Wednesday, October 21, 2026

குட்டி போடும் மயிலிறகு

கொட்டிக் கொடுத்தும்...


குட்டி போடும் அன்றாம் மயிலிறகு புத்தகத்தில் 

   கூட வைத்தோம் பனைப் பஞ்சு பக்கத்தில் 


நட்டு வைப்போம் விழும் பல்லைத் தரையில் 

   நன்கு வளருமாம் வேறொன்று விரைவில் 


*முட்டம் கரைய வருவார் விருந்தினர் என்று 

   மூடாமல் கதவு திறந்து வைத்தோம் அன்று 


கொட்டை விழுங்க வளரும் வயிற்றில்  மரம்

   கொட்டிக் கொடுத்தும் திரும்புமா அப் பருவம்?


*முட்டம் -- காகம் 


__. குத்தனூர் சேஷுதாஸ் 21/10/2026

===============

நம்பிக்கை எனும் பூதக்கண்ணாடி: குழந்தைப் பருவத்தின் மந்திரக்கோல்


"மயிலிறகு வளரும்" என்ற அந்தச் சிறு வயது நம்பிக்கை, வெறும் ஒரு மழலைக்காலக் கற்பனை மட்டுமல்ல!

 அது நம் வாழ்க்கையின் ஆகச்சிறந்த தத்துவப் பாடம்.


* மயிலிறகு குட்டி போடும், அரிசி போட்டால் வளரும் என்று நம்பி, தினமும் புத்தகத்தைத் திறந்து பார்க்கும் அந்த வினாடிகளில் இருந்த பதற்றமும் மகிழ்ச்சியும் இன்று எந்த ஒரு விலையுயர்ந்த பொருளிலும் கிடைப்பதில்லை. அறிவியல் பூர்வமாக அது சாத்தியமில்லை என்று தெரிந்தாலும், அந்த விநாடிகளில் நம் மனம் அடைந்த பேரானந்தம் உண்மையானது.

* ஒரு மயிலிறகை வளர்ப்பதற்காக நாம் காட்டிய அக்கறை சாதாரணமானது அல்ல. அதற்குப் பசிக்குமே என்று சில அரிசிப் பருக்களையோ, அவலோ உள்ளே வைத்து, யாரும் தொட்டுவிடக் கூடாது என்று ரகசியமாகப் பாதுகாத்தோம். ஒரு பொருளின் மீது நாம் செலுத்திய அந்த அலாதியான அன்பும் பராமரிப்பும்தான், பிற்காலத்தில் நம் உறவுகளையும் கடமைகளையும் நேசிக்கக் கற்றுக்கொடுத்தது.

* வாழ்க்கையில் எல்லாமே உடனடியாகக் கிடைத்துவிடக் கூடாது, சில விஷயங்களுக்காகக் காத்திருப்பதிலும் ஒரு தனி அழகு இருக்கிறது என்பதை அந்த மயிலிறகு நமக்கு மறைமுகமாகக் கற்றுக்கொடுத்தது.

-------------------------------------

மயிலிறகு வளரவே இல்லை... ஆனால் அதை நம்பிய நம் மனமும், கற்பனைத் திறனும், அன்பும் பிரம்மாண்டமாக வளர்ந்துவிட்டன!

-----------------------------------

இன்றைய குழந்தைகளின் பொறுமை ஒரு விவாத மேடையே வைத்து விடலாம்..

----------------------------------

உலகத்தை விட  மனம் வேகமாக சுழல்கிறது...


- தேவி அருண்,

============

*முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி, மயிலுக்குப் போர்வை கொடுத்தான் பேகன்.* இருவருக்குமே வேறு வழிகள் இருந்தும், அவர்கள் செய்த அந்தச் செயல்களால்தானே இன்றளவும் போற்றப்படுகிறார்கள்!


அது வெறும் கொடையல்ல, பிறர் உணர்வைப் போற்றிய பெருந்தன்மை!


*அப்படித்தான் வாழ்க்கையும்…* எல்லாவற்றையும் ஆராய்ந்து, உண்மையைத் தேடி, *ஒவ்வொன்றையும் நிரூபித்துக் கொண்டிருந்தால் நிம்மதி ஏது?*


சிலவற்றைத் தெரிந்தும் தெரியாததுபோல், அறிந்தும் அறியாததுபோல் கடந்து செல்வதில்தான் வாழ்க்கையின் நிம்மதியே அடங்கியிருக்கிறது!


*மயிலிறகு குட்டி போடுமா என்பது முக்கியமல்ல… அதை நம்புவதால் யாருக்கு என்ன நன்மை, என்ன தீமை என்பதே முக்கியம்!* 😊


- தியாகராஜன்,

===================

கொஞ்சம் மெதுவாக


கொஞ்சம் மெதுவாக 

பயன்படுத்துங்கள் 

கொஞ்சம் மெதுவாக 

பொய்களைக் கூறுங்கள் 

கொஞ்சம் மெதுவாக

இதயத்தை உடையுங்கள் 

கொஞ்சம் மெதுவாக

முதுகில் குத்துங்கள் 


புத்தகத்தில் வைத்த 

மயிலிறகு

குட்டி போடும் என 

காத்திருப்பவன் நான் 


இத்தனை வேகத்திற்கு 

பழக்கப் பட்டதில்லை


-அறிவு எனும் நான்

- முகம்மது சுலைமான்

===================



No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...