நம்பிக்கை
பாலைவனத்தில் ஒட்டகம் போல
நாமும் நடப்போம் !
நாளை வரும்
சோலையை நோக்கி!
தனியாக அல்ல
நம்பிக்கை துணையோடு!
-வித்யா
====================
மணல்மலை சூழ்ந்த மண்பெரு வெளியில்,
வணங்கா மனத்தார் வாழ்வர் வளமாய்!
ஒட்டகம் ஓயா உழைப்பால் உதவும்,
கட்டுடல் கொண்டு கடந்திடும் காதம்!
கனலுறு கதிரிலும் கலங்கா காவலர்,
மனமெனும் மறத்தால் மாநிலம் காப்பார்!
எல்லையில் இரவும் இமையா திருப்பார்,
நல்லவர் நெஞ்சில் நாடே நிற்கும்!
மண்ணுள் மறைந்த மணிநிதி மீட்பார்,
எண்ணெய் எரிவளி எடுப்பார் எழிலாய்!
ஆழ்கடல் அகழும் அரிய ஆற்றல்,
வாழ்வினை வளர்க்கும் வலிமை வாய்ந்தோர்!
குழாய்வழிக் கொணர்ந்து குடிசைகள் சேர்க்கும்,
விழாவென விளக்குகள் வீசிடும் வெளிச்சம்!
தொய்விலாத் துணிவே தொடரும் துணையாம்,
வெய்யோன் எனவே வீறுடன் விளங்கும்!
முத்திறம் மிளிரும் முயற்சியே முதன்மை,
வித்தகம் விளைந்து வையகம் வளர்க்கும்!
வாழ்க உழைப்பு! வளர்க மனிதம்!
ஆழ்ந்த அமைதி அகிலம் ஆள்க!
- திருஞானசம்பந்தம்
===========================
ஒட்டகத்தின் புலம்பல்
*******
ஒ என்ற தமிழ் எழுத்தை எனக்கு மனதில் பதிய வைத்த ஒட்டகமே!
ஆரம்பப் பள்ளியில் என் ஆசான்
ஆனாய்!
நீ நீரில்லா பாலைவனத்தின் கப்பல்
உன்கால்கள் தட்டை ; நீமணலில் வேகமாக நடக்க ஏதுவாக; ஆறறிவு படைத்த மனிதனால் உனக்கு ஈடாக நடக்க முடியுமா?!
மூன்றுஇமைகள் உனக்கு; கண்களில் மணல் படாமலிருக்க
இயற்கை உனக்களித்த குளிரூட்டும்கண்ணாடி!
உன் மூக்குத் துவாரங்கள் மூடிக்கொள்ளுமாம் மணல் புயலடித்தால்!
வியர்வையின்றி வெப்பம் தாங்குவாய் நீ; உடலில் நீரையும் சேமிப்பாய்.
மனிதனால் இவையெல்லாம் முடியுமா?!
மனிதனுக்கு உண்டு திமிர்
உனக்கு உண்டு திமில் -
கொழுப்பைசேமிக்க; உணவில்லாதபோது ஆற்றலுண்டாக.
நாடு காக்கும் நம்வீரரின் உற்ற துணை நீ; வழியும் நடத்துவாய்; சுமையும் ஏற்பாய்.
பாலைவனத்தில் உன்வழிகாட்டுதல் இல்லாமல்
மனிதன் செல்ல முடியுமா?!
"ஓட்டகத்தைக் கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ!"
எனும்படி காதலர் சேர நீ பாட்டுடைப் பொருள் ஆனாயே!
இவ்வளவு திறமைகள்
இருந்தும் உன்புலம்பல் ஏன்?
மனிதனைச் சுமக்க வேண்டி உள்ளதே!
- இ.ச.மோகன்,
====================
ஒட்டக கவிதை
ஓங்கி உயர்ந்த ஒட்டகமே
உன் பெருமையை யார்
அறிவார்?
பெரும் வீரனுக்கு நிகராக பல பலமாதங்கள் நீர்ப்பருகாமலும் உணவு உண்ணாமலுமே உன்னால் வாழ முடியுமாமே!
குதிரை படை போன்று ஒட்டகப் படையும் உள்ளதாமே!
பாலைவன கப்பல் என்று உனக்கு எதற்கு பெயர் வந்தது?
பலதரப்பட்ட மக்களையும் சுமந்து செல்வதாலா?
சரக்கு கப்பல் போன்று சரக்குகளை ஏற்றி செல்வதாலா?
பாலைவனம் என்றால்
அதீத குளிரும் இருக்கும்
அதீத வெப்பமும் இருக்கும் இதை இரண்டு தட்பவெப்பத்தையும் எப்படி உன்னால் தாங்க முடிகிறது
இவ்வளவு பலசாலியான நீ உண்ணுவது முட்களும்
புற்களும் தாவர வகைகளுமாமே
உன் அகன்ற பெரிய கால்களை வைத்து நீ நடக்கையில்
உன் மேல் அமர்ந்திருப்பவர்
ஆடி ஆடி ச் செல்வதை பார்க்க வேடிக்கையா இருக்கும்
திருமணத்தின் போது உன்னை சீர்வரிசையாகவும் தருவாராமே
உனது பாலையும் விட்டு வைக்கவில்லையே மனிதன் அதிலிருந்து எத்தனை வகை வகையான படைப்புகள் செய்து பணம் ஈட்டுகிறான்
சொகுசு வாழ்க்கை வாழும் மனிதர் தன் வாழ்க்கையை கடினம் என்கிறார்
மனிதர்களே சற்றே சிந்தியுங்கள்!!
- லதா
====================
பாலையின் பெருமைகள்
கொட்டிக் கிடக்கும் மணல் கண் தொடும் தூரம்
கோபமேனோ பரிதியின் கோரத் தாண்டவம் ?
முட்புதர்கள் மட்டுமே மூச்சுப் பிடிக்கும்
*மூன்று இமை கண்களைப் பாதுகாக்கும்
ஒட்டகமே கப்பலாக ஊர்ந்து செல்லுங்கோ!
ஓரக் கண்ணால் கழுகும் உற்று நோக்குங்கோ
தொட்டனைத்தூறும் மணற் கேணி பொய்யா?
"துவளீர் அதற்காக திருவள்ளுவன் ஐயா!"
கட்டுறுதி உடல் கொண்டார் இங்கு வாழ்வார்
கை கூப்பிக் கொற்றவையை வழிபடுவார்
துட்டுக்கு மணல் விற்பார் கண் படவில்லையோ!
துரத்துமோ அவர்களை வெயிலோ? வேட்கையோ?
சுட்டெரிக்கும் காதலோடு வந்தான் சொன்னதுவோ
சூடு அது கூடியதால் "ஒட்டகத்தைக் கட்டிக்கோ" (என்னை வேண்டாம்)
பட்டுப் பாய் விரித்தார் யார் இங்கு மட்டும்?
பாலையின் பெருமை தான் இத்தனையும் .
*உபயம் திரு.மோகன் ஐயா
__. குத்தனூர் சேஷுதாஸ் 19/10/2026
-
No comments:
Post a Comment