*அலைபேசி –அனைவரின் ஆறாம் விரல்!*
கலியின் காலம் கவ்விய சூது!
நனிபல பயவா நவிற்றும் வாது!
உள்ளங்கை உறையும் உலகத் தூது!
ஊழியும் விடாது விலங்கிடும் கைது!
புலரியும் நீங்காது, போழ்தும் பிரியாது!
துயிலிடை மார்பில் துஞ்சும் மாது!
தீதென உணரினும் தினமும் நாடும்!
வையத் திதற்கிணை வேறிலது!
ஊரும் உறவும் உள்வந்து சேர்க்கும்!
தனதெனக் கொளீஇத் தனிமை வளர்க்கும்!
தாதுறு வளம்போல் தகவல் சுரக்கும்!
நுண்செய்தி நுவலும் நூதனத் தூது!
இளையோர் முதியோர் என்னாது இழுக்கும்!
தோதுறத் தோன்றித் துன்பம் விளைக்கும்!
சேதுவாய் நின்று தேயம் இணைக்கும்!
சாதுவாய் இருந்தும் சதிசெயும் அன்றே!
நோய்தீர் மருந்தாய் விரல்முனை நிற்கும்!
மெல்லென நுழைந்து மனத்தைக் கவரும்!
மோதுவார் தம்மையும் முகமுகம் சேர்க்கும்!
போதும் எனினும் போகாது நெஞ்சு!
யாதும் ஊரே; யாவரும் கேளிர்
என்றே ஞாலம் முழுதும் ஒன்றென இணைக்கும்!
கருவியாய்க் கொளின் அறிவின் துணைவன்!
அடிமையாய்ப் புகின் அழிவின் பகைவன்!
யாம்அதை ஆள்வதோ? அது எமை கொல்வதோ?
காண்மின் தோழீர், கையின் கொல்லோ!
-வே.திருஞானசம்பந்தம்
====================
●०●०●०●०●०●०●०●०
செல் எனும் சிறையினுள்ளே!
●०●०●०●०●०●०●०●०
சுதந்திரத்தின் பொருளறியா பிள்ளை!
செல் எனும் சிறையினிலே சிக்கியுள்ள கிள்ளை!
பார்த்து பரிதாபப் படுது பறந்து திரியும் பறவை!
கைபேசி பறித்திட்டது சிறார்களின் சிறகை!
-,ஸ்ரீவி,
=========
அலைபேசி வலையில்...
அலைபேசி அகிலத்தை ஆளும் இக் காலம்
அதை மறுக்க ஆவோம் அன்னியர் நாமும்
உலையில் அரிசி வேக அவசியம் இனி இல்லை
உணவு கதவைத் தட்டும் அசைக்க ஒரு விரலை
மலையாகத் தோன்றும் வேலைகள் எல்லாம்
மறு நொடி முடித்து இது மலைக்க வைக்கும்
குலை குலையாய் அழகுகள் தொங்கும் வெளியே
குழந்தை முதல் அனைவரும் அலைபேசி உள்ளே
வலை விரித்து வைக்கப் பட்டுள்ளது எங்கும்
வரிசையில் அறியாமை, பேராசை சிக்கும்
கொலை, கொள்ளை... நிகழ இது துணை போகும்
கொடும் பாதகரைத் தேடி கொண்டும் வரும்
தலைக்கு மேல் கத்தி தொங்குகிற நிலை
தப்பிக்குமா இதில் வரும் தலைமுறை?
விலையில்லா நேரமது மணிகளில் கரையும்
விழுங்குமா இச் செய்தி எனது செவியும்?
__. குத்தனூர் சேஷுதாஸ் 31/10/2026

No comments:
Post a Comment