Saturday, October 3, 2026

சிலம்பொடு ஒரு பயணம் {41} *கானல்வரி காதை* *மாதவி யாழினை கோவலனிடம் கொடுத்தல்

 ••••••••••••••••••••••••••••••••

*{40} சிலம்பொடு ஒரு பயணம்*


*கானல்வரி காதை*


*மாதவி யாழினை கோவலனிடம் கொடுத்தல்*

••••••••••••••••••••••••••••••


வசந்தமாலை கையிலிருந்த நல் யாழை மாதவி தொழுது

வாங்கி, நரம்புகளை முடுக்கி திருத்தி, கோவலனிடம் நீட்ட,அவன் அதை

வாங்கி, கானல் வரி பாடத் தொடங்கினான். 


"சித்திரப் படத்துள் புக்கு, 

செழுங் கோட்டின் மலர் புனைந்து,

மைத் தடங் கண் மண மகளிர் கோலம் போல் வனப்பு எய்தி," 


சித்திர வேலைப் பாடுடைய துணியில் யாழ் போர்த்தப் பட்டிருந்தது; மரத்தில் பறித்த பூக்கள் அதன் மேல் தூவப் பட்டிருந்தன. கண்ணில் மை தீட்டிக் கொண்டு மணக் கோலத்துடன் இருக்கும் பெண் போல அந்த  யாழ் அழகுடன் காணப்பட்டது.


"பத்தரும், கோடும், ஆணியும், நரம்பும் என்று

இத் திறத்துக் குற்றம் நீங்கிய யாழ் கையில் தொழுது வாங்கி-" 


அதன் பத்தர், கோடு, ஆணி, நரம்பு  (யாழின் பாகங்கள்) ஆகிய பகுதிகளில் இருந்த குறைபாடுகள் களையப் பட்டிருந்தன. அதனை மாதவி தொழுது வாங்கினாள்.


"பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல்,

கண்ணிய செலவு, விளையாட்டு, கையூழ்," 

நண்ணிய குறும்போக்கு,


இவை யாவும் எட்டு வகை பாடல் வகைகள்


"என்று நாட்டிய

எண் வகையால் இசை எழீஇ;

பண் வகையான் பரிவு தீர்ந்து" 


என்று நாட்டிய எட்டு வகைகளில் இசையைக் கூட்டிப் பார்த்தாள். பண் வகைகளைப் பாடிப் பார்த்தாள்.


இதன் பிறகு என்ன செய்தாள் என்பதை மோகன் ஐயா விவரிக்க அவருடன் பயணத்தைத் தொடர்வோம்


கானல் வரிக்காதையில் பயணம் ஆரம்பிக்கிறது....  ஐயா வணக்கம்.

நெய்தல் நிலக்கானலில் மாதவி மங்கை," குற்றம் நீங்கிய யாழைத் தொழுது வாங்கி" எண்வகையான கலைத்தொழிலையும் பயன்படுத்தி இசைக்கிறாள் என அற்புதமாக விவரித்தீர்.

யாழை மீட்ட நல்ல விரல்கள் தேவை. மாதவியின் விரல்கள்"மரகத மணித்தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள்" என்கிறார் அடிகள்.மரகத மோதிரங்கள் பச்சை நிறம் கொண்டவை. காந்தள்மலர் மஞ்சளும், சிவப்பும் கலந்த கலவை. நம் தமிழ் மாநில மலர்!

மெல்லிய மஞ்சளும் சிவப்பும் கலந்தது போன்ற " " மெல்" விரல்களில் பச்சை வண்ணக்கற்கள் பதித்த மோதிரங்கள். என்ன ஒரு வண்ண மயமான காட்சி!

"செங்காந்தள் ஐந்தன்ன விரலும் காட்டி" ( கவியரசு கண்ணதாசன் " மாங்கனி " என்றார் காவியத்தில்) .இந்தக்காந்தள் விரல்கள் எப்படி இன்னிசையை எழுப்புகின்றன!இசையெழுப்பிப் பாடிக்கொண்டே மொய்க்கும் வண்டுகளின் கூட்டத்தைப் போல-பயிர் வண்டின் கிளை போல" .  

இசை வல்லுனர்கள் வகுத்த எட்டு வகையான இசைக்காரணிகள் உள்ளடக்கிய இசைக்கூறுபாடுகளைத் தன் செவியால் கூர்த்து அறிந்து 

இசைக்கிறாள்.அந்த எட்டு வகையான காரணிகள்-

வார்தல், வடித்தல்,உந்தல், உறழ்தல்,உருட்டல்,தெருட்டல்,அள்ளல்,பட்டடை என்பன.

வார்த்தல் என்பது சுட்டுவிரலால் நரம்புகளை அசைத்தல் என்றும், வடித்தல் என்பது சுட்டுவிரலும் பெருவிரலும் கூட்டி நரம்பை அகமும் புறமும் ஆராய்தல் என்றும் உந்தல் என்பது நரம்புகளை உந்தி வலிவிற்பட்டதும் மெலிவிற் பட்டதும் நிரல்பட்டதும் நிரலிழிபட்டதும் என்று அறிதல் என்றும் உறழ்தல் என்றது ஒன்றிடையிட்டும் இரண்டிடையிட்டும் ஆராய்தல் என்றும் இதனை விளக்குவார் சிலப்பதிகாரத்தின் உரையாசிரியராகிய அரும்பத உரையாசிரியர்.யாழிசைப்பதில் உள்ள குற்றங்களை நச்சினினார்க்கினியர் விளக்குகிறார்.  மிகவும் நுட்பமான இசையறிவில் மேலும் நுழைந்தாய அருகதை அல்லன் நான்.


பயணம் தொடரும்

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...