தமிழ் உறவுகளே வணக்கம்!
கடந்த இரு தினங்களாக *மாயூரம் வேதநாயகம் பிள்ளை* அவர்களுடன் பயணித்தேன். தமிழ் இலக்கிய உலகில் முதல் தமிழ்ப் புதினமாக 1857 ஆம் ஆண்டு இவரால் எழுதப்பட்டு 1879 ஆம் ஆண்டு அச்சில் ஏற்றப்பட்டு பதிப்பிக்கப்பட்ட நூல் *"பிரதாப முதலியார் சரித்திரம்".* தமிழ் இலக்கிய உலகில் அறியப்படுகிற முதல் தமிழ்ப் புதினம் என்ற பெருமைக்குரியது இந்த நூல்
*"இலக்கியம் காலத்தை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி"* - எனும் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் இந்த நூலில் ஒரு பக்கத்தில் 175 லிருந்து 190 வார்த்தைகள் இருந்தால் அதில் குறைந்தது 15 / 20 வார்த்தைகளாவது பிற மொழியாக - குறிப்பாக வடமொழியாக - இருப்பதைக் காணலாம்.
இதனால், நல்ல தூய தமிழில் பேசுவது அப்பொழுது அரிதாக இருந்திருக்கிறது.
பேச்சு வழக்கில் மணி பிராவளம் நடையே இருந்திருக்கிறது என்பது திண்ணம். பல சொற்களுக்கு பொருள் விளங்காமல் கதையைப் படிக்கும் போது அந்த கதையோட்டத்தோடு இயைவது சிறிது கடினமாக இருக்கிறது.
ஆனாலும், மிக நல்ல நடையில் எளிமையாக சுவையாக கதைகள் எழுதப் பட்டுள்ளன. தான் சொல்ல வேண்டிய கருத்துகளை உலகிற்கு கூறும் ஒரு நல்ல வாய்ப்பாக நூலாசிரியர் இந்நூலை பயன்படுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
குறிப்பாக, அக்காலத்தில் (179 வருடங்களுக்கு முன்பு) தமிழில் உரையாடுவதும், உறவாடுவதும் கௌரவக் குறைச்சல் ஆக பார்க்கப் பட்டிருக்கிறது என்பதை ஆணித்தரமாக அவர் பதிவு செய்கிறார். நான்கு ஐந்து பக்கங்களுக்கு மேலாக அவரது வலிமையான கருத்துக்கள் தெள்ளத் தெளிவாக எழுதப்பட்டுள்ளன. இக்காலத்துக்கும் பொருந்தும் பல்வேறு ஆதங்கங்களை அவர் ஆணி அடித்தார் போல் எழுதியுள்ளார். ஓரிரு பக்கங்களை, இப்பதிவை படிப்போரின் கவனத்திற்காக படம் பிடித்து இப்பதிவோடு இணைத்துள்ளேன்.
அதேபோல வேறொரு இடத்தில் பல வழக்குரைஞர்கள் செய்யும் பல்வேறு தகிடுதத்தங்களை விலாவாரியாக எழுதியிருக்கிறார். இன்றைக்கும் அவை அப்படியே பொருந்துகின்றன என்பதை பார்க்கும் பொழுது ஆச்சரியம் மேலிடுகிறது.
*'வசன கவிதைகள் அதிகம் தமிழில் இல்லாதிருப்பது பெரும் குறை'* - என வருத்தப்படும் இவர் அக்குறையை நீக்க தன் முயற்சியாக இந்தப் புதினத்தை எழுதி இருப்பது குறை கூறுவதோடு இல்லாமல் அக்குறையை நீக்க வழியும் காண்பிக்கிறார். இவர் மறைவதற்கு (21 சூலை 1889) ஏழு ஆண்டுகளுக்கு முன் (1882) பிறந்த பாரதி இவரது இந்த மனக்குறையை பின்னாளில் முழுமையாக தீர்த்து வைத்ததை தமிழ் உலகம் அறியும்.
பாத்திரங்களுக்கு இடையே ஆன உரையாடல்களில் பக்கம் பக்கமாக வசனங்கள் போவது கதை ஓட்டத்தை சிறிது பாதிக்கிறது. ஆனால் அக்காலத்திற்கு அது தேவைப் பட்டிருக்கிறது என்பதை நாம் 1950-60 களில் வந்த பல்வேறு திரைப்படங்களில் பக்கம் பக்கமாக வசனம் இருந்திருக்கிறது என்பதன் மூலம் தெரிந்து கொள்கிறோம்.
பெண்களுக்கு சமூகத்தில் தேவையான இடம் கொடுக்காமல் இருந்த காலத்தில் எழுதப்பட்ட புதினமாக இருந்தாலும், இந்நூலில் கதாநாயகனின் அன்னையும் தாரமும் நன்கு படித்த - அறிவாற்றல் மிக்க - சமயோசிதமாகவும் சாதுரியமாகவும் செயல்படும் முக்கிய கதாபாத்திரங்களாக சித்தரிக்கப் பட்டிருக்கின்றன என்பது சிறப்பானது. சமூக மாற்றத்தை, சீர்திருத்தத்தை, பெண்ணுரிமையை வலியுறுத்தும் விதமாக இந்தப் பாத்திரங்கள் வடிக்கப் பட்டிருக்கின்றன. ஆயினும் அக்காலத்தில் காணப்பட்ட பல சமூக அவலங்கள் இந்நாவலில் அங்கங்கே தலை தூக்குவதையும் நாம் பார்க்க இயலுகிறது. சாதிய குறியீடுகள் நூல் முழுதும் பார்த்திடலாம். இதுவும் அக்கால சமூகத்தின் பிரதிபலிப்பு.
எனது நீண்ட நாள் தேடல் தற்போது நிறைவு பெற்று விட்டது. எனது விருப்பப் பட்டியலில் (wish list) ஒன்று நிறைவேறி இருக்கிறது. மனம் மகிழ்வுற்றேன்.
*குறிப்பு*: இந்நூல் நமது நூலகத்தில் இருக்கிறது. விருப்பப் படுவோர் படித்து மகிழலாம்.
*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*
No comments:
Post a Comment