Wednesday, February 4, 2026

இயந்திரப் பறவை

இயந்திரப் பறவை


பறந்து திரியும் பறவை கண்டான்

பறவையாய் பறக்க உன்னைப் படைத்தான்


சிறகு வரத்திற்காய் தவமாற்றாதவனுக்கு

அறிவியல் ஆற்றிய

மாற்று வரமாய் 

உன் விரிந்த சிறகு..


தாளிட்ட இருக்கைகள் ஏற்ற இறக்கத்தில்...

வண்ணம் தீட்டிய மாதரோ

பூட்டிவிட்ட புன்சிரிப்பில்..


தொட்டுவிடும் தூரத்தில் 

மேகத்தை காண்கிறோம்..

ஒளிந்துகொண்ட மழையை

தேடித் தேடி ஓய்கிறோம்..


பேருந்தின் ஜன்னலோர

சிலிர்ப்பு இங்கும் வேண்டும்..

சீட்டுக்கே வரும்  சிற்றுண்டி

சின்ன பசியைத் தூண்டும்..


உடல் காக்க உயிர்க் கவசம் 

உயிர் சுவாசிக்க முகக் கவசம்

செவிக்கு வெள்ளை பஞ்சு 

காற்றுக்கோ வெள்ளை நஞ்சு


வான மரத்தில் தொங்கி நகரும் 

எட்டாக் கனியாய் ஏழைக்கு  நீ..

ஏறி விட்ட முதல் நாள் மட்டும் 

வாகை சூட்டிய வெற்றிக் கனி நீ


உயர்ந்துவிட்டோமென கர்வமேற

ஊர்க்குருவி பருந்தாகாதென

இயற்கையின் இயல்பை  

இயந்திரத்தனமாய் இயம்பி

இசைந்தே அச்சத்தோடு

இருக்கையிலேயே பறக்கும் எம்மை

இரக்கமின்றி இரக்கத்தோடு

இறக்கி பிரிகிறாய்!


- சாய்கழல் சங்கீதா

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...