••••••••••••••••••••••••••••••••
*{35} சிலம்பொடு ஒரு பயணம்*
*கடல் ஆடு காதை*
*விஞ்சை வீரன் விளக்கம்*
••••••••••••••••••••••••••••••••
இந்திர விழா போர் எடுத்த காதையை இன்பமயமாய் இளங்கோ அடிகள் எழுதிய பின் ஆறாம் காதையாய் கடல் ஆடு காதை என்பதை துவக்குகிறார்.
இந்திர விழாவின் பெருமையைப் பற்றி விரிவாக சென்ற பாதையில் பார்த்தோம். அந்த விழாவினை பார்த்து விஞ்சை வீரன் எனும் வித்தியாதரன் தன் காதலியுடன் கண்டு மகிழ்ந்தான்.
*கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னோடு விருந்தாற்று ஆயிரம் ஓர் விஞ்சை வீரன்*
அவன் காதலி கருமையான மீனைப் போன்ற பெரும் கண் இருந்தவளாம். அவளோடு அந்த விஞ்சை வீரன் இந்திர விழாவை கண்டு மகிழ்ந்தானாம்.
*இந்திர விழவு கொண்டு எடுக்கும் நாள் இது என கடுவிசை அவுணர் கணம் கொண்டு ஈண்டி*
வளம் மிக்க ஊரில் இந்திர விழா எடுக்க கொடியேற்றும் நாள் அன்று கொடிய அரக்கர்கள் வலிமையோடு வந்து மோதினராம்.
*கொடு வரி ஊக்கத்து கோ நகர் காத்த*
அப்போது வீரக்கழல் அணிந்த முசுகுந்த மன்னன் இந்திரனின் நாட்டைக் காப்பாற்றினானாம்.
*நெஞ்சு இருள் கூற நிகழ்த்து மேல் விட்ட வஞ்சம் பயத்த மாபெரும் பூதம்..... இருந்து பழி உண்ணும் இடனும் காண்கும்*
என்றாலும் அரக்கர்கள் முசுகுந்த மன்னனை அழிக்க தமது மாயையே ஏவினர். அதனால் இருள் சூழ்ந்தது. அப்போது முசுகுந்த மன்னனைக் காக்க இந்திரன் வலிமைமிகு பூதம் ஒன்றை ஏவினான். புகார் நகருக்கு காவலாக அந்த பூதம் அங்கேயே தங்கி இருந்தது. அது தங்கி இருந்து பலி உண்ணும் நாளங்காடி என்னும் இடம் அதோ உள்ளது காண்பாய்.. என தன் காதலிக்கு அவன் காட்டுகிறான்.
மோகன் ஐயா:
நடக்கும் எந்திர விழாவை பார்க்க விஞ்சை வீரன் ஒருவன் தன் காதலியுடன் வருகிறான். அவன் வித்தியா இனத்தைச் சேர்ந்தவன். இவர்கள் மந்திர வித்தைகளில் தேர்ந்தவர்கள். வானுலகிலும், மண்ணுலகில் மலைகளில் வாசம் செய்பவர்கள்.இவனும் காதலியும் வடக்கே உள்ள மலைகளில் இருந்து நீண்ட நெடும்பயணம் செய்து நம் சோழ நாட்டு இந்திர விழாவைக்காண வருகின்றனர், என்றால் இந்திர விழவின் கொண்டாட்டங்களில் பங்கெடுத்து, கண்டு மகிழ எல்லைகள் ஒரு பொருட்டல்ல என்று உணருகிறோம்.
நீங்கள் அவன் நாளங்காடியை விவரித்ததைக் கண்டோம்.
பின்பு ஐம்பெரும் மன்றங்களைப்பற்றி விவரிக்கிறான். நாம் ஏற்கெனவே பார்த்து விட்டோம் இம்மாமன்றங்களை. அவன் காதலி காண் வேண்டாமா?
" தமரில் தந்து தகைசால் சிறப்பின் பொய் வகை இன்றிப் பூமியில் புணர்த்த ஐவகை மன்றத்து அமைதியும் காண்குதும்" என்கிறான். தேவர்ககோன் இந்திரனைக்காத்தமையால் பரிசாகப்பெற்ற, அழகு மிகு , எவ்விதப் பொய்மையும் இன்றி பூமியில் நிலை பெற்ற மன்றங்கள். நீதியை நிலை நாட்டும் மன்றங்களில் பொய்மை எப்படி நுழையும்!
பின்பு நமக்கு ஏற்கெனவே பரிச்சயமான மாதவியின் முற்பிறவி பற்றிக் கூறுகிறான்.
" நாரதன் வீணை நயம்தெரி பாடலும் , தோரிய மடந்தை வாரம் பாடலும் ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய நாடகம்உருப்பசி நல்காள்ஆகி மங்கலம் இழப்ப வீணை மண்மிசைத் தங்குக இவள் எனச்சாபம் பெற்ற மங்கை மாதவி" ( ஊர்வசி மேல் உலகில்; பூமியில் மாதவி) என்கிறான். (இச்சாபம்பற்றி அரங்கேற்றக்கதையிலேயே கண்டு விட்டோம். அதனால் விவரிக்கவில்லை)
அரவத்தின் அழகையும் இயல்பையும் கொண்ட மாதவி நடனமாடுகிறாள் , என்கிறான் காதலியிடம்.
அவள்எத்தகைய அழகு படைத்தவள்?
"துவர் இதழ்ச் செவ்வாய்த் துடியிடையோயே" என்று வர்ணிக்கிறான்.
பவளம்அல்லது துவரம்பூ போன்று சிவந்த இதழ்களை உடையவள் . செயற்கை உதட்டுப்பூச்சு பிறக்காத காலத்தில் இயற்கை அளித்திட்ட சிவப்பு!
துடிஇடையாம்; துடி என்றால் உடுக்கை .அது போல அமைந்த இடை. இது இயற்கையோடு இணைந்த உவமை. நாம் தற்காலக் கவிதைகளில்
" இடை இல்லாது போல் இருக்குது"; " இடையில் இடையோ கிடையாது" என்றெல்லாம் உயர்வு நவிற்சியாக, காண்கிறோம். எப்படி வர்ணித்தாலும்காலம் காலமாக , பெண்களின் இடையழகு இடைவெளி இன்றி ஆண்களால் இரசித்து உவமிக்கப்படுகிறது என்பதே உண்மை.
இனி" அமரர் தலைவனை ( இந்திரனை) வணங்குதும்" என்கிறான்.
மேலே பயணத்தைத் தொடருவோம்.
No comments:
Post a Comment