Tuesday, August 27, 2024

குறிஞ்சி

 குறிஞ்சி - ஸ்ரீவி

இயற்கையன்னை எடுக்கும்

அவதாரங்களில்

பிரமிப்பூட்டி

அதிசயிக்க வைக்கும்

வடிவம் மலைகளே.

 

நெடிதுயர்ந்து கம்பீரமாய்

விண்ணை முட்டி

நிற்கும் மலையுச்சியின்

அழகில் மயங்கி

ஆகாய மங்கை

மேகங்களால் தழுவி

உச்சி முகர்ந்து மயங்கி

பின் மெதுவே தவழ்ந்து

செல்வது ஓர் அழகு!

 

தனது செழிப்பான

மேனியெங்கும்

தேங்கி நிற்கும் வளமிகு உயிர்ப்பால் ஓங்கி உயர்ந்து செழிப்புற நிற்கும் அடர்மரங்களால்

மேனியெல்லாம்

மூடப்பட்டு கரும்பச்சை

நிறமாய் திடமாய்

நிற்பது ஓர் அழகு..

 

இளம்பச்சை மரகதப்

போர்வை போன்ற

புல்வெளிகளை

ஆடையாய் உடுத்தி

தன் ஊடே வெள்ளிக்

கம்பி போல வளைந்து

நெளிந்து சலசலத்து

ஓடும் ஓடைகளால்

அவை மேலிருந்து

பள்ளம் நோக்கிப்

பாயும் அருவிகளால்

மெருகூட்டப் பட்டதும் அழகு..

 

வேறோரிடத்தில் செம்மண் ஆடை உடுத்தி,

செங்குன்றங்களாய்

மாணிக்கக் கற்கள்

பதித்த மலைகளாய்

செக்கர் சிவந்து நிற்பதும்

கண்கவர் அழகு..

 

பிறிதோரு இடத்தில்

அடர்பனி சூழ்ந்து

வெள்ளிப்பட்டாடை போர்த்தி

கதிரவன் ஒளிக்கதிரால்

வெண்முத்து பதித்தார் போல்

தகதகப்பது ஓர் அழகு..

 

பாலைவனங்களில்

மண்குன்றாய் உருமாறி

தகிக்கும் வெயிலில்

பளபளக்கும் பொன்னிற

ஆடை உடுத்தி

கண்களை கூசச்செய்யும்

மினுமினுப்பும் ஓர் அழகே.

 

இயற்கையன்னையின்

ஐந்திணைகளையும்

தன் பேராசையால்

அழித்து நாசமாக்கி

எங்கெங்கும் கான்க்ரீட் காடுகளை

உருவாக்கி வைத்திருக்கும் மனிதகுலத்தின் நாசகர வேலைகளைக் கண்டு

மனம் கொதித்து

எரிகுழம்பாய் வெடித்துச் சிதறும்


எரிமலையும் அழகுதானே.

அது உணர்த்தும்

உண்மையை உணரா

மனித இனம்

இன்னலுறுவதும்

அதனால்தானே..

 

மலைகளில் இத்துனை நிறங்களா..

அவை கற்பிக்கும்

பாடங்கள்

இத்துனை வகைகளா

 

இயற்கை அன்னையே..

போற்றுகிறோம்

உன்னையே..



----------------------------------------

 குறிஞ்சி  - மோகன்

மலைகள் விண்ணுயர

உயர்ந்து வானையும்

பூமியையும் இணைக்கும்பாலங்கள்

 

மழை பொழிய வைக்கும் கரியா ஊக்கிகள்

 

மலை மகள்,தினைப்புனவன வள்ளித்தாய்,

அறுபடை வீடு கொண்ட குமரன்

 எனத் தெய்வங்களின்

தாயகம் மலைகள்

 

உழைத்துக் களைத்த உள்ளங்கள் உல்லாசம்

தேடி வருவது குளிர்ச்சியான மலைகளே

 

நாட்டு எல்லை காத்துப்

பகைவரைப் பெருமூச்சு

விடவைப்பதும்

மலைக்கூட்டங்களே


 

மழை நீரை உள்வாங்கி

அருவிகளாகவும் ஆறுகளாகவும் தந்து

பூமி சகோதரியைக்

குளிர வைத்து வளமாக்கும் அண்ணன்

மலைகள்!

 

தம்மையே சிதைத்து

சாலைகளை உருவாக்கினாலும்

தாங்கி் நிற்கும் தியாகச்

செம்மல்கள்!

 

கவி கபிலரைப்போலக்

குறிஞ்சியைப் போற்ற

இயலாதிருப்பினும்

மலை முகடுகளைப்பார்த்துப்

பார்த்து , இன்னும

எட்டிப் பிடிக்க வேண்டிய சிகரங்கள்

பல உள என பணிந்துநிற்கும்

மானிடன் நான்.


-------------------------------------

 குறிஞ்சி - குத்தனூர் சேஷுதாஸ்

 

குறிஞ்சியது மலையும், அது சார்ந்த இடமும்

   குளிரும், பனியும் இங்கு கொலுவிருக்கும்

 

பறிப்பார் இல்லாமல் பூத்துக் குலுங்கும்

   பாலருவி பலவும் பொங்கி வழியும்

 

முறிந்து கிளைகள் அங்கங்கே சாயும்

   மூல காரணமோ தேன் கூடுகளாகும்

 

திரியும் மேகங்கள் திண்ணையாய் ஓயும்

   தென்றலும், வாடையும் இங்கிருந்து வீசும்

 

கரியும், பிடியும் இங்கு குட்டியுடன் உலவும்

   காதல் மலரும் வள்ளி கல்யாணம் நிகழும்

 

உறிஞ்சுவது இயற்கையை மனிதன் ஒருவனே

   உல்லாச விடுதி கட்ட வீழ்வது தருக்களே

 

தறி கெட்டு ஓடுவது மனிதன் தன் பேராசை

   தாதுக்கள், கனிமங்கள் சுரண்டலாம் அவை

 

சரியும் மலைகள் அவை சமீபத்தில் அதிகம்

   சாப்பாட்டில் உப்பு சேர்த்தால் அவனுக்கு புரியும்.

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...