எங்களூர் டூரிங் டாக்கீஸ்
ஊரின் கடைக் கோடியில்
அநாதையாய் நின்றிருந்தது
"ஸ்ரீனிவாசா டாக்கீஸ்".
கூரை வேய்ந்த
"பெரிய்ய்ய" கொட்டகை.
சுற்றிலும் மூங்கில்
பட்டைகளால்
அமைக்கப்பட்ட வேலி.
எங்களால் செல்லமாக
அழைக்கப்பட்ட
"டூரிங் டாக்கீஸ்".
டூரிங் டாக்கீஸ் என்று
அழைக்கப் பட்டாலும்
அந்தக் கால சர்க்கஸ்
போல ஊர் விட்டு ஊர்
செல்வதில்லை.
ஒரே இடத்தில்
நங்கூரம் போட்டிருக்கும்.
இரண்டு வருடங்களுக்கு
ஒரு முறை புதிப்பித்தலின்
போது மட்டும் கொட்டகை
தென்வடல், கிழமேலாக
மாறும்.அப்போது மட்டும்
இரண்டு மாதம் விடுமுறை.
பேரும் "ஸ்ரீனிவாசா"விலிருந்து
"நாராயணா"வாக மாறும்.
எளியவர்களின்
பொழுது போக்கு மன்றம்.
உள்ளே மூன்றே மூன்று
வகுப்புகள்தான்.
தரை டிக்கெட் விலை
இருபத்து ஐந்து காசுகள்.
இரண்டாம் வகுப்பு பெஞ்ச்.
விலை ஐம்பது காசுகள்.
முதல் வகுப்பு பேக்பெஞ்ச்.
விலை எழுபத்தைந்து காசுகள்.
தினமும் இரண்டே இரண்டு
காட்சிகள்தான்.
மாலைக் காட்சி 6.30 மணிக்கும்,
இரவுக் காட்சி 10.30 மணிக்கும்.
மாலை 6.15 மணிக்கு
சீர்காழி கோவிந்தராஜன்
தனது வெங்கலக் குரலில்
"வினாயகனே வினை
தீர்த்தவனே" என கூம்பு
ஒலி பெருக்கியில் பாடி
ஊரையே அழைப்பார்.
மக்களும் சாரை சாரையாய்
நடையிலும், மிதி வண்டியிலும்
குதிரை வண்டியிலும்
வரத் துவங்குவர்.
டவுனில் வந்து மூன்று மாதங்கள்
ஓடிய "புதுப் படங்கள்" எல்லாம்
நகரின் மத்தியில் உள்ள
இந்திரா திரையரங்கில்
போடப்பட,
"மதுரைவீரன், அரசிளங்குமரி, ஆலயமணி,பார்த்தால் பசி தீரும்,
வீரத்திருமகன் போன்ற
கருப்பு, வெள்ளைத் திரைப்படங்களெல்லாம்
ஸ்ரீனிவாசாவில்
திரையிடப்படும்.
சின்னக் குடில் போல்
டிக்கெட் கௌண்டர்.
சிறிய மேசையில்
மஞ்சள், நீலம், சிவப்பு
வண்ணங்களில்
அலுமினியப் பெட்டியில்
அடுக்கப் பட்ட நுழைவுச்
சீட்டுகள். அதை நாவில்
எச்சில் தொட்டுக் கிழித்துத்
தரும் டிக்கெட் கொடுப்பவர்.
டிக்கெட் கௌண்டர்
அருகிலேயே உள் செல்லும்
வழி. பாதி டிக்கெட்டைக்
கிழித்துக் கொண்டு உள்ளே
அனுப்புவார்.
அப்பா எங்களை எப்போதும்
பெஞ்ச் டிக்கெட்டில்தான்
அழைத்துச் செல்வார்
சிக்கனம் கருதி.
பெரிய வெள்ளை மல் துணி திரையாய் அகன்றிருக்கும்.
திரையை ஒட்டி மண் நிரப்பப்
பட்ட "தீ" என எழுதப்பட்ட,
பெரிய பெரிய சிவப்பு
வாளிகள் பயமுறுத்தும்.
விளக்கை அணைத்து
படம் போடப் படுகையில்
விசில் சத்தம் விண்ணைப்
பிளக்கும்.
ரீல் மாற்றுவதற்காக
மொத்தம் மூன்று
இடைவேளைகள்.
இடைவேளைகளில்
மூங்கில் தட்டில் வரும்
கடலை மிட்டாய், நீள்கூம்பாய்
மடிக்கப்பட்ட காகிதத்தில்
காராக் கடலை, ஐந்து பைசா
விலையில்.
கடலைப் பருப்பை
(நிலக்கடலை இல்லை), எண்ணையில் வறுத்து, மிளகாய்த்தூளும், உப்பும்
கலந்து, அதன் சுவையே தனி.
குண்டு பாட்டிலில்
அடைக்கப்பட்ட, ஆரஞ்சு,
கோலா,சோடா, பன்னீர்
சோடா பானங்கள்.
எங்கள் பகுதியில்
"மாப்பிள்ளை விநாயகர்"
பானங்கள் சிறப்பு.
மூடி போட்ட
"வின்சென்ட்" கலர்
விலை சற்று அதிகம்.
படம் முடிந்தவுடன் அரைத் தூக்கத்தில் இருக்கும் எங்களை
குதிரை வண்டியில் ஏற்றி வீடு
கொண்டு சேர்ப்பார் எங்கள்
அப்பா.
விடப்பட்ட விடயங்கள்
நிறைய.
நீட்சி கருதி இத்துடன்
முடிக்கிறேன்.
என் வயதொத்தோர்
அவரவர் "டூரிங் டாக்கீஸ்" அனுபவத்தைப் பதிவிடலாம்.
பல இடங்களில் ஆங்கிலச்
சொற்களின் பிரயோகம்,
மண்வாசனை கருதி.
மன்னிக்கவும்.
மீண்டும் சொல்கிறேன்
மூத்த குழந்தைகளே
அவ்வப்போது
பால்யத்திற்குத்
திரும்புங்கள்.
இளமைப் பூங்காற்றை
சுவாசியுங்கள்.
- முகம்மது சுலைமான்
No comments:
Post a Comment