செய்தியைச் சொல்லும்


****************************

நாற்பதைக் கடந்தோருக்கு!


பள்ளியிலிருந்து வரும் "Promoted" கார்ட்...


அதைக் கொண்டு வரும் தேவதூதனாய் காக்கிச் சட்டை தபாற்காரர்..


அவரைச் சுற்றி தேனீக்கள் போல் பிள்ளைகள் கூட்டம்...


என்ன ஒரு பொற்காலம் அது!


எல்லாம் போச்சு...

வாட்ஸ்அப்-ஏ எல்லாமாய் ஆச்சு...



-ஸ்ரீவி

-----------------------------------

 உலகினை விரைவாய் இணைக்கும் கருவிகள் இல்லா  அக்காலம்.  

மகனை அன்னையிடம், 

கணவனை மனைவியிடம், 

காதலனை காதலியிடம்,

நண்பனை நண்பனிடம் 

இணைத்தது இந்த கடிதங்கள் தான். 

சுக, துக்க செய்திகளைப் பரிமாறிய ஒரே சாதனம். 

பல கிராமங்களில் தபால்காரர் ஒரு கதாநாயகன். ஒவ்வொரு வீட்டிலும் அவரும் ஒரு அங்கம். 

பல இளைஞர்கள் போட்டித் தேர்வுகளை எழுதி விட்டு பணி 

ஆணைக்காக தபால்காரரைக் காண வழி மேல் விழி வைத்திருந்த காலம். 

பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற விழா நாட்களில் அழகழகான வாழ்த்து அட்டைகளை வாங்கி நண்பர்களுக்கு அனுப்பி மகிழ்ந்த

காலம்.

இராணி வார இதழில் வரும் "அன்புள்ள அல்லி " கேள்வி பதில் பகுதிக்கு சகோதரி அஞ்சலட்டையில் எழுதிய கேள்வியை,  தந்தைக்குத் தெரியாமல் சிவப்பு அரக்கனின் வாயில் திணித்த தருணங்கள்.


ஒரு முறை கல்லூரி நண்பர்கள் என் முகவரி கேட்க  " சுலைமான்,  மணப்பாறை " என்று எழுது கடிதம் வந்து விடும் என்று வம்பு பேச,  அவர்களும் அவ்வாறே எழுதி அனுப்ப தபால்காரர் என்னிடம் கொடுத்த கடிதத்தை நண்பர்களிடம் காட்டி அவர்களை அதிசயிக்க விட்ட

தருணம். 

கடிதம் பற்றி எழுத கோடி உண்டு செய்திகள்.


- முகம்மது சுலைமான்

நெய்தல் (II)

 நெய்தல்குத்தனூர் சேஷுதாஸ்


கருநீலச் சீலையில் இயற்கை அன்னையாம்

   கரையாய் (border) மணலாம் அதுவே நெய்தலாம்

 

வருணன் கடவுளாய் வழிபட்ட இடமாம்

   வாவியில் கொட்டி, ஆம்பல்...பூக்குமாம்

 

கருக் கொண்ட மங்கையாய் காலை ஓளிரும்

   கரையோடு அலைகள் கபடி விளையாடும்

 

அருணன் இந்திரன் திசை அணுக புறப்படுவார்

   அள்ளிக் கொண்டு மீன்கள் அந்தியில் திரும்புவார்

 

பருப்பு வேக வைத்து கண்கள் பார்த்திருக்கும்

   படகு கண்ணில் பட வயிற்றில் பால் வார்க்கும்

 

சுரங்கக் கடலில் முத்து, பவளம்...இன்னும்

   சூர்ப்பனகை சொல கற்பினுக்கு அணி களவாம்

 

சிறுத்த இடை தலைவி, தொடரும் தலைவனும்

   சிரிப்பிடையே வரும் " தொட்டால் பூ மலரும் "

 

வருத்தம் உண்டாம் சொல்லியே ஆகணும்

   வரிசையாய் சமாதிகள் (இன்னும்) எவ்வளவு நீளும்?


-----------------------------------------------

 உதய சூரியனையும்,

நட்சத்திர விண்மீன்

கூட்டங்களயும் மற்றும்

வெள்ளி வட்ட நிலவினையும் காண

இயற்கையன்னை படைத்த நிலம்.

 

பட்டினம், பாக்கம்

என்று ஆயிரமாயிரம்

ஆண்டுகள்பரதவர்

உறைந்த, உழைத்த

நிலங்களில் இன்று

ஒண்ட வந்த மக்களின்

பலமாடிக்குடியிருப்புகள்- வீட்டிலிருந்தே கடற்கரையை அனுபவிக்கலாம்

 என்ற பதாகைகள வேறு!

 

காலையில் போனால்

மாலையில் திரும்புவோமா என்ற நிலை என்றாலும் கடலன்னையை

வாழ்வாதாரம்

அருளும்தாயாகக்

கும்பிடும் மீனவர் குழாம்.

 

உப்பிட்டவரை என்றும்

மறக்கலாமா, நாம்அளவோடு உணவில் சேர்த்துக்கொண்டால்!

 

அன்று ஒரு பூம்புகாரைக்

கடல் கொண்டது

இன்று பல பூம்புகார்கள் கடல் கொள்ள

வாய்ப்புண்டு என விஞ்ஞானம் அறிவுறுத்தினாலும்

அஞ்ஞானம் கண்களை மறைக்கிறது.

அந்தோ!

 

இயற்கையன்னை

வெள்ளி மணல் பரப்புகளை ஏக்கர்

கணக்கில் வரமாக அருளினும் நெகிழிக்குப்பைகளை வீசிக்கும்மாளம்போடும்

ஊர்சுற்றிக்கூட்டம்!

 

நெய்தல் - மோகன்

அமிர்தமும் விடமும்

ஒரு சேர வழங்கி ஒரு தத்துவ

உண்மையை உணர்த்திய கடலன்னையின்

வயிறு நோக எண்ணெயும்

தாதுக்களும்

தேடினால்

கடல்வாழ்உயிரினங்களின் கண்ணீரே கடலைப்பொங்கச்

செய்து விடாதா?

 

என்ன இன்னல் செய்தாலும்

தளராது

ஏழை எளியவர்க்கு

பொழுது போக்குத்

தலம் ஆக விளங்குகிறது அல்லவா கடலும்கடற்கரையும்!


நெய்தல் (I)

 நெய்தல்ஸ்ரீவி

உவர் காற்றும் ஓயா அலையும்

நாள் முழுதும் வந்தடிக்கும்

பரதவரின் படகுகளோ

சீறிப் பாயும்

மீன் பிடிக்கப் போவோர் மீது

அண்டை நாட்டு

இராணுவத்தின்

குண்டும் பாயும்

 

கடலே பல்லுயிரின் அடைக்கலமாம்

இயற்கையன்னையின் படைக்கலமாம்

ஆகப் பெரிய திமிங்கலம் முதல்

ஆகச் சிறிய நுண்ணுயிர் வரை

கோடானுகோடி நீர்வாழ்

உயிரினங்களின்

சொர்க்க பூமியாம்.

 

முத்தெடுக்க மூச்சடக்கி கடலில் மூழ்கி

கொத்துக் கொத்தாய் முத்துச்சிப்பிகள்

எடுக்கும்

பரதவரின் வாழ்விற்கு

உத்தரவாதம் ஏதுமில்லை

 

அவரெடுக்கும் முத்துக்கு விலைமதிப்போ

விண்ணைத் தொடும்

அவரது உயிர் போயின்

அநாதையாய் அவருடல்

மண்ணுள் போகும்.

 

கடலுள் போவோர்

திரும்பி வந்தால்

குடும்பம் மகிழும்

இல்லையெல்

'மீனவர்கள் மாயம்'

என செய்திகள் சொல்லும்

 

தினந்தினம் செத்துப் பிழைக்கும்

பரதவரின் வாழ்க்கையோ

பரிதவிப்பு வாழ்க்கையே!

ஆனாலும் அவர்கள்

தெய்வம்

கடலன்னையே!

 

பேராசை கொண்ட

பேய்மன மனிதகுலம்

கடலையும் விடவில்லை!

நெகிழி முதல்

மின்னனுக் கழிவு வரை

கொண்டு போய்

கொட்டுகிற

குப்பைத் தொட்டியாய்

அவன் மாற்றி விட்டான்..

பூவுலகு சூழ் ஆழியையும் சீரழித்து விட்டான்.

 

நெய்தல் திணையை நைதல் செய்து

சீரழிக்கும்

மனித குலம்

திருந்த வேண்டும்

இல்லையேல்

வருந்த வேண்டும்


----------------------------------------------------

 நெய்தல் - சங்கீதா 

நீல வானின் கண்ணாடி

உப்புக் காற்று வீசுமடி

மீனவர் குலத்தின் தெய்வமடி

தாவரங்களோடு

நீந்துவன,ஊர்வன, பறப்பன

என பல்லுயிர்க்கெல்லாம்

தாயின் மடி

 

அத்தை மடி மெத்தையடி

நத்தைக்குக் கடல்

அத்தை மடி

கடலிலும் நட்சத்திரம்

தெரியுதடி

குதிரையும் கூட ஓடுதடி

பவளக் கொடிகள்

மின்னுதடி

பலரும் செல்லாத

தண்ணீர் தேசமடி

அலைகள் ஓயாமல்

அழைக்குதடி

 

மணலுக்குள் கால்

புதைத்து நடப்போமடி

சங்கும் சிப்பியும் தோண்டி

எடுப்போமடி

மணல் வீடும் கட்டி

புகுவிழா செய்வோமடி

சில நொடிகள் கழிந்தவுடன்

கலைப்போமடி

 

கப்பல்கள் நீர்வலம்

போகுதடி

கலங்கரை விளக்கமே

இரவில் வெளிச்சமடி

துறைமுகம் பார்த்து

நிற்குதடி

வாணிபம் நல்லா

நடக்குதடி

மாசாத்துவான் மருமகளே

காவலடி

 

முத்தாயி "முத்து" கேட்டு

முடிக்கும் முன்னே

முத்துக் குளிக்க முத்து

மூச்சை அடக்குவானடி

அவன் வரும் வழி மீது

விழி வைத்தே

கயல் விழி இரண்டும் நோகுமடி

 

வலையை மீனவன் விரிக்கையிலே பல

நண்டும் மீனும்

மாட்டுமடி

குழம்பு வாசம்

மூக்கைத் துளைக்குமடி

மருந்துத் தயாரிப்பும்

ஜோரா நடக்குதடி

 

ஆறுகள் கடல் சேர வருகையிலே

நெகிழியும்(plastic)

வந்து சேருதடி

கப்பல் எண்ணெயும்

கொட்டுதடி

உயிரினமெல்லாம்

சாகுதடி

 

சிகப்பு கொடி பறக்குதடி

புயல் காற்று கூரையை சாய்க்குதடி

அபயக் குரல்கள் கதறுதடி

கடல் நீருடன் கண்ணீரும்

கலக்குதடி

கடலே உப்பாகிப் போனதடி

 

நெய்தலில் சாய்ந்த மரங்களெல்லாம்

கண்ணீர்க் கதையை

சொல்லுமடி

கடல் சார்ந்தோர்

துயர் நீக்கிக் கரையேற்ற

கரங்கள் பல வேண்டுமடி

Friday, August 30, 2024

மருதம் (III)

 மருதம்குத்தனூர் சேஷுதாஸ்

வயலும், அது சார்ந்த ஊரதுவும் மருதம்

   வள்ளல்கள் (உழவர்) இங்கதிகம், வாழ்கிறது பாரதம்

 

அயிராவதம் ஏறும் இந்திரன்  இறைவன்

   ஆலமர நிழலாக அங்கங்கே சொர்க்கம்

 

பயிர்கள் இளமையில் பச்சை சேலை அணியும்

   பருக்க  நெல் மணிகள் மணமகளாய் குனியும்

 

முயலாய் இளங்கன்று துள்ளி எங்கும் ஓடும்

   முட்டி முட்டி பால் குடிக்க தாய்ப் பசு மகிழும்

 

கயல்கள் துள்ளும் வயலிலும், வாய்க்காலிலும்,

   கண்டாங்கிச் சேலை கன்னியர் முகத்திலும்

 

வியர்வை வழிய வழிய கண் முனே மாமன்

   வேல்விழி கண்ணில் அவன் " காலா ஜாமுன் "

 

வயிறார உண்ண இன்று அவனுக்கு உணவில்லை

   வாங்கிய கடனுக்கு தூக்கில் தொங்கும் நிலை

 

உயர் கொள்முதல் விலை என்று கிடைத்திடுமோ!

   உழவு முடங்குவதை அரசு தடுத்திடுமோ?

 

-----------------------------------------------

மருதம் -  ஸ்ரீவித்யா வெங்கடேஸ்வரன்


மருதம் என்றொரு நிலமிருந்ததாம் அதை

மதம் பிடித்த யானை போல் மனிதன் மிதித்து அங்கே மாடங்கள் மாளிகைகள்

மற்றும் பல ஆலைகள் அமைத்தானாம்

மாற்றம் முன்னேற்றம் என்றெல்லாம் அங்கலாய்த்து  மரபதனை மறந்தே போய்

மணிமணியாய் நெல்லதனை பயிரிடாமலே பாழாய்ப்போய்

உணர்வுகளை இழந்த பாவியாக

உழவனை போற்றாமல்

 உழுதுண்டும் வாழாமல்

தொழுதுண்டே மடிவானாம்

--------------------------------------------------------

Thursday, August 29, 2024

மருதம் (II)

 மருதம்ஸ்ரீவி


காட்டு விலங்காய்

வாழ்ந்திருந்த மனிதன்

பரிணாம வளர்ச்சியில்

நாட்டு மனிதனாய் மாறிட்ட

 

அருபெரும் நிகழ்வின்

அடித்தளம் இட்டது

பச்சைபசேல் வயல்களே..

வயல்வெளிகள்

உழவின் பலனால்

தந்திட்ட தானிய மணிகளே..

 

உழவின் பெருமையை

மனிதகுலம் அறிந்திட்ட

நாள் துவங்கித்தான்,

பரிணாம வளர்ச்சியில்

சமூக அமைப்புத்

தோன்றியதென

கோட்பாடு சொல்கிறதே.

 

நாடோடிகளாய் சுற்றித்

திரிந்த மனிதன்

நதிக் கரையோரங்களில்

சமவெளிகளில்

பெரும் குழுக்களாய்

நிரந்தரமாய் தங்கித்

துவங்கியதும் அப்போதுதானே.

மனித நாகரிக

வளர்ச்சியும்

அன்று துவங்கியதுதானே!

 

அன்றுமுதல்

இன்றுவரை

மனிதனின் பசியாற்றி

அவனது வளர்ச்சிக்கு

அடித்தளமிட்டது

வயலன்னைதானே!

 

பச்சை மரகதப் போர்வையால்

தன் அழகு மேனியைப்

போர்த்தி,

தன்மீது வளர்ந்திருக்கும்

பயிர்களை உரசி வீசிடும்

காற்றில் அசைந்து

அசைந்தாடும் அழகினைப்

பார்த்து அகமகிழும் நில அன்னையை முத்தமிடவே தானியங்களைத்

தாங்கி நிற்கும்

பயிரினங்கள் தலை வணங்கி

தலை சாய்த்து

நிற்கின்றனவோ!

 

வயல்வெளி நிலப்பரப்பு

இல்லையேல்

மனித பரிணாமம் இல்லை

நாகரிக வளர்ச்சி இல்லை

இதை உணராத மனிதகுவம்

நன்றாய் வாழ்வதுமில்லை.

வயல்களைக் கூறுபோட்டு

மனைகளாக்கி காசு பார்ப்போர்

தம் வயிற்றைத் தாமே

கிழித்து பசியாற நினைப்பவரே!

 

இயற்கையன்னையின்

அழகிய கோலங்களில்

மனித வாழ்வின்

ஓர் அங்கமாய்

மாறி நிற்கும்

மருதத் திணையை

போற்றி மகிழ்வோமே!

அதன் பேரெழில் மிகு

கோலத்தை பாதுகாத்து

மேலும் உயர்வோமே!

 

 

வயலும் வயல் சார்ந்த இடமும்

~இது அன்று

 

வீட்டுமனைகளும் அவை சார்ந்த இடமும்

இது இன்று




-------------------------------------------

 மருதம் - முகம்மது சுலைமான்

நெல் நட்டேன்

வாழை நட்டேன்

கரும்பு நட்டேன்

விலை போகவில்லை

கல் நட்டேன்

உடனே விலை போய்விட்டது

----------------------------------------

 மருதம் மோகன்

உழவர் , உழத்தியர்

நாற்று நடுகையில்

குலவைப்பாட்டு பின்புலமாக, செங்கால்நாரைகள்

பாய்ந்து வந்து மீன்களைக்கொத்த,

ஒரு திரைப்படக்காட்சியே

காசு இன்றிக்காணக்

கிடைக்குதே!

 

காளைகளை ஓட்டம்

விட்டுப்பிடித்துக் கன்னியரின் கடைக்கண் பார்வைக்கு போட்டி இட்டு முண்டாசு கட்டி மீசையை முறுக்கும்

இளவட்டக் கூட்டங்கள் 'மாப்பிள்ளைக்கல்லையும் தூக்கி தோள்வலி காட்டுவர்.

 

உழதுண்டு தொண்டு செய்யும்  இந்நில மக்களின்றி

பிழைப்புக்கு  நகரம் தேடிஓடும் மாக்களுக்கு

கும்பி நிறைவது எங்ஙனம்?

 

ஊடல் கொள்ளும்

கணவனும் மனைவியையும் ஒன்று சேர்ப்பது வயற்காடுகளும்

களத்து மேடுகளும்தான்.

 

அன்று மருதமாக இருந்த நிலங்கள்

இன்று கரு மாறி உரு மாறி '"பூர்வா" 'நுழை வாயில் சமூகம்

'(  gated community) ஆக மாறி மழை வெள்ளங்களை ஈர்க்கின்றன! திணை மாற்றம்!

 

தாமரை மலரும் நிலமாம் இது!

 

ஊடலால் அவனும்அவளும் பிணக்கு கொண்டாலும்

வயற்காடுகள்உறவை

ஒன்று

மோகன்



மருதம் (I)

 மருதம்  வித்யா

பச்சைப் பட்டாடை உடுத்திய நிலமகள்!

அவள் ஆடை நெய்யும்

விவசாயிகள்!

அவள் ஆடையின்

புட்டாக்களாய்

நீர் நிறைந்த

கிணறுகள்!

பார்டர்களாய்( ஓரங்கள்)

வரப்புகள்!

மேலும் அலங்கரிக்கும்

கண்கவர் மலர்கள்!

 

அவள் ஆடையின்

சாயம் களைத்த

தொழிற்சாலைகளும்

அடுக்குமாடிகளும்!

அவள் ஆடை கிழித்து

சிறு குழந்தைகளைப்

பலி வாங்கிடும்

ஆழ்த்துளைக்  கிணறுகள்!!

 

மருத மகளின்

ஆடையைத்

தையலிட்டுப் புதுப்பிக்க யாரேனும் வல்லவர்

உண்டோ?


 ---------------------------------

 மருதம்  - சங்கீதா 

பச்சைப் பட்டாடை உடுத்திய நிலமகள்!

அவள் ஆடை நெய்யும்

விவசாயிகள்!

அவள் ஆடையின்

புட்டாக்களாய்

நீர் நிறைந்த

கிணறுகள்!

பார்டர்களாய்( ஓரங்கள்)

வரப்புகள்!

மேலும் அலங்கரிக்கும்

கண்கவர் மலர்கள்!

 

அவள் ஆடையின்

சாயம் களைத்த

தொழிற்சாலைகளும்

அடுக்குமாடிகளும்!

அவள் ஆடை கிழித்து

சிறு குழந்தைகளைப்

பலி வாங்கிடும்

ஆழ்த்துளைக்  கிணறுகள்!!

 

மருத மகளின்

ஆடையைத்

தையலிட்டுப் புதுப்பிக்க யாரேனும் வல்லவர்

உண்டோ?


--------------------------

 மருதம் மலர்

பச்சை புடவையிலே

நிலமகள் மின்னயிலே

தெம்மாங்கு பாட்டுக்கு

நெற்கதிரும் ஆடுதடி

 

சலசலக்கும் ஓடையிலே

அயிரமீன் குதிக்கையிலே

ஒத்தைகாலில் கொக்கு ஒண்ணு அதைப்பிடிக்க நிக்குதடி

 

ஏறு பூட்டி உழுகையிலே

காளை மாடு உசும்பையிலே

 அடங்கா திமில் கண்டு

துள்ளாத மனம் துள்ளுதடி

 

உலகமே இன்று உண்ணயிலே

பசியால் உழவன் சாகயிலே

மருதமன்னர் தம் நிலை கண்டு

பாவி மனம் நோகுதடி...


காணாமல் போனோர் தினம்

 தொலைந்து காணாமல் போனார் தினமாமின்று

   தொல்லை தாங்காமல் (வீடு) துறந்தார் மட்டுமன்று


அலையாக ஆன்மா திரும்பத் திரும்ப வருது

   அதன் வடிவம் வெவ்வேறு, இரு வினை தருது


மலை போல் சில உருவம் நெஞ்சில் நிற்கிறது

   மற்றவையோ நீரில் உப்பாய்க் கரைகிறது


கலைவாணரும் இந்நாள் காணாமல் போனது

   கண்ணதாசன் சொன்னவை* நினைவுக்கு வருது. 


* " வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால்

  இந்த மண்ணில் நமக்கு இடமேது? "


__  குத்தனூர் சேஷுதாஸ்

ஐந்திணை கவிதைகள் (அமுதவல்லி)

 ஐந்திணை கவிதைகள்அமுதவல்லி

இயற்கையை

அறிந்த மனிதர்கள்

நிலம் ஐவகை என்றனர்

வாழ்வியலை இணைத்து

ஐந்திணை என‌ப்

 பண்பாடினர்

வாழ்க்கை கொண்டாட்டமானது

 

இயற்கையை

அரித்த மனிதர்கள்

சுயநலமாக வாழ்ந்து

மண்ணுலகை வருத்தி

நானிலமும் பாலையாக

பாழ்செய்ய

வாழ்க்கை திண்டாட்டமானது


*****************************************************************************

மலையைத் தெய்வமாகக்

கொண்டாடி வளம்காக்க

மழை பொழிந்தது

மரங்கள் வளர்ந்தன

மலை தான் என

பந்தாடுகிறான் மனிதன்

மண் சரிந்தது

மரங்கள் வீழ்ந்தன

குறிஞ்சி நிலம் ...

நஞ்சென மாறுமோ?

 

 

மானுண்டு மயிலுண்டு

மந்தியுண்டு களிறுண்டு

வனவளம் மிகுதி உண்டு

மனிதன் ஆசை கொண்டு

அளவுக்கு மீறிக் கொண்டு

முல்லை நிலம்...

இல்லை என்றாகுமோ?

 

பசுந்தாவரங்கள் சிலிர்த்தாட

ஆவினங்கள் அசைபோட

நீரோடைகள் நிறைந்தோட

செழித்து மலர்ந்திருக்க

அழித்துப் பார்க்கிறான் மனிதன்

மருத நிலம்...

கருகிடுமோ அதன் வளம்?

 

 

கடலின்றி பூமியில்லை

அதன் அழகுக்கோர் எல்லை இல்லை

பல்லுயிர் வாழும் உலகமது

காற்றும் அலைகளும் சொன்னால்தான்

காலங்கள் நமக்கு இசைவாகும்

காக்கும் கடல்... மனிதனால்

இன்று குப்பைத் திடல்

நெய்தல் நிலம்...

தொய்வதும் முறையோ?

 

 

திரிந்து வரும் நிலமெல்லாம்

பாலையானால்

பூவுலகின் அழிவன்றோ...

கொற்றவையை வேண்டி‌ நின்றேன்

நகைத்தாள் அவள்

 

சுற்றும் இந்த பூமி

பல்லாயிரம் ஆண்டுகள்

பல்லுயிர்களைக் கொண்டது

பூமகளுக்குத் தெரியும்

தன்னைக் காத்துக்கொள்ள

 

வளங்களைக் காத்தால்

மனிதகுலம் வாழும்

வளங்களை அழித்தால்

மனிதகுலம் அழியும்

 

பெருமழையொன்றில்

தன்னை மீட்டுக் கொள்ளும்

ஆற்றைப் போல்

பூமி தன்னை மீட்டுக்கொள்ளும்

 

நீ அழித்துக் கொண்டிருப்பது

உன் இருப்பிடத்தை அல்ல

உன் இருப்பை...

நீ மீளும் வழி உன் கையில் ...

என்றே சிரித்தாள் அன்னை


 


Wednesday, August 28, 2024

முல்லை

முல்லை - ஸ்ரீவி

உச்சி வெயில் வேளையிலும்

கதிரவன் கதிர்கள்

ஊசியிழையாய் மட்டும்

உள்நுழையும் காரிருள் இருட்டு

 

வானுயர்ந்த மரங்களோடு

போட்டிபோட்டு முடியாமல்

அயற்சியில் அவற்றின் மீதே

தழுவிப் படரும்

அடர் செடி கொடிகள்.

 

எப்போதும் ஈரப்பதத்தோடு

கும்மென்று எழும்

ஈரமண் வாசனை.

 

பாசிபடர்ந்த பாறைகளும்

சிறு பெரு கற்களும்

ஆங்காங்கே அமைதியாய்

வீற்றிருக்க

 

அவற்றின் ஊடே

வளைந்து நெளிந்து

ஓடும் தெளிந்த நீரோடை

சலசலத்துக் கொண்டிருக்க

 

அதன் இசையோடு

போட்டி போட

பற்பல புல்லினங்கள் இன்னிசை பாட

 

ஊர்வன உயிரிகள்

சரசரவென சருகுகள் மீது சடுதியில் செல்ல

 

இரைதேடும் வலிய மிருகங்களின்

கர்ஜனைகளும் உறுமல்களும்

சுருதி சேர்க்க

 

உயிர் பிழைக்க ஓடிச்

செல்லும் எளிய

மிருகங்கள் பாதவோசை

ஜதி சேர்க்க

 

ஓங்கிய பெருங்காடு

புதிர்கள் பல நிறைந்த

ஓர் அதிசயமே

உயிரிகளின் உன்னதங்களை

நாமுணர்தல் அவசியமே!

 

பசித்தால் ஒழிய

சிங்கமும் புலியும்

வேட்டையாடுவதில்லை.

 

அடுத்துக் கெடுக்கும்

அற்ப புத்தி

எந்த விலங்குக்கும்

அறவே இல்லை

 

தீயாய் தகிக்கும்

பெட்ரோல் விலை உயர்வு

துள்ளி ஓடும் மானினத்தை

வருத்துவதில்லை

 

தலைமுறை தழைத்தோங்க

எந்த விலங்கினமும்

சொத்துக்களை

சேர்ப்பதில்லை..

 

காட்டதிகாரத்தில்

வஞ்சனை பொய்புரட்டு

துரோகங்களுக்குக்

கிஞ்சித்தும் இடமில்லை.

 

ஆறறிவுள்ள மனிதர்காள்

ஐந்தறிவுள்ள விலங்குகள் கூறும் பாடம் புரிகிறதா?

 

இப்பூவுலகு பல்லுயிர்க்கும் பொதுவானது!

அதனைச் சொந்தம் கொண்டாடி

பேராசையால்

சூறையாடுதல்

மன்னிக்கவொண்ணா

பெருங்குற்றம்!


---------------------------------

முல்லை - குத்தனூர் சேஷுதாஸ் 


கல், முள் மட்டுமா கானகம் எனும் முல்லை

   காய்கள், கனிகள் இன்னும் பலப்பல உள்ளவை

 

*அல் போல் அடர்ந்தது, மரங்கள் நிறைந்தது

   ஆதவன் ஒளியும் அங்கே ஊடுருவ முடியாதது

 

வல் விலங்கு உலவினவாம் அச்சம் இல்லை

   வழியில் வாரியம், கல்லூரி, ஆஸ்ரமம் இல்லை

 

சொல் காக்க *தாதையின் இராமன் அன்று போனது

   சுரக்கும் தமிழ் ஊற்று நம் கம்பன் தோண்டியது

 

பல் காட்டும் மந்திகள் கூத்தடிக்கும் இடம்

   பாட்டி சொலும் கதைகள் இதுவே களம்

 

வில், வேல் ஏந்தி  அன்று வேட்டையாடினார்கள்

   விளைந்ததை, வளர்ப்பதை அவ்வாறு காத்தார்கள்

 

கொல்லும் துப்பாக்கியோடு குழுக்கள் இன்று சுற்றுது

   கொம்பு, தந்தம், தோல்...கொள்ளை கொள்ள அது

 

இல் வாழ்வு கசந்தோர்க்கு அடைக்கலம் கொடுத்தது

   இல்லாமல் போனதால் எங்கே நாம் போவது?

 

*அல் -- இருள்,  *தாதை -- தந்தை


------------------------------

 முல்லை - மோகன்

செம்புலங்களும்  பெயல்நீரும் ஒன்று கலந்து அன்புடை நெஞ்சங்களின் கலப்பை நினைவூட்டும்

 

கற்றுக்கறவை கணங்கள் பல ஒன்று கூடி உறவாடும்: ஆநிரை மேய்த்தானைப் பரவும்

 

மரக்கூட்டங்களும் ஆலம்விழுதுகளும்

மந்திகளின் விளையாட்டுக்கூடங்கள்!

 

ஒன்றுக்கொன்று எதிரிகளாக இருப்பினும்

பசிப்பிணி தணிக்க மட்டும் கொலை வெறி கொள்ளும் மிருகக்

கூட்டங்கள்.

 

முல்லைக்குத் தேரீந்தான் பாரீ அன்று

இன்று முல்லைக்கொடிகள்

காடு திருத்தி 'நாடாக்க' சாய்க்கப்படுகின்றன.

 

காடுகளை அழிப்பவர்தம்மை

'காட்டுமிராண்டி' என்றழைக்காமல்

'நாட்டுமிராண்டிகள்' என்றாலென்ன!

 

குறிஞ்சிக்கு அடுத்த மனித நாகரீகப்பாதையான, பல இயற்கை வளங்களை உள்ளடக்கிய

 முல்லை  நிலங்கள்

அழிக்கப்படுவது

பஸ்மாசுரன்தன்தலையில்கை வைத்த கதைதான்!


 


மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...