Saturday, October 31, 2026

படம் பார்த்து பா எழுது..

 படம் பார்த்து பா எழுது..


கயிற்றில் வண்ணம் தோய்த்தெடுத்தே


கன்னியர் தம் முன்னிலையில் 


 கயல்விழிப் பெண்டிரைக் 


கருத்துடன் கண்டேதான்......


கட்டில் பின்னும் பழக்கத்தை


எண்ணத்தில் தாம் கருதியதை


வண்ண நூல் கொண்டு 


வாகாய் நெய்து வழங்கிடுவார் ! 


பாகால் அமைந்த உணவே போல் 


பார்த்தே வியந்து மகிழ்ந்திடுவோம் ! 


பாரதம் போற்றும் கைத்தொழிலைப் 


பாங்குடன் நாமும் வளர்த்திடுவோம் 

         ….அக்ரி சா.இராஜா முகமது


==============

இரு நிலவுகள் 


நீலம், சிவப்பு உடையில் இரு பெண்டிர் 

   நிஜம் போல் கயிற்றுக் கட்டிலில் பாரீர்!


கோலமது  கொஞ்சமும் குறையவில்லை

   குளிர் இரு நிலவு பூண்டனவோ வளை!


காலத்தால் கருந் தாடி ஆகலாம் வெண்மை 

   கலையது தேயாது வளரும் இது உண்மை 

   

ஞாலமிதில் இது போல் பல உளவாம் திறமை 

   நசுக்க முடியுமா இத் திறமையை வறுமை ?


__. குத்தனூர் சேஷுதாஸ் 31/10/2026


==============

முதுமை முதிர்ந்த முதியோன் முன்கை


பிணைத்த பிணையில் பிறந்தன பாவை;


பாகை பூண்ட பழங்கை நுட்பம்


காண்போர் வியக்கக் கலைபல காட்டும்.


நீலத் துகிலள் நெடுநுதல் நங்கை,


சேலத் துகிலள் சேயிழை செவ்வி;


பொன்னணி பூண்டு பொலிந்த மார்பில்


வன்றொடி வளைகள் வனப்புடன் மின்ன.


தூரிகை இன்றித் தொல்கயிற் றிழையால்


ஓவியம் வரைந்தான் உரவோன் உவப்பால்;


வானீ லமும்செவ் வண்ணமும் வகுத்து


நானூல் நெய்தனன் நயமுற நாளும்.


செங்கல் சுவரும் செம்மண் முற்றமும்


அங்கண் அமைதியில் அருகிருந் தனவே;


துயிலும் கட்டில் தோற்றம் தாங்கி


மயிலன மகளிர் மாண்பினைக் காட்டிற்று.


எளிய கட்டிலும் ஏத்தும் கலையாம்,


ஒளிரும் உழைப்பும் ஒண்மைப் பேரன்பும்


இணைந்த கையால் இயலும் என்பதை


நனைந்த நாரும் நவிலும் காவியம்✍️


- திருஞானசம்பந்தம்

=============================


அழகுத் தையல்களும்* வண்ணப்பின்னல்களும்
********
கயிற்றிலே கலை வண்ணம் கண்ட இவர் கைவினைஞர்.
பார்த்து ரசித்து பா (!)எழுத வந்தவன் நான் பாமரன்.

கைப்பேசிகளை அலுப்பின்றி தட்டும் கைகள்  நிறைந்த உலகில்
சலிப்பின்றிப் பின்னிப்பின்னி
புது உலகம் படைக்கும்  இவர் கைகள்.

கயிறு திரிப்பவர் பலருண்டு.
ஆனால் கயிறோவியம் படைக்கும்இவர் பாரம்பரியத்தின் காவலர்.

கிராமத்தின்அதிகாரக்கட்டில் கயிற்றுக் கட்டில்.
இவர்படைப்பதோ அழகின் கட்டியம்கூறும் கட்டில்.

பாரம்பரியத்தின் வேர்களோ இவர் கைகளில் பின்னிச்சுழலும்
கயிறுகள்!

இவருக்கு வயதாகி விட்டது;
இவர் கைகளுக்கு இல்லை.
கயிறுகளும் காவியம் படைக்கும் இவர் கை வண்ணத்தால்!

"ஆடை கட்டி வந்த நிலவு"கள் போன்ற பொலிவு;
ஆடாது அசங்காது காட்சி தரும்
ஆரணங்குகள்! 
ஏன்?
கயிறுகள் அழகோவியங்களாக
உருமாற்றுகின்றனவே!

இந்தக் கட்டிலில் படுத்தால்
நல்ல உறக்கம் நிச்சயம்
வண்ணக் கனவுகளோடு!



 

*(தையல்- பெண்)
- ,இ.ச.மோகன்,

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...