Saturday, October 31, 2026

படம் பார்த்து பா எழுது(அலைபேசி)

 =====================

சிறார்களின் சிந்தனையை செல்லரிக்கும் செல் 

செழிப்பாய் எம் செல்லங்கள் வளரவேண்டும்

அவர்களை விட்டு நீ செல்


- ஸ்ரீவித்யா


=====================

*தகவல் தொடர்பின் பரிணாமம்!*

அன்று அந்தரங்கத் தொலைபேசி,

அடுத்தவர் குரல் கேட்கக் காத்திருந்தோம்!

தொலைவிலிருந்து குரல் கேட்டாலே

தொல்லைகள் மறந்து மகிழ்ந்திருந்தோம்!

அடுத்து வந்தது பேஜர்,

அவசரச் செய்தியைச் சொல்லிடும்!

எண்ணற்ற இலக்கங்கள் திரையில் தோன்ற,

எதிர்பார்ப்போடு தொலைபேசியைத் தேடினோம்!

காலத்தின் மாற்றத்தில் செல்போன் வந்தது,

கையடக்கத்தில் உலகை வென்றது!

எங்கிருந்தாலும் பேசிடும் வசதி கிடைத்தது,

எல்லோரின் கைகளிலும் இடம்பிடித்தது!

தொழில்நுட்ப வளர்ச்சியில் ஸ்மார்ட்போன் பிறந்தது,

தொட்டவுடன் உலகமே உள்ளங்கையில் வந்தது!

பேச்சு, படம், செய்தி, வங்கி என அனைத்தும்,

பேசாமலே விரல்களின் அசைவில் நடந்தது!

தூரத்தைச் சுருக்கித் தொழில்நுட்பம் வளர்ந்தது,

தகவல்களின் வேகம் விண்ணையும் கடந்தது!

கருவிகள் மாறின, காலமும் மாறியது,

மனித உறவுகள் மட்டும் மாறிவிடக் கூடாது!

கையில் இருப்பது கைப்பேசி மட்டுமே,

அதுவே நம் வாழ்க்கையாகிவிடக் கூடாது!


- தியாகராஜன்

==============

அலைபேசி

உலகத்தை உள்ளங்கையில்

உறைய வைத்த அதிசயம்!

கடல் கடந்த உறவுகளையும்

கண்முன் சேர்க்கும் அற்புதம்!

எங்கோ நடக்கும் நிகழ்வுகளும்

இமைக்கும் நேரத்தில் வந்திடுமே!

விரல் நுனியில் விரியும் உலகம்

வியப்பின் எல்லை தாண்டிடுமே!

கற்றிட உதவும் களஞ்சியம்,

காணாத உலகின் வாசற்படி!

கையாளும் விதம் தவறிவிட்டால்,

காலத்தை விழுங்கும் இரும்புப் பிடி!

விரல் நுனியில் ஆயிரம் செய்திகள்,

விழிகளின் முன்னே வண்ணக் காட்சிகள்!

வீட்டுக்குள் உறவுகள் அருகினிலே,

உள்ளங்களோ தனிமைச் சிறையினிலே!

முகம் பார்த்துப் பேசும் உறவுகள்

முகத்திரைக்குள் முடங்கிப் போக,

அருகில் இருப்போர் அந்நியராக,

தொலைவில் இருப்போர் நெருக்கமாக!

கத்தியின் முனையில் இரு பக்கங்கள்—

காக்கவும் செய்யும், கொல்லவும் செய்யும்!

அலைபேசியும் அப்படித்தானே,

அறிவையும் வளர்க்கும், மழுங்கவும் செய்யும்!

பார்க்கத் தொடங்கினால் பார்த்துக்கொண்டே,

பொழுதும் பறப்பது தெரியாதே!

விழிகள் திரையில் சிறைப்பட்டால்,

வாழ்வின் அழகும் புலப்படாதே!

அலைபேசி அல்லல் பேசியாகாமல்,

அறிவை வளர்க்கும் கருவியாக,

பெரியோர் முதலில் வழிகாட்டி,

சிறாரை நல்வழி நடந்திடட்டும்!

அளவோடு அதனைப் பயன்படுத்தி,

அறிவை வளர்க்கும் வழி தேர்ந்து,

திரையில் தொலைந்திடும் நேரத்தை

உறவின் அன்பால் நிரப்பிடுவோம்!

கருவி நம் கையில் தவழட்டும்,

கட்டுப்பாடு நம்மிடம் நிலைக்கட்டும்!

திரையில் உலகைக் காண்பதோடு,

நிஜ உலகையும் ரசித்திடுவோம்!

-

- லதா


No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...