முதற்கண் ஶ்ரீவீ ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள் பல.
பல வருடங்கள் கடிதப் பரிமாற்றங்கள் மூலம் உள்ளங்களை மகிழ்ச்சியிலும்,நிம்மதியிலும் ஆற்றிய அரும்பணியாளர்களுக்கு உற்ற துணையாக இருந்ததுக்கு.
அவர்கள் கால்கள் துவண்டு விடாமல் , உரிமைகள் பறி போகாமல் காத்ததுக்கு.
"நான் எழுதுவது கடிதம்அல்ல
உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்துக்கள்அல்ல
எண்ணம்
உன் உள்ளமதைக் கொள்ளை கொள்ள"
என்ற அற்புதமான திரைப்படப்பாடல் நினைவுக்கு வருகிறது.
" நலம் நலம் அறிய ஆவல்
நீ இங்கே சுகமே
நான் அங்கே சுகமா"
என்று இன்னுமோரு அருமையான கடிதப்பாடல்!
கடிதங்களின் பெருமை சொல்லவும் முடியுமா, எழுதுவதே அரிதாகி விட்ட இன்னாளில்!
" அட கடவுளே"(OMG!) என்று சுருங்கச் சொல்லி விளங்க(!) வைக்கும்காலம், ஐயா , இது, அதுவும் மின்னஞ்சல் மூலம், ஒரு விரல் புரட்சி!!
தபால்காரர் நம்கிராமங்களின் அடையாளமாகத் திகழ்ந்தவர்.
அவரே எளிய மக்களுக்கு மகன், மகள், உறவுகள் எனப்பலப்பல அவதாரங்களை எடுத்தவர், கடிதச்செய்திகளைக் கொண்டு சேர்த்ததன் மூலம்.
படிப்பற்றவர்க்கு, கடிதம் படித்தும்விளக்குவார்; கடிதம் சொல்லச்சொல்ல எழுதியும் கொடுப்பார். பணம்கேட்காத, ஆசான்!
புவிநிலை காட்டி( (GPS) இவரிடம் பிச்சை வாங்க வேண்டும். மூலை, முடுக்கு எல்லாம்மூக்கில்விரலை வைக்கும்படி்இவருக்கு அத்துபடி,
பின்கோடுகள் வரும் முன்னே!
மணியார்டர் எடுத்துக்கொண்டு இவர்வந்தால் துள்ளாத மனமும் துள்ளும்!
போஸ்ட்மேன் பீட்( postman pete) என்ற ஒரு அருமையான ஆங்கில
சிறுகதை. அன்று அவரது பிறந்த நாள் . அன்று ஊரெல்லாம்
கடிதங்கள்,வாழ்த்து மடல்கள், பார்சல்கள் எனக் கொண்டு சேர்த்தாலும், அவரது பையில் அவருக்கென வாழ்த்து மடல் ஏதுமில்லை. வருத்தத்தோடு வீடு திரும்புகையில், ஓர்ஆச்சரியம்!
ஊர்மக்கள் அவரை வாழத்த அவர்வீட்டில் காத்து இருக்கின்றனர்!
நம்நாட்டிலும் தபால்காரரைக்
கௌரவித்த நாட்கள்உண்டு, தீபாவளி, பொங்கல்போன்ற நாட்களில்.
இந்த இனம் இந்த உருவில்அருகி வருகிறது.
ஆனால் " விரைவுத்தூதுவர்" ( courier) என்ற " வளர் உருமாற்றம்" நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது.
பசுமை நிறைந்த நினைவுகளோடு, பாடிப்பறந்த பறவைகளாக இருந்த இளமைக்காலத்தில் , கடிதம் எழுதுவது, தபாலை எதிர் நோக்குவது, தபால்காரரை மோரோ, நீரோ கொடுத்து உபசரிப்பது எனப் பல இனிய நினைவுகள் இன்றைய தினம் நெஞ்சில் அலை மோதுகின்றன!
உமக்கும்,உங்கள் அஞ்சலக உறவுகளுக்கும்,
கைகள் கூப்பிய அஞ்சலி
- இ.ச.மோகன்
========
*என் கடிதங்களும் அப்பாவின் கணக்கும்!*
விடுதியில் தங்கிப் படித்த காலத்தில் போனும் இல்லை, கைப்பேசியும் இல்லை. வீட்டுக்கும் விடுதிக்கும் இடையே இருந்த ஒரே தொடர்புப் பாலம் கடிதங்கள்தான்.
வீட்டிலிருந்து வரும் கடிதங்களுக்காக ஆவலுடன் காத்திருப்பேன். அப்படி ஒன்றும் மாறுபட்ட கடிதங்கள் வந்ததில்லை. *கடிதத்தின் வரிகள் இடம் மாறியிருக்கலாம், ஆனால், கடிதங்களின் உள்ளடக்கம் ஒன்றுதான்!*
“நீ நலமாக இருக்கிறாயா? நாங்கள் இங்கே நலமாக இருக்கிறோம். படிப்பில் கவனம் செலுத்து. வார்டனிடம் நல்ல பெயர் எடு. ஒழுங்காக நடந்துகொள். நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும். பணத்தைச் சிக்கனமாகச் செலவு செய்.”
*என்னுடைய கடிதங்கள்!*
நான் வீட்டுக்கு எழுதும் கடிதமும் மரியாதையாகத்தான் தொடங்கும்.
“நான் இங்கே நலமாக இருக்கிறேன். நீங்கள் அனைவரும் அங்கே நலமாக இருக்கிறீர்களா? அப்பா, அம்மாவுக்கு என் வணக்கங்கள்!”
பிறகுதான் கடிதத்தின் உண்மையான நோக்கம் வெளிப்படும்!
“எனக்குப் புத்தகம் வாங்க வேண்டும். இங்க் வாங்க வேண்டும். ஹாக்கி ஸ்டிக் வாங்க வேண்டும். எனவே, உடனடியாகப் பணம் அனுப்பவும். *தங்கள் பணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உடனே மணியார்டரை எதிர்பார்க்கிறேன்!”*
என்னுடைய தேவைகள் ஒவ்வொன்றும் எனக்கு அவசரமானவைதான்!.
*அப்பாவின் பதில்:*
“ரூபாய் பத்து வார்டனுக்கு அனுப்பியுள்ளேன். உனக்குத் தேவையானவற்றை அவரிடம் சொல்லி வாங்கிக்கொள். பணத்தைச் சிக்கனமாகச் செலவு செய். செலவு செய்யும் பணத்திற்குக் கணக்கு எழுதி வைத்துக்கொள். எதையும் யோசித்துச் செலவு செய்ய வேண்டும்.” *சென்ற மாதம் அனுப்பிய பணத்திற்கு கணக்கு அனுப்பு.*
நான் பணம் கேட்பதில் காட்டிய ஆர்வத்தைவிட, அப்பா அந்தப் பணத்தை *எப்படிச் செலவு செய்கிறேன் என்பதில் காட்டிய அக்கறை அதிகம்!*
பெற்றோரின் கடிதங்களில் என் எதிர்காலத்தைப் பற்றிய கவலை நிறைந்திருக்கும். என்னுடைய கடிதங்களில் தேவைகளைப் பற்றிய கவலை நிறைந்திருக்கும். *என் தேவைகளுக்கோ ஓய்வே இல்லை!*
அப்பா அனுப்பியது பணம் மட்டுமல்ல, பணத்தை மதிக்க வேண்டும் என்ற பாடத்தையும் சேர்த்துத்தான் அனுப்பியிருக்கிறார்!
இன்று கடிதங்களுக்குப் பதிலாகக் கைப்பேசிகள் வந்துவிட்டன. மணியார்டருக்குப் பதிலாக உடனடிப் பணப் பரிமாற்றங்கள் வந்துவிட்டன. ஆனால், அந்தக் காலத்தில் வீட்டிலிருந்து வரும் கடிதத்திற்காகக் காத்திருந்த ஆவலையும், கடிதத்தைப் பிரித்துப் படித்த மகிழ்ச்சியையும் மீண்டும் அனுபவிக்க முடியுமா?
*இன்று அப்பாவும் இல்லை,அஞ்சலும் இல்லை, பணத்தேவையும் இல்லை!*
ஆனால், அன்றைய கடிதங்களும், அவற்றோடு கலந்திருந்த அப்பாவின் அன்பும் அறிவுரைகளும் என் நினைவுகளில் என்றும் அழியாத பொக்கிஷங்களாக இருக்கின்றன!
- தியாகராஜன்
================
ஏழு பைசா அஞ்சல் அட்டையில்
ஊர் சரித்திரம் முச்சூடும்
நுணுக்கி நுணுக்கி
எழுதிடுவாள்
எந்தன் பாட்டி.
15 பைசா இன்லேண்ட் கவரில் ஆலும் நாலும் போல
ஆயிரம் அறிவுரை கூறிடுவார்
எந்தன் தாத்தா.
50 பைசா கவரின்
உள்ளே
ஐந்து பக்கங்கள் மணி மணியான கையெழுத்தில்
ஆங்காங்கே கண்ணீர் சிந்தி இருக்க
புகுந்த வீட்டு நலம் பற்றி எழுதிவிட்டு -
பிறந்த வீட்டைப் பற்றி அக்கறையோடு விசாரித்து இருப்பாள்
மணம் ஆகி வேறு ஊர் சென்ற
என் அக்காள்.
வெளியூரில் வேலை பார்த்த அண்ணனோ
மணி ஆர்டரில் நூறு ரூபாய் அனுப்பி விட்டு
அக்னாலேஜ்மென்ட் பகுதியில்
"இத்துடன் பணம் அனுப்பி உள்ளேன். இங்கு நலமாக இருக்கிறேன். அங்கு அனைவரும் நலமா?" என மூன்றே வரியில் முடித்திருப்பான்.
அக்காளின் கடிதத்தையும்,
அண்ணன் அனுப்பிய மணியாளர் அக்னாலேஜ்மென்டையும் தடவித் தடவி பார்த்தபடி
கலங்கிய விழிகளுடன் அமர்ந்திருப்பார் என் அன்னை.
சோகத்தை மறைத்தபடி,
"ம்ம்.. ம்ம்..ஆகட்டும்.
அழுது என்ன ஆகப்போகுது. ரெண்டு பேரும் சந்தோஷமா தானே இருக்காங்க.. ஆக வேண்டியதை கவனி" - என்று கண்டிப்பான குரலை சொல்லிவிட்டு, தள்ளிப் போய் நின்று - யாரும் பார்க்காமல், கண்களை துண்டால் துடைத்துக் கொள்வார் என் தந்தை.
ஏதும் புரியாத வயது,
என்ன நடக்கிறது என தெரியாத பருவம்,
'ஏன் அந்தக் காகிதங்கள் அவ்வப்போது வருகின்றன..
அம்மாவை கலங்க அடிக்கின்றன..' - என எனக்குள் கோபம்.
வயதான பின் தெரிந்தது.
அவை வெறும் காகிதங்கள் அல்ல.
உணர்வுகள் - உணர்வுகளை சுமந்து வந்த தூதுவர்கள் - அன்பினை எடுத்து வந்த அன்பர்கள்
என.
ஆம்..
பாட்டியின் கடிதத்தை படிக்கும் பொழுது பாட்டியே பேசுவது போல இருக்கும்..
தாத்தாவின் கடிதத்தை படிக்கும் போது, அவரே நேரில் வந்து அறிவுரை கூறுவது போல இருக்கும்.
உறவினரின் கடிதங்கள் எல்லாம் வெறும் காகிதங்கள் அல்ல அவர்களின் நினைவுகளை சுமந்து வந்த தேவதைகள் என இப்போது புரிகிறது.
எதுவும் இல்லாதபோது தானே அதன் அருமை தெரியும் என்பது போல..
கடிதங்கள் ஏதும் வாராத இக்காலத்தில்
கடிதங்களின் அருமை நன்றாகப் புரிகிறது..
உயிரோட்டமான உறவுகளின் வெளிப்பாடுகள்
இன்று மின்னணு சாதனங்களில்
மின்னுகின்றனவே ஒழிய உயிர்ப்புடன் அவை இருப்பதில்லை.
மனிதர்களின் கையெழுத்துகளில் அவர்களது வார்த்தைகள் பேசின.
புலனச் செய்திகளில் செய்தி மட்டும் உள்ளது. உயிர் இல்லை.
-ஸ்ரீவி
=======================
No comments:
Post a Comment