அரச மரக் கேணி:
எங்கள் ஊரின்
மேல் கோடியில்,
இரயில்வே கேட்
அருகில் இருந்தது
அந்தக் கிணறு.
மூன்று ஏக்கர்
பாசனத்திற்காக
வெட்டப் பட்ட கிணறு.
கோடையிலும் வற்றாது.
பதினைந்து அடிக்கு
குறையாத நீர்.
அதன் அருகே
ஒரு அரச மரம்
இருந்ததால்
"அரச மரக் கேணி"
என்ற பெயர்.
கருங்கல்லால் ஆன
ஒரு பிள்ளையார்
மேற்கூரையின்றி
அரச மரத்தடியே
அமர்ந்திருப்பார்.
அவருக்கு முக்கால
பூஜை கிடையாது.
அவ்வப்போது
குளிக்க வரும் சில
பக்தர்களின்
கைங்கரியம்.
அரச மரத்தை ஒட்டியே
ஓர் அத்தி மரமும்
வளர்ந்திருந்தது.
பருவ காலங்களில்,
பிள்ளையாருக்கு
மனிதர்கள் அளிக்கும்
அபிஷேகமல்லாது
அத்தி மரமும் தன்
பங்கிற்கு அத்திப்
பழங்களை
அபிஷேகமிடும்.
கிணற்றின் உரிமையாளர்
கிறித்துவர் ஆனபோதிலும்
விநாயகர் அங்கே அமரத்
தடையேதும் இல்லை.
அந்தக் கிணறுதான்
எங்களின் நீச்சல் குளம்.
ஒரு பகுதியில் கவலை
இறைக்க வசதியாக
மாட்டுத் தடம்.
மறுபுறம் கிணற்றின்
உள்ளே இறங்கப்
படிக்கட்டுகள்.
படிக்கட்டுகள் என்றால்
கட்டப்பட்ட படிக்கட்டுகள்
இல்லை.
கிணறு வெட்டும்
போதே வாகாக
அமைக்கப்பட்ட
கரடுமுரடான
படிக்கட்டுகள்.
கிணற்றைச் சுற்றி
மண் சரியாமல்
இருக்க அடுக்கப்பட்ட
ஒழுங்கில்லா
கருங்கற்கள்.
ஆங்காங்கே
துருத்திக்
கொண்டிருக்கும்.
இடையிடையே
பாம்புகள் தங்கும்
துளைகள்.
இனிப்பான நன்னீர்.
ஆனால் விவசாயக்
கிணறாதலால் யாரும்
குடிநீராகப் பயன்
படுத்தவில்லை.
நண்பர்கள் பத்து பேர்
சேர்ந்து போனால்
கிணறே எங்களைக்
கண்டு அஞ்சும்.
கிணறு மட்டுமல்ல
நீச்சல் பழகிக்
கொண்டிருக்கும்
கத்துக்குட்டிகளும்
பயப்படுவர்.
நீர் இறைக்கும்
கவலையிலிருந்து
ஒருவர் பின் ஒருவராக
"தொபீர் தொபீர்" எனக்
கிணற்றில் குதிப்போம்.
உள்ளே முதுகில்
தகர டின் கட்டி
நீச்சல் பழகிக்
கொண்டிருக்கும்
சிறுவர்கள் ஆளுக்கொரு
மூலையாகச் சென்று
பல்லியைப் போல்
கிணற்றுச் சுவரில்
ஒட்டிக் கொள்வர்.
இதுபோதாதென்று
முங்கு நீச்சலில் சென்று
அவர்களின் கால்களைப்
பிடித்து நீரினுள்ளே
இழுப்போம்.
நிறைய தண்ணீர்
குடித்து, பயத்துடனும்,
இருமலுடனும்
கிணற்றை விட்டு
மேற்கரைக்கு
ஓடி விடுவர்.
அடுத்து ஓடிப் பிடித்து
விளையாட்டு.
தரையைப் போலவே
தண்ணீரின் உள்ளே.
கருங்கற்களைப்
பிடித்துக் கொண்டு
மேலேறி மீண்டும்
கிணற்றில் குதிப்போம்.
யார் அதிக நேரம்
நீரினுள் "தம்"
கட்டுவதெனப் போட்டி.
சில சமயங்களில்
கையில் துண்டைச்
சுற்றிக் கொண்டு
தண்ணீர்ப் பாம்பைப்
பிடித்து விளையாட்டு.
பாம்பு கடித்து விட்டால்
கடித்த இடத்தில்
சுண்ணாம்பைத்
தடவி சிகிச்சை.
இரண்டு, மூன்று மணி
நேரம் செல்வதே
தெரியாது.
கிணற்றுக்காரர் வந்து
விரட்டும் போதுதான்
கரையேறுவோம்.
"அரச மரக் கேணி"
என் நினைவில்
ஆழமாகப் பதிந்த
வசந்தகால நினைவு.
சொல்லத் தயங்கியது:
இனிய நினைவுகளைத்
தந்த அந்த கேணிக்கு
கருப்புப் பக்கங்களும்
உண்டு.
ஆண்டிற்கு இரண்டு
உயிர்களைக் காவு
வாங்கி விடும்.
எங்கள் பள்ளியின்
தமிழாசிரியர்
திரு.கோபால் ஐயர்,
வீட்டிற்கு விடுமுறையில்
வந்த மகள் வயிற்றுப்
பேரன்கள் இருவரைக்
கேணியில் பலி
கொடுத்து விட்டுக்
கரையில் பிரமை
பிடித்து உட்கார்ந்திருந்த
தோற்றம் எங்கள்
இதயங்களைச் சுக்கு
நூறாக உடைத்தது.😢😢
- முகம்மது சுலைமான்,
No comments:
Post a Comment