Wednesday, August 28, 2024

முல்லை

முல்லை - ஸ்ரீவி

உச்சி வெயில் வேளையிலும்

கதிரவன் கதிர்கள்

ஊசியிழையாய் மட்டும்

உள்நுழையும் காரிருள் இருட்டு

 

வானுயர்ந்த மரங்களோடு

போட்டிபோட்டு முடியாமல்

அயற்சியில் அவற்றின் மீதே

தழுவிப் படரும்

அடர் செடி கொடிகள்.

 

எப்போதும் ஈரப்பதத்தோடு

கும்மென்று எழும்

ஈரமண் வாசனை.

 

பாசிபடர்ந்த பாறைகளும்

சிறு பெரு கற்களும்

ஆங்காங்கே அமைதியாய்

வீற்றிருக்க

 

அவற்றின் ஊடே

வளைந்து நெளிந்து

ஓடும் தெளிந்த நீரோடை

சலசலத்துக் கொண்டிருக்க

 

அதன் இசையோடு

போட்டி போட

பற்பல புல்லினங்கள் இன்னிசை பாட

 

ஊர்வன உயிரிகள்

சரசரவென சருகுகள் மீது சடுதியில் செல்ல

 

இரைதேடும் வலிய மிருகங்களின்

கர்ஜனைகளும் உறுமல்களும்

சுருதி சேர்க்க

 

உயிர் பிழைக்க ஓடிச்

செல்லும் எளிய

மிருகங்கள் பாதவோசை

ஜதி சேர்க்க

 

ஓங்கிய பெருங்காடு

புதிர்கள் பல நிறைந்த

ஓர் அதிசயமே

உயிரிகளின் உன்னதங்களை

நாமுணர்தல் அவசியமே!

 

பசித்தால் ஒழிய

சிங்கமும் புலியும்

வேட்டையாடுவதில்லை.

 

அடுத்துக் கெடுக்கும்

அற்ப புத்தி

எந்த விலங்குக்கும்

அறவே இல்லை

 

தீயாய் தகிக்கும்

பெட்ரோல் விலை உயர்வு

துள்ளி ஓடும் மானினத்தை

வருத்துவதில்லை

 

தலைமுறை தழைத்தோங்க

எந்த விலங்கினமும்

சொத்துக்களை

சேர்ப்பதில்லை..

 

காட்டதிகாரத்தில்

வஞ்சனை பொய்புரட்டு

துரோகங்களுக்குக்

கிஞ்சித்தும் இடமில்லை.

 

ஆறறிவுள்ள மனிதர்காள்

ஐந்தறிவுள்ள விலங்குகள் கூறும் பாடம் புரிகிறதா?

 

இப்பூவுலகு பல்லுயிர்க்கும் பொதுவானது!

அதனைச் சொந்தம் கொண்டாடி

பேராசையால்

சூறையாடுதல்

மன்னிக்கவொண்ணா

பெருங்குற்றம்!


---------------------------------

முல்லை - குத்தனூர் சேஷுதாஸ் 


கல், முள் மட்டுமா கானகம் எனும் முல்லை

   காய்கள், கனிகள் இன்னும் பலப்பல உள்ளவை

 

*அல் போல் அடர்ந்தது, மரங்கள் நிறைந்தது

   ஆதவன் ஒளியும் அங்கே ஊடுருவ முடியாதது

 

வல் விலங்கு உலவினவாம் அச்சம் இல்லை

   வழியில் வாரியம், கல்லூரி, ஆஸ்ரமம் இல்லை

 

சொல் காக்க *தாதையின் இராமன் அன்று போனது

   சுரக்கும் தமிழ் ஊற்று நம் கம்பன் தோண்டியது

 

பல் காட்டும் மந்திகள் கூத்தடிக்கும் இடம்

   பாட்டி சொலும் கதைகள் இதுவே களம்

 

வில், வேல் ஏந்தி  அன்று வேட்டையாடினார்கள்

   விளைந்ததை, வளர்ப்பதை அவ்வாறு காத்தார்கள்

 

கொல்லும் துப்பாக்கியோடு குழுக்கள் இன்று சுற்றுது

   கொம்பு, தந்தம், தோல்...கொள்ளை கொள்ள அது

 

இல் வாழ்வு கசந்தோர்க்கு அடைக்கலம் கொடுத்தது

   இல்லாமல் போனதால் எங்கே நாம் போவது?

 

*அல் -- இருள்,  *தாதை -- தந்தை


------------------------------

 முல்லை - மோகன்

செம்புலங்களும்  பெயல்நீரும் ஒன்று கலந்து அன்புடை நெஞ்சங்களின் கலப்பை நினைவூட்டும்

 

கற்றுக்கறவை கணங்கள் பல ஒன்று கூடி உறவாடும்: ஆநிரை மேய்த்தானைப் பரவும்

 

மரக்கூட்டங்களும் ஆலம்விழுதுகளும்

மந்திகளின் விளையாட்டுக்கூடங்கள்!

 

ஒன்றுக்கொன்று எதிரிகளாக இருப்பினும்

பசிப்பிணி தணிக்க மட்டும் கொலை வெறி கொள்ளும் மிருகக்

கூட்டங்கள்.

 

முல்லைக்குத் தேரீந்தான் பாரீ அன்று

இன்று முல்லைக்கொடிகள்

காடு திருத்தி 'நாடாக்க' சாய்க்கப்படுகின்றன.

 

காடுகளை அழிப்பவர்தம்மை

'காட்டுமிராண்டி' என்றழைக்காமல்

'நாட்டுமிராண்டிகள்' என்றாலென்ன!

 

குறிஞ்சிக்கு அடுத்த மனித நாகரீகப்பாதையான, பல இயற்கை வளங்களை உள்ளடக்கிய

 முல்லை  நிலங்கள்

அழிக்கப்படுவது

பஸ்மாசுரன்தன்தலையில்கை வைத்த கதைதான்!


 


No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...