••••••••••••••••••••••••••••••••
*{30} சிலம்பொடு ஒரு பயணம்*
*இந்திர விழவு ஊர் எடுத்த காதை*
*விழாக்கோலம் பூண்ட நகரம்*
••••••••••••••••••••••••••••••••
மறு ஒரு பக்கம் பட்டினப்பாக்கம் இடத்தின் சிறப்பையும் நாளங்காடி பூதம் பற்றிய விவரத்தையும் அழகுற சொன்ன அடிகள்
நகர மக்கள் சிறப்புற எடுத்த விழாக்கள் பற்றி விளக்குகிறார் செம்மையாக:
*மருவூர் மருங்கின் மறம் கொள் வீரரும்,*
*பட்டின மருங்கின் படை கெழு மாக்களும்,*
மருவூர்ப் பகுதியில் வாழும் மறம் கொண்ட வீரர்களும்
பட்டினப் பகுதியில் வாழும் படைவீரர்களும்
நான் முந்தி நீ முந்தி என்று போட்டிப் போட்டுக்கொண்டு சென்று நாளங்காடிப் பூதத்துக்குப் பலி கொடுப்பார்கள்.
*பலிக் கொடை புரிந்தோர் வலிக்கு வரம்பு ஆக’*
*கல் உமிழ் கவணினர், கழிப் பிணிக் கறைத் தோல்,*
*பல் வேல் பரப்பினர் மெய் உறத் தீண்டி,*
*ஆர்த்து, களம் கொண்டோர் ஆர் அமர் அழுவத்து*
பலி கொடுத்ததோடு நில்லாது, மும்முரமாக போர் பயிற்சியும் மேற் கொள்வார்கள்.
பலிக்கொடை புரிந்தவர்களின் வலிமைக்கு வரம்பாக வேறு சிலர் கல்லைக் கவணில் வைத்து எறிந்து பயிற்சி பெறுவர்.
சிலர் தோலாலான கவசம் அணிந்துகொண்டு மற்றவர் மீது வேல் வீசும் போரில் பயிற்சி பெறுவர்.
சிலர் ஒருவரை ஒருவர் கையால் குத்தித் தாக்கிப் பயிற்சி பெறுவர்.
*வெற்றி வேந்தன் கொற்றம் கொள்க’ என,*
*நல் பலி-பீடிகை நலம் கொள வைத்து,*
*ஆங்கு, உயிர்ப் பலி உண்ணும் உருமுக் குரல் முழக்கத்து மயிர்க் கண் முரசொடு வான் பலி ஊட்டி-*
ஒரு சிலர் தம்மையே பலியிட்டுக் கொள்வார்களாம்
எப்படி என்றால், சிலர் அச்சம் தரும் வகையில் சுட்டெரிக்கும் வகையில் சிவந்த கண்கள் கொண்ட தன் கருந்தலையை பலி பீடத்தில் வைத்து, "வெற்றி வேந்தன் மேலும் பல வெற்றிகளைக் குவிக்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டு தன்னைத் தானே பலியிட்டுக் கொள்ளும் முழக்கத்தைச் செய்வர்.
அப்போது அங்கு உள்ள மயிர்த்தோல் போர்த்திய முரசம் முழக்கப்படும்.
இதற்கு *வான்பலி* என்று பெயர்.
°•°•°•°•°•°
தொடர்வது மோகன் ஐயா:
...........
நாம் காண இருப்பது திருமாவளவனின் (ஆம்!) வெற்றியும், வடபுலத்தார் தந்ததும்.
திருமாவளவனின் வெற்றி:
இவர் கரிகால் பெருவளத்தான் என்னும் சோழப் பேரரசர்;எல்லா செல்வங்களும் வளங்களும் நிறைந்த சோழப்பேரரசை, ஆளும் " வளவன்" ( சோழ மன்னர்களின் பாரம்பரியப் பட்டம்).
சுற்றுப்புறங்களில் எதிர்ப்பவர் இல்லாது, "புண்ணிய திசை முகம்" என்று கருதப்படும் வடதிசை நோக்கி
"வாளும், குடையும், மயிர்க்கண் முரசும்" புடை சூழ படையெடுத்தார்.
எப்படி?
"நண்ணார்ப் பெறுக-இம்
மண்ணக மருங்கின், என் வலி கெழு தோள்" என
"இந்த மண்ணுலகில் என்னுடைய வலிமை பொருந்திய தோள்கள் போர் செய்வதற்குரிய பகைவர்களைப் பெறுவார்களாக!" என்று முழக்கமிட்டு.
ஆனால் பகை விலக்கியது இப் பயம் கெழு மலை"- பகைவர்களைத் தடுத்து நிறுத்தும் அச்சம் ஊட்டும் மலையான இமயமலை. இதைத் தாண்டாமல், அதன்மேல் தன் புலிக்கொடியை
("கொடிவரி")
நாட்டித் திரும்பினான்.
என்ன தகைமை!
போர்வெறி கொண்டு அலையாமல் கொள்ளாமல் சென்ற நோக்கை அடைந்து வெற்றியுடன் திரும்பிய சோழவளவன்!
வடபுலத்தார் தந்தவை:
இவரது திக்விஜயத்தால் வடக்கு தேய்ந்தது, தெற்கு வாழ்ந்தது.
வெற்றி வாகை சூடிய சோழ மன்னருக்கு வடக்கு வாழ் வேந்தர்கள் பரிசாக அளித்தவை என்ன என்ன?
நீர் வேலி போல் சூழ் வச்சிர நாட்டு மன்னன் (இன்றைய குஜராத் என்பர்) முத்துப் பந்தரும், வாட்போரில் வல்ல "வாள்வாய் வேந்தனான மகத ( இன்றைய கிழக்கு கங்கை சமவெளி- பீஹார்) அரசன்
பட்டி மண்டபமும், அவந்தி( இன்றைய மத்திய பிரதேசத்தின் மால்வா பகுதி) மன்னன் உயர்ந்த வேலைப்பாடுகள் நிறைந்த தோரண வாயிலும் அளித்தனர்.
பட்டி மன்றம் வேறு,பட்டி மண்டபம் வேறா?
பட்டி மண்டபம் என்பது ஆன்றோரும், சான்றோரும் கூடி, பல விடயங்களைப் பற்றி ஆரோக்யமான விவாதங்கள் செய்யவோ அல்லது கருத்துகளைப் பறிமாறிக்கொள்ளவோ,கூடும் இடம்.காலப்போக்கில் பட்டி மண்டபமும் பட்டி மன்றமாக மாறி இன்று விழா நாட்களில காணொளி முன்பு நம்மை உட்கார வைக்கும் அளவுக்கு வளர்ச்சி! (எப்போதும் வெற்றி பெறுவது பட்டிமன்ற நடுவரே, அவர் அவ்வப்போது உதிர்க்கும் நகைச்சுவை முத்துக்களால்!)
இந்த மூன்று பரிசுகளும் சேர்ந்து உருவாக்கப்பட்ட சித்திர மண்டபம்.
முத்துப்பந்தர், பட்டி மண்டபம், தோரண வாயில் இவை யாவும், தேவ சிற்பி மயன் செய்தவை போல மிளிர்கின்றனவாம். ஆச்சரியமில்லை. ஏனெனில் இவற்றை உருவாக்கிய "நுண்வினைக் கம்மியரின்"
முன்னோர்கள் மயனோடு இணைந்து வேலை செய்து தொழில் கற்றவர்கள்.-
தொல்லோர் உதவிக்கு மயன் விதித்துக் கொடுத்த மரபின்” என்கிறார் அடிகள்.
அவர்களின் சந்ததியரின் கை வேலைப்பாடுக்ள சிறந்து விளங்குவதில் வியப்பென்ன.
காதையில் மேலும் பயணிப்போம்.
*பின்குறிப்பு:*
தேவ சிற்பி மயனுக்கும் தென் அமெரிக்க நாடுகளில் இருந்த மாயன்( Mayan) நாகரிகத்துக்கும் தொடர்பு இருந்ததாக கருத்துகள்/ஆராய்ச்சிகள் உள்ளன. அவற்றில் இப்போது உள்நுழைய
குறியிலக்கில்லை.
No comments:
Post a Comment