Wednesday, October 14, 2026

குடை வள்ளல்!

 குடை வள்ளல்!

நேற்று பெய்த மழைக்கு

இன்று குடை பிடித்தது காளான்!



நீ சோம்பேறியா?

அல்லது அடுத்த மழைக்காக

இப்பொழுதே குடை பிடிக்கிறாயா?


யாருக்காகப் பிடிக்கிறாய் நீ?

மண்ணுக்காகவா?

அல்லது உன் கீழ் வாழும்

சிறு புழுக்களுக்காகவா?


எவ்வாறாயினும்,

உன் குடைகளையும் விட்டுவைப்பதில்லை மனிதன்;

உணவாக்குகிறான் உன்னையும்!


உனக்கிருக்கும் கொடை உணர்ச்சி

இம்மியளவேனும் அவனிடம் இருந்திருந்தால்,

மனிதகுலம் என்றோ தழைத்திருக்கும்!

அனைத்து உயிர்களையும் அரவணைத்து

வாழக் கற்றிருக்கும்!


உன்னைப் ‘பூஞ்சைக் காளான்’

என்று பெயரிட்ட இந்த மனிதன்தான்

பூஞ்சை —

உன் வாஞ்சையை அறியாத பூஞ்சை!


இயற்கையின் கொடை வள்ளலான உன்னை

செயற்கையாக வளர்த்து

செல்வம் சேர்க்கிறான்!


தன் சிறுமையை அறியாத மனிதன்

தன்னைப் பெரியவனென்று நினைக்கிறான்!

அவனைப் புதைத்த இடத்திலும்

நீ ஒருநாள் குடை விரித்துக் காப்பாய் —

அதை அவன் அறிவானா?

இயற்கையின் பெருந்தன்மைக்கு

இதுவே சாட்சி!


- லதா

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...