••••••••••••••••••••••••••••••••
*{36} சிலம்பொடு ஒரு பயணம்*
*கடல் ஆடு காதை*
*புகழ்மிகு புகாரில் எழில்மிகு மாதவி நடனம்*
••••••••••••••••••••••••••••••••
விஞ்சை வீரன் விழாக் கோலம் பற்றி
வியந்தோதுகிறான் தன் காதலியிடம்
விமரிசையாக அதனை விளக்கிய அடிகள்
புகழ்மிகு புகார் நகரில்
எழில் மிகு மாதவியின் நடன வகைகள் பற்றி
விவரிப்பதைப் பார்த்திடலாம்.
*சிமையத்து இமயமும், செழு நீர்க் கங்கையும்,*
*உஞ்சை அம் பதியும், விஞ்சத்து அடவியும்,*
*வேங்கட மலையும், தாங்கா விளையுள் காவிரி நாடும்,*
*பூ விரி படப்பைப் புகார் மருங்கு எய்தி,*
உயர்ந்த முகடுகளை உடைய இமயமலை,
செழுமையான நீர் ஓடும் கங்கை,
உஞ்சை நகரம்,
விஞ்சைக் காடு (அடவி),
வேங்கட மலை,
விளைச்சலைத் தாங்க முடியாமல் இருக்கும் காவிரி ஆற்றுப் படுகை
ஆகியவற்றைக் காட்டித் தொழுது கொண்டே வரும் விஞ்சையன் எனும் வித்தியாதரன் புகார் நகரம் வந்தடைந்தான் தன் இனிய காதலியோடு.
பின்பு மாதவி ஆடிய நடனத்தின் சிறப்பை நளினமாக கூறுகிறார்:
*சீர் இயல் பொலிய, நீர் அல நீங்கப் பாரதி ஆடிய பாரதி- அரங்கத்து,*
நடனச் சீரின் தாளத்திற்கு ஏற்ப அடியிட்டு ஆடினாள்.
ஒழுங்கு நீர்மை இல்லாதவை அகலும்படி ஆடினாள்.
‘பாரதி’ என்னும் பெயர் கொண்ட அரங்கில் ஆடினாள்.
*திரிபுரம் எரியத் தேவர் வேண்ட,*
*உமையவள் ஒரு திறன் ஆக, ஓங்கிய இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்;*
முக்கண்ணன் ஆடிய கொடுகொட்டி ஆட்டம் போல் உக்கிரத்துடன் ஆயின் கண் கவர் வகையில் ஆடினாள்.
*கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக அஞ்சன-வண்ணன் ஆடிய ஆடலுள்*
கம்ச வத கண்ணன் ஆடிய ஆட்டம் போல் இருந்ததாம்.
இப்போது மோகன் அவர்களின் பார்வையில்....
"விஞ்சைவீரன்" அன்புக்காதலிக்கு மாதவி நல்லாள் ஆடும் பலவகைக் கூத்துகளை விவரிக்கிறான்.
பண்டைக் காலத்தில் கூத்து என்பது ஆடல், பாடல், இசை மூன்றும் கலந்து அளிக்கப்படும் கலை நிகழ்ச்சி. இது அக்காலத்தில் கல்வி மற்றும் பண்பாட்டை மக்களிடம் சேர்த்த ஊடகமாகும்.
மக்கள் என்றால் சமத்துவமாக அரசன் முதல் ஆண்டி வரை, பாவேந்தரிலிருந்து பாமரன் வரை , என்று யாவரும் கூடி இருந்து கண்டு களிக்கும் வகையில் இருக்கும்.
காலப்போக்கில் நவீன பொழுது போக்குகள் வந்து கூத்து வகைகளைத்
தெருவுக்குத்தள்ளி விட்டன.
பழங்காலக் கூத்துகள் இதிகாசக்கதைகளை எளிய முறையில் மக்களுக்குக் கொண்டு சேர்த்தன. அறிவியல் சார்ந்த கருத்துகளும் இடம் பெறும்.
இங்கு நாம் காண இருப்பது மாதவி மங்கை ஆடும் கூத்துகள், படைகளை இதிகாசத் தொடர்புடையவை ஆகும்.
பதினொன்று வகைக்கூத்துகளை மாதவி ஆடுவதாக வீரன் காதலியிடம் விவரிக்கிறான்.. அந்த ஆட்டங்களை வித்தியாதரன் வாயிலாக,நாம் காணுவோம்.
நீலக்கடலில் அலைகளை் திரையாகக் கொண்ட அரங்கத்தில் சூரனை வெற்றி கண்ட பிறகு ஆடும்
துடிக்கூத்து . ( துடி- பறை) - " (சூர்த்திறம் கடந்தோன் ஆடிய துடியும்")காண்பாய்!
படைகளைக் கீழே போட்டுவிட்டு அவுணர்கள் வருத்தமுற்ற நிலையில் இருக்கையில் முருகன்அவர்தம்முன்னே குடையைச் சாய்த்து சாய்த்து ஆடிய குடைக் கூத்தைக்-" (குடை வாழ்த்து .... ஆடிய குடையும்")-காண்பாய்!
பாணாசுரனின் பேரூரில் , பூவுலகை அளந்த நெடியமால் ஆடிய குடக்கூத்தை-
(நீள்நிலம் அளந்த நெடியோன் குடமும்" )கண்டு மகிழ்வாய்!
ஆண்தன்மை இழந்து பெண் உருக்கொண்ட காமன் ஆடிய பேடிக் கூத்துதனைப் (காமன் ஆடிய பேடி ஆடலும்") -பாராய்!
துர்க்கையானவள் ஆடிய மரக்கால் கூத்தை நோக்குவாய்!
(" மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்")
மரக்கால் ஆட்டம்- ம்ம்ம்-- அருகி வரும்வரும்பண்டைத் தமிழ்க்கலை.
உயரமான கட்டைகளை இரண்டு கால்களில் கட்டிக்கொண்டு ஆடும்ஆட்டம். கொல்லிக்கால் ஆட்டம், கொக்கலிகா ஆட்டம் என்றெல்லாம் அறியப்படும்.
வெளி நாடுகளில் குறிப்பாக கரீபியன் தீவுகளில் இன்றும் ஆடப்படும் " மோக்கா ஜம்பீஸ்" எனும்ஆட்டம்.
அவுணர்களின் வெம்மைப்போர்க்கோலம் அழியத். திருமகள் ஆடிய பாவைக்கூத்தும்- (" திருவின் செய்யோள்ஆடிய பாவையும்") பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம்என்றும் அறியப்படும்.
பாணாசுரன் கோட்டை வடக்கு வாயிலில் வயலில் நின்று, உழத்தி போல் வேடமிட்டு இந்திரன்மனைவி அயிராணி ஆடும் கடையக்கூத்தைக் காண்பாய்!("அயிராணி மடந்தை ஆடிய கடையமும்")
இவ்வாறு மரபு விதிகள் மாறாமல் " மாதவி மரபின் மாதவி" ஆடிய ஆட்டங்களை , தேனோடு கூடிய மகரந்தத்துகள்களை, விரிந்து சொரியும் சோலையில்,(" தாதவிழ் பூம்பொழில்") எனக் காதலிக்கு மிக்க மகிழ்வோடு விவரித்துத் தானும் மகிழ்ந்தான் மேன்மை தாங்கிய வித்யாதரன் .
ஆடல் வல்லாள், நாட்டியப் பேரொளி மாதவி மடந்தை என்ன ஆட்டம் போட்டிருக்கிறாள்!
வித விதமான ஆட்டங்கள், ஒன்றன் பின் ஒன்றாக; ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட
ஆட்ட அசைவுகள், முக பாவங்கள், முத்திரைகள், அணிகலன்கள், ஒப்பனைகள் என்று பலப்பல. அப்பப்பா!
மூச்சு முட்டுகிறதே!
எவ்வளவு வகையான கூத்துகள் பராணக்கதைகளை மக்களுக்குப் புரியும் வகையில் கொண்டு சேர்த்தன.
இன்று கூத்துப்பட்டறை போன்ற முயற்சிகள் கூத்து முறையையும் நவீன நாடகங்களையும் இணைத்து, கூத்துமுறை அழியாமல் பாதுகாக்கின்றன.
"பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை, தாதவிழ் புரிகுழல் மாதவி’’ யின்அருமையான ஆட்டங்களைக்கண்டோம், மகழ்ந்தோம். வித்யாதரனுக்கு நன்றி.
No comments:
Post a Comment