Saturday, July 11, 2026

* சிலம்பொடு ஒரு பயணம் {29}* *இந்திர விழவு ஊர் எடுத்த காதை* *பெருமைமிகு பட்டினப்பாக்கம்*

 ••••••••••••••••••••••••••••••••

*{29} சிலம்பொடு ஒரு பயணம்*


*இந்திர விழவு ஊர் எடுத்த காதை*


*பெருமைமிகு பட்டினப்பாக்கம்*

••••••••••••••••••••••••••••••••


மருவூர்ப் பாக்கத்தின் மதிப்பினையும் 

பரபரப்பான அங்காடித் தெருவின் அழகினையும் 

அருமையாக வருணித்த அடிகள் 


இன்னொரு நகரான பட்டினப் பாக்கத்தின்

பாங்கினையும், பலதரப்பட்ட மக்கள் வசித்த 

பல்வேறு வீதிகளையும் 

படம் பிடித்துக் காட்டுகிறார். 


சிலவற்றைப் பார்ப்போம்:


*கோவியன் வீதியும், கொடித்தேர் வீதியும்,       பீடிகைத் தெருவும்*


அகன்ற அரச வீதியும், கொடிகள் பறக்கின்ற தேரோடும் வீதியும், 

பெருந்தன வணிகர் வசித்த வீதியும்,


*மறையோர் இருக்கையும்,*

வேதம் போதும் அந்தணர்கள் வாழ்ந்த இடங்களும்,


*அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்,*


சங்கு அறுத்து அழகிய வளையல் செய்யும் வளைஞர்கள் வசிக்கும் அகன்ற பெரிய வீதியும்


என வீதிகளின் பெருமையைப் பேசியவர், அவ் வீதிகளில் வசித்தோரின் பட்டியலை அடுக்குகிறார் அழகாக: 


*உழவரொடு விளங்கிய கொள்கை ஆயுள் வேதரும் காலக் கணிதரும்*


உழவர் பெருமக்கள், ஆயுளைக் காக்கும் மருத்துவர்கள், காலத்தை கணிக்கும் கணியர்கள் (நிமித்திகர்கள்)


*சூதர் மாகதர் வேதா ளிகரொடு*

*நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்*

*காவல் கணிகையர் ஆடல் கூத்தியர்  பூவிலை மடந்தையர்* 

*ஏவல் சிலதியர் பயில்தொழில் குயிலுவர்* *பன்முறைக்கருவியர்நகைவே ழம்பரொடு*


நின்றுகொண்டு அரசனை வாழ்த்தும் சூதர்,

அமர்ந்து கொண்டு அரசனை வாழ்த்தும் மாகதர்,

செல்லும்போது அரசனை வாழ்த்தும் வேதாளிகர்,

நல்ல நேரம் பார்த்துச் சொல்லும் நாழிகைக் கணக்கர்,

ஆடி மகிழ்விக்கும் மகளிர், 

பூ விற்கும் பெண்கள், 

குற்றேவல் செய்யும் மகளிர்,

அரச குடும்பம் பயிலும் தொழில்களைக் கற்பிக்கும் கலைஞர்கள்,

ஆயுதமேந்தி நின்று இவர்களைப் பாதுகாப்போர், 

சிரிப்பு மூட்டி அரசனை மகிழ்விக்கும் நகை-வேழம்பர். 


அப்பப்பா... மக்களில் எத்தனை விதம். அதை பட்டியலிடுவதில் எத்தனை நலம். 

அதனைப் படிப்பதில் எத்தனை சுகம். 


இவ்வாறு பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்த பற்பல அகன்ற வீதிகளை கொண்ட பட்டினப்பாக்கம் எப்படிப்பட்டதாம்: 


*பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய*

*பாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும்* 


ஆன்றோர்களும் சான்றோர்களும் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாய் வாழ்கின்ற பெருமை உடையதாம் பட்டினப்பாக்கம். 


தொடர்வது மழலைக் கவி:


 "நாளங்காடி பூத வழிபாடு" பற்றி பார்த்திட முற்படுவோம்.


அங்காடி என்பது பல கடைகள் நிறைந்த இடம் . கூவி விற்போரும் அங்காடிகளில் இருப்பர். நாளங்காடி- நாள் அங்காடி  என்பது பெயருக்குத்தக்கபடி , பகலில் செயல்படும் வணிக வளாகம். அல்லங்காடி என்பது இரவில் செயல்படும் கடைத்தெருவு.


இங்கு நாம் காணும் அங்காடியான நாளங்காடி, பட்டினப்பாக்கத்துக்கும், மருவூர்பாக்கத்துக்கும் இடைப்பட்ட, நெருங்கிய சோலை மரங்களை தூண்களாக, கொண்டு அமைக்கப்பட்ட கடைகளைக்கொண்டது.நிழல் தரும்மரங்கள் வெம்மை தடுக்க, செயற்கையாக குளிரூட்டப்படாத 

கடைகள் !

இங்கு, " கொடுப்போர் ஓதையும்( ஓதை-ஓசை அல லது ஆரவாரம்),கொள்வோர் ஓதையும் நடுக்கு இன்றி" வாணிபம் செய்ய முடிந்தது- அதாவது வாங்குவோரும் விற்போரும் ஆரவாரத்தோடு  அச்சமின்றி . 

ஆம் அச்சமின்றி!சோழப்பேரரசில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையோ, கழுத்து நகையைப்பறிப்பது போன்ற குற்றங்களோ  அடியோடு இல்லை என அடிகள் சுட்டுகிறார்.


இன்றைய நாள் சித்திரை   மாதத்தில் , சித்திரை நட்சத்திரத்தில் வரும் சித்திரா பௌர்ணமி.ஒரு பூத வழிபாடு நடை பெறுகிறது . 

அது என்னய்யா பூதம்? கிணறு வெட்டக் கிளம்பியதா என்ன ?! 

இல்லை .

சோழ மன்னன்  முசுகுந்தன் தேவர்களுக்குப் போரில் உதவியதால், "வெற்றி வேல் "மன்னன் " ஆனவனுக்குத், 

துயர் நீங்க இந்திரனால் அனுப்பப்பட்ட காவல் பூதம். ( முசுகுந்த சக்கர வர்த்தி  பற்றிமுழு வரலாறை இங்கு பதிவிட முடியாது)

இந்த பூதம் , விளக்கைத்தேய்த்து வந்தது அல்ல;தேவலோகத்திலிருந்து வந்தது!


இத்தெய்வத்துக்குப்படையல்-  புழுங்கலரிச்சோறு, எள்ளுருண்டை, நிணச்சோறு, பொங்கல்  என்பதோடு மலர்கள், நறுமணப் புகைகளும் பூசையில் சேர்க்கப்பட்டன.

மறக்குடி மகளிர் - " மூதிர் பெண்டிர்" , "துணங்கைக்கூத்தும்   குரவைக்கூத்தும் "ஆடி பெரு மன்னன் ஆளும் இரு நிலத்திலும்" பசியும், பிணியும், பகையும் நீங்கி வசி ( மழை) யும், வளனும்"(நற்செல்வங்கள்) பெற வேண்டும் என 

வாழ்த்தி ஆரவாரத்துடன் விழா கொண்டாடினர்.

இரண்டு பாக்கங்கள்  ஊடே,அமைதி சூழ் சோலைகள் நடுவே ஆரவார கடைவீதி,வழிபாட்டுக்குரிய பெரிய பூத  மூர்த்தி, வண்ணக்கோலங்கள் அள்ளித் தெளித்தது போல மங்கையரின் கூத்துகள் என 

 ஒரு சிசில் பி டெமிலி  ( ஆங்கிலப்பட இயக்குனர்)போல 

பிரம்மாண்டக் காட்சிகளைக் கண்முன்  நிறுத்துகிறார்  நம் அடிகள்.


பின்குறிப்பு:

துணங்கைக்கூத்து:

துணங்கை என்பது பண்டைத் தமிழ்நாட்டில் மகளிர் மற்றும் வீரர்கள் ஆடிய ஒரு வகையான கூத்து அல்லது நடனமாகும். கைகளை முழங்கையில் மடக்கி, அவற்றால் தங்கள் பக்கவாட்டில் (விலாப்பகுதியில்) தட்டிக்கொண்டு ஆடும் ஆட்டமாகும்.

குரவைக்கூத்து:

பழந்தமிழரின் மரபில் குரவை என்பது பெண்கள் கை கோர்த்து வட்டமாக நின்று பாடிக்கொண்டு ஆடும் ஒரு வகையான கூத்து (நடனம்) ஆகும். இதுவே பேச்சு வழக்கில் குலவை என மருவி, கோவில் திருவிழாக்கள் மற்றும் மங்கல நிகழ்வுகளின் போது பெண்களால் நாவினை அசைத்து எழுப்பப்படும் மங்கல ஒலியாகவும் இன்றும் தொடர்கிறது.

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...