Saturday, August 31, 2024

நெய்தல் (I)

 நெய்தல்ஸ்ரீவி

உவர் காற்றும் ஓயா அலையும்

நாள் முழுதும் வந்தடிக்கும்

பரதவரின் படகுகளோ

சீறிப் பாயும்

மீன் பிடிக்கப் போவோர் மீது

அண்டை நாட்டு

இராணுவத்தின்

குண்டும் பாயும்

 

கடலே பல்லுயிரின் அடைக்கலமாம்

இயற்கையன்னையின் படைக்கலமாம்

ஆகப் பெரிய திமிங்கலம் முதல்

ஆகச் சிறிய நுண்ணுயிர் வரை

கோடானுகோடி நீர்வாழ்

உயிரினங்களின்

சொர்க்க பூமியாம்.

 

முத்தெடுக்க மூச்சடக்கி கடலில் மூழ்கி

கொத்துக் கொத்தாய் முத்துச்சிப்பிகள்

எடுக்கும்

பரதவரின் வாழ்விற்கு

உத்தரவாதம் ஏதுமில்லை

 

அவரெடுக்கும் முத்துக்கு விலைமதிப்போ

விண்ணைத் தொடும்

அவரது உயிர் போயின்

அநாதையாய் அவருடல்

மண்ணுள் போகும்.

 

கடலுள் போவோர்

திரும்பி வந்தால்

குடும்பம் மகிழும்

இல்லையெல்

'மீனவர்கள் மாயம்'

என செய்திகள் சொல்லும்

 

தினந்தினம் செத்துப் பிழைக்கும்

பரதவரின் வாழ்க்கையோ

பரிதவிப்பு வாழ்க்கையே!

ஆனாலும் அவர்கள்

தெய்வம்

கடலன்னையே!

 

பேராசை கொண்ட

பேய்மன மனிதகுலம்

கடலையும் விடவில்லை!

நெகிழி முதல்

மின்னனுக் கழிவு வரை

கொண்டு போய்

கொட்டுகிற

குப்பைத் தொட்டியாய்

அவன் மாற்றி விட்டான்..

பூவுலகு சூழ் ஆழியையும் சீரழித்து விட்டான்.

 

நெய்தல் திணையை நைதல் செய்து

சீரழிக்கும்

மனித குலம்

திருந்த வேண்டும்

இல்லையேல்

வருந்த வேண்டும்


----------------------------------------------------

 நெய்தல் - சங்கீதா 

நீல வானின் கண்ணாடி

உப்புக் காற்று வீசுமடி

மீனவர் குலத்தின் தெய்வமடி

தாவரங்களோடு

நீந்துவன,ஊர்வன, பறப்பன

என பல்லுயிர்க்கெல்லாம்

தாயின் மடி

 

அத்தை மடி மெத்தையடி

நத்தைக்குக் கடல்

அத்தை மடி

கடலிலும் நட்சத்திரம்

தெரியுதடி

குதிரையும் கூட ஓடுதடி

பவளக் கொடிகள்

மின்னுதடி

பலரும் செல்லாத

தண்ணீர் தேசமடி

அலைகள் ஓயாமல்

அழைக்குதடி

 

மணலுக்குள் கால்

புதைத்து நடப்போமடி

சங்கும் சிப்பியும் தோண்டி

எடுப்போமடி

மணல் வீடும் கட்டி

புகுவிழா செய்வோமடி

சில நொடிகள் கழிந்தவுடன்

கலைப்போமடி

 

கப்பல்கள் நீர்வலம்

போகுதடி

கலங்கரை விளக்கமே

இரவில் வெளிச்சமடி

துறைமுகம் பார்த்து

நிற்குதடி

வாணிபம் நல்லா

நடக்குதடி

மாசாத்துவான் மருமகளே

காவலடி

 

முத்தாயி "முத்து" கேட்டு

முடிக்கும் முன்னே

முத்துக் குளிக்க முத்து

மூச்சை அடக்குவானடி

அவன் வரும் வழி மீது

விழி வைத்தே

கயல் விழி இரண்டும் நோகுமடி

 

வலையை மீனவன் விரிக்கையிலே பல

நண்டும் மீனும்

மாட்டுமடி

குழம்பு வாசம்

மூக்கைத் துளைக்குமடி

மருந்துத் தயாரிப்பும்

ஜோரா நடக்குதடி

 

ஆறுகள் கடல் சேர வருகையிலே

நெகிழியும்(plastic)

வந்து சேருதடி

கப்பல் எண்ணெயும்

கொட்டுதடி

உயிரினமெல்லாம்

சாகுதடி

 

சிகப்பு கொடி பறக்குதடி

புயல் காற்று கூரையை சாய்க்குதடி

அபயக் குரல்கள் கதறுதடி

கடல் நீருடன் கண்ணீரும்

கலக்குதடி

கடலே உப்பாகிப் போனதடி

 

நெய்தலில் சாய்ந்த மரங்களெல்லாம்

கண்ணீர்க் கதையை

சொல்லுமடி

கடல் சார்ந்தோர்

துயர் நீக்கிக் கரையேற்ற

கரங்கள் பல வேண்டுமடி

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...