Saturday, July 25, 2026

சிலம்பொடு ஒரு பயணம் {31}* *இந்திர விழவு ஊர் எடுத்த காதை* *ஐவகை மன்றத்தில் அரும் பலி*

 ••••••••••••••••••••••••••••••••

*{31} சிலம்பொடு ஒரு பயணம்*


*இந்திர விழவு ஊர் எடுத்த காதை*


*ஐவகை மன்றத்தில் அரும் பலி*

••••••••••••••••••••••••••••••••


நகரங்களின் பொலிவையும் மக்களின் வளமையையும் சிறப்புற குறிப்பிட்ட அடிகள் ஐவகை மன்றத்தை அழகாக குறிப்பிடுகிறார். 


*பல் பொதிக் கடைமுக வாயிலும்,   கருந் தாழ்க் காவலும், உடையோர் காவலும் ஒரீஇய ஆகி,*


புதிதாக ஊருக்குள் வருபவர் தன் பெயரை ஒவ்வொரு எழுத்தாகப் பதிவு செய்யும் கண்ணெழுத்துப் பதிவுகள் எண்ணிக்கையில் பலவாக இருக்கும் பண்டப் பொதிகள் நிறைந்திருக்கும் கடைமுக வாயில்,


தாழிட்டு அரக்கு முத்திரை இடப்பட்ட கருந்தாழ் வாயில் 

இரண்டும் இருந்ததாம்.


*கட்போர் உளர் எனின், கடுப்பத் தலை ஏற்றி,கொட்பின் அல்லது கொடுத்தலீயாது,உள்ளுநர்ப் பனிக்கும் வெள் இடை மன்றமும்*


இங்கெல்லாம் காவல் காப்போரின் காவலை மீறி அந்தப் பண்டப் பொதிகளை திருடுபவர் உள்ளார் எனின், 


அவர்களின் தலையில் கடுமையான சுமையினை ஏற்றிச் சுற்றி அலைய விட்டு சுற்றி வரச் செய்வராம்.  

வேறேதும் தண்டனைகள் கிடையாதாம். ஆனால் அந்த சுமை சுமந்த கயவர் கூட்டம் கழுத்தொடிவதால் அச்சமுற்று களவாடுதலை கைவிடுவராம். களவாடிய பொருளை அவர்கள் எடுத்துச் செல்ல விடாத, திருட நினைப்போரை நடுங்க வைக்கும் *வெள்ளிடை மன்றம்* அங்கே இருந்ததாம்.


திரு மோகன் ஐயா தொடர்கிறார்:


ஐவகை மன்றங்களும் அரும்பலியும்.

இந்திர விழவு ஊர் எடுத்த காதையில் நம் பயணம் தொடர்கிறது.

ஐவகை மன்றங்கள் பற்றி காண்போம்.


மன்றங்கள் என்றால் பொது மக்கள்ஏதோ ஒரு நோக்கத்துக்காக, கூடும் பொது  இடம் எனக்கொள்ளலாம்.


வெள்ளிடை மன்றம் பற்றி அழகாக விவரித்தீர்.

என்பார்வையில் மற்ற மன்றங்கள்.


அடுத்தது இலஞ்சி மன்றம்:

இலஞ்சி என்றால் தடாகம் அல்லது குளம் . இங்குள்ள குளத்தில்,கூன், குருடு, ஊமை, செவிடு, அழுகும் குட்டம் முதலான உடல் குறைபாடு உள்ளவர்கள் , நீராடி 

"பழுது இல் காட்சி நல் நிறம் பெற்று,"- நல்ல உடல்நலம்பெற்று  வணங்கிச்செல்வர்.பிரான்சில் உள்ள லூர்து நீரூற்று, திருநள்ளாறில உள்ள நள தீர்த்தம் போல அக்காலத்தில்,

உடல் ஊனமுற்ற மக்கள் நம்பிக்கையுடன் நீராடிய தடாகம்!


அடுத்தது நெடுங்கல்மன்றம்:

வஞ்சனையால் மருந்தூட்டப்பட்டுப் பித்தேறியவரும்,விடப்பாம்பு கடித்தோரும்,பேயினால்  துன்புற்றோரும் ஒரு முறை சுற்றி வந்தாலே, அத்துணைத்துயர்களையும் நீக்கும் ஒளி பொருந்திய *"நெடுங்கல்" மன்றமாம்* இது ஒளிக் கதிர் சிகிச்சை  போல எனக்கொள்ளலாம்.

 பிறகு நம்பார்வைக்கு வருவது பூத சதுக்கமும் பாவை மன்றமும்.

*பூத சதுக்கம்:*

சதுக்கம்என்பது பொதுவாக நான்கு வீதிகள் கூடுமிடம். ஊர்

நடுவே அமைந்த  பொதுத் திடல்

எனக்கொள்ளலாம்.

இங்கு சதுக்க பூதம் இருப்பதால் பூத சதுக்க மன்றமாயிற்று . இது கொடியோரைத் தண்டிக்கும் மன்றம். எப்படிப்பட்ட கொடியோர்?இக்காலத்தில் சர்வ சாதாரணமாக சமூகத்தில்  உலா வரும் இவர்கள் அக்காலத்தில் இனம்கண்டறியப்பட்டு , பூத சதுக்கத்தில் தண்டிக்கப்பட்டவர்கள். 

யார் யார் என்று பார்ப்போம்.

*"தவம் மறைந்து   ஒழுகும் தன்மை இலாளர்"* -தவ வேடம் புனைந்து தீய செயல்கள் புரியும் 'மான் தோல் போர்த்திய குள்ளநரிகள்' !

*"அவம் மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்"* - மறைவாகத் தீய ஒழுக்கத்தில் ஈடுபடும்" அலவல்"( கூடா ஒழுக்கம்) மகளிர்.

*"அறை போகு அமைச்சர்"* - மன்னருக்கு " உள்குத்து " வேலை செய்யும் துரோக மந்திரிகள்!

*"பிறர்மனை நயப்போர்"*- பிறர்மனைவியை விரும்புவோர். இலக்கியங்களிலோ அல்லது சமூக வழக்கங்களிலோ," பஞ்ச மகா பாதகங்கள்( ஐந்து பெரிய குற்றங்கள்) பற்றிக் கருத்து வேறுபட்டாலும் , பிறன்மனை நயப்பது  என்பது மகாபாதகங்களில் ஒன்று என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. "*பிறனில் விழையாமை* பற்றி வள்ளுவர் ஓர் அதிகாரமே இயற்றி உள்ளார்.

அது பேராண்மை எனப் போற்றப்படுகிறது.

"பொய்க்கரியாளர்"- பொய்சாட்சிகூறுவோர்.இதையே தொழிலாக, கொண்டவர்கள் இருக்கிறார்கள் இன்றும் , என்று படித்திருக்கிறோம்.

" புறங்கூற்றாளர்"- " "உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்" என்றார் வள்ளலார், அவர்தம் உறவு கலவாமை வேண்டும் என்ற அறிவுறுத்தலோடு.

இப்பாதகர்கள்யாவரையும் தன்கைப்பாசம் வசப்படுத்துவேன் என்று நான்கு காத தூரம் கேட்கும்படி முழங்கி, அவ்வாறே செய்து அவர்களை அறைந்து கொன்று உண்ணும் சதுக்க பூதம்! உடனடி நீதி; தண்டனை.வாய்தாவுக்கு (விசாரணை தள்ளி வைப்புக்கு) வாய்ப்பே இல்லை!

பாவை மன்றம்:

இந்த மன்றத்தில்  ஒரு பாவைப்பதுமை இருந்தது.

" அரசியல் பிழைத்தோர்" மற்றும் நியாய சபையில் உள்ள நியாயம் வழங்குவோர் ஒரு தலைப்பட்சமாக நடப்பின் ,இந்த பதுமை வாய்பேசாது, கண்ணீர் வடிக்குமாம் -" நவை நீர் உகுத்து......அழுஊம் பாவை!

உள்ளத்தில்துக்கம்பொங்க வாய் ஊமையானதோ?! 

"மெய்வகை உணர்ந்த விழுமியோர்" போற்றும்இந்த ஐந்து மன்றங்களிலும் மக்கள்

வழிபட்டு வந்தனர்.

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...