ஐந்திணை கவிதைகள் - அமுதவல்லி
இயற்கையை
அறிந்த
மனிதர்கள்
நிலம்
ஐவகை என்றனர்
வாழ்வியலை
இணைத்து
ஐந்திணை
எனப்
பண்பாடினர்
வாழ்க்கை
கொண்டாட்டமானது
இயற்கையை
அரித்த
மனிதர்கள்
சுயநலமாக
வாழ்ந்து
மண்ணுலகை
வருத்தி
நானிலமும்
பாலையாக
பாழ்செய்ய
வாழ்க்கை திண்டாட்டமானது
*****************************************************************************
மலையைத்
தெய்வமாகக்
கொண்டாடி
வளம்காக்க
மழை
பொழிந்தது
மரங்கள்
வளர்ந்தன
மலை
தான் என
பந்தாடுகிறான்
மனிதன்
மண்
சரிந்தது
மரங்கள்
வீழ்ந்தன
குறிஞ்சி
நிலம் ...
நஞ்சென
மாறுமோ?
மானுண்டு
மயிலுண்டு
மந்தியுண்டு
களிறுண்டு
வனவளம்
மிகுதி உண்டு
மனிதன்
ஆசை கொண்டு
அளவுக்கு
மீறிக் கொண்டு
முல்லை
நிலம்...
இல்லை
என்றாகுமோ?
பசுந்தாவரங்கள்
சிலிர்த்தாட
ஆவினங்கள்
அசைபோட
நீரோடைகள்
நிறைந்தோட
செழித்து
மலர்ந்திருக்க
அழித்துப்
பார்க்கிறான் மனிதன்
மருத
நிலம்...
கருகிடுமோ
அதன் வளம்?
கடலின்றி
பூமியில்லை
அதன்
அழகுக்கோர் எல்லை இல்லை
பல்லுயிர்
வாழும் உலகமது
காற்றும்
அலைகளும் சொன்னால்தான்
காலங்கள்
நமக்கு இசைவாகும்
காக்கும்
கடல்... மனிதனால்
இன்று
குப்பைத் திடல்
நெய்தல்
நிலம்...
தொய்வதும்
முறையோ?
திரிந்து
வரும் நிலமெல்லாம்
பாலையானால்
பூவுலகின்
அழிவன்றோ...
கொற்றவையை
வேண்டி நின்றேன்
நகைத்தாள்
அவள்
சுற்றும்
இந்த பூமி
பல்லாயிரம்
ஆண்டுகள்
பல்லுயிர்களைக்
கொண்டது
பூமகளுக்குத்
தெரியும்
தன்னைக்
காத்துக்கொள்ள
வளங்களைக்
காத்தால்
மனிதகுலம்
வாழும்
வளங்களை
அழித்தால்
மனிதகுலம்
அழியும்
பெருமழையொன்றில்
தன்னை
மீட்டுக் கொள்ளும்
ஆற்றைப்
போல்
பூமி
தன்னை மீட்டுக்கொள்ளும்
நீ
அழித்துக் கொண்டிருப்பது
உன்
இருப்பிடத்தை அல்ல
உன்
இருப்பை...
நீ
மீளும் வழி உன் கையில் ...
என்றே
சிரித்தாள் அன்னை
No comments:
Post a Comment