Sunday, May 24, 2026

*நாம் செலவழிக்க தெரியாத முதியவர்கள்தாம்*

 *நாம் செலவழிக்க தெரியாத முதியவர்கள்தாம்*


தற்போது மூத்த குடிகளாய் இருப்போர் மனநிலையை தெள்ளென தெளிவாக படம் பிடிக்கும் பதிவு. 


மேலை நாடுகள் போல் இல்லாத குடும்ப சூழலில் குடும்ப பாரத்தை தாய் தந்தையரோடு தானும் அனுபவித்து வளர்ந்த ஒரு தலைமுறை நாம். 


*நாம் செலவழிக்க தெரியாத முதியவர்கள்தாம்*


நம்மில் அநேகர் இப்போது நாம் அனுபவிக்கும் பல்வேறு வசதிகள் இன்றி ஐந்தோடு ஒன்று ஆறாக ஏன் சில குடும்பங்களில் பத்தோடு ஒன்று பதினொன்றாக வளர்ந்த சூழலில் - இருப்பதை பங்கிட்டு உண்டு கழித்து மகிழ்ந்திருந்தோம். கால் சட்டியில் மட்டும் இருக்கும் கஞ்சியை பகிர்ந்துண்டு வாழ்ந்திருந்தோம். ஆசைப்பட்ட பொருட்கள் கிடைக்காமல் நமக்கு கிடைத்ததை ஆசைப்பட்டு வைத்துக் கொண்டோம். 


*நாம் செலவழிக்க தெரியாத முதியவர்கள்தாம்*


குடும்ப பொருளாதார நிலை எப்படி இருந்தாலும் நமக்கு நற்படிப்பு தர நம் தாய் தந்தையர் தயங்கியதே இல்லை. அரசாங்கம் எஸ் எஸ் எல் சி வரை கொடுத்த இலவச படிப்பும் ஒரு முக்கிய தூண்டுகோலாய் இருந்தது. 


கையில் நாலணா கிடைத்தால் அதை வைத்துக் கொண்டு நாலு நாளைக்கு சந்தோஷமாக வாழ்க்கையை ஓட்டியவர்கள் நாம். 

ஒரே வேளையில் நாலணாவையும் செலவழித்து பழக்கப் படாதவர்கள் நாம். 


பல இல்லங்களில் தாய் தந்தையர் சொந்த வீட்டுக் கனவு நிறைவேறாமலே வானுலகம் ஏகினார்கள். அவர்களின் ஆசியாலும் அவர்கள் கொடுத்த படிப்பாலும் தகுதி வரப்பெற்று நம்மில் பலர் ஏதோ ஒரு நல்ல பணியில் அமர்ந்தோம். கடனை வாங்கி வீடும் கட்டிக் கொண்டோம். கல்வியின் அருமை தெரிந்ததனால், பல சமயங்களில் நம் சக்தியை மீறி குழந்தைகளை நன்கு படிக்க வைத்தோம். நாம் போட்ட விதை நன்றாக வளர்ந்து பலன் கொடுக்க ஆரம்பித்தது. அனேகமாக நம் குழந்தைகள் அனைவரும் மிக நல்ல வேலையில் அமர்ந்து கை நிறைய சம்பாதிக்கிறார்கள். 

நாமும் பணி ஓய்வு பெற்று வங்கிக் கணக்கில் நல்ல தொகையை வைப்பு நிதியில் வைத்துள்ளோம். 


வசதிகள் பல வந்தாலும், வாய்ப்புகள் நிறைய கிடைத்தாலும் *தொட்டில் பழக்கம்* நம்மை விட்டு போகாது என்பது போல நமது சிக்கனம் நம்மை விட்டுப் போகாது. 

கஞ்சத்தனமாக இருப்பது அவலம். கட்டுக்குள் செலவழித்து சிக்கனமாக இருப்பது நல்ல ஜீவிதம். 


*நாம் செலவழிக்க தெரியாத முதியவர்கள்தாம்*


நமது வாழ்நாள் முழுதும் சிக்கனமாக இருந்து விட்டு கையில் பணம் இருப்பதால் மனம் போல் செலவழிக்க நம்மில் பலரால் முடியாது... இயலாது.. அது உளவியல் உண்மை.


 *நாம் செலவழிக்க தெரியாத முதியவர்கள்தாம்*


இன்றும் பல இல்லங்களில் இளைய தலைமுறையினர் புதிய ஷூ வாங்குகையில் *ஜஸ்ட் 14,000 தான்* எனக் கூறுவதைக் கேட்கும் போது, நம் மனம் தத்தளிக்கிறது. 


*நாம் செலவழிக்க தெரியாத முதியவர்கள்தாம்*


அக்காலத்தில் ஹோட்டல் போவது மிகவும் அரிது. தோசை 15 பைசா இருந்த காலத்தில், கிடைக்கும் அரையனாக்களை சேர்த்து வைத்து வாரத்திற்கு ஒரு முறை ஹோட்டல் போய் தோசை சாப்பிட்ட நாட்கள் பொன்னானவை. 

இப்போது ஸ்டார்ட்டருக்கே 350 ரூபாயாம். 


முதலில் சூப்.. அடுத்து ஸ்டார்டர்.. பிறகு மெயின் கோர்ஸ்.. 

அப்புறம் பெவெரேஜஸ் அல்லது டெஸெர்ட்ஸ் எனும் பழக்கம் நமக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கிறது... சாப்பிட்ட பின் வரும் பில்லை பார்க்கையில் நமக்கு அதிர்ச்சியாகவும் இருக்கிறது..


*நாம் செலவழிக்க தெரியாத முதியவர்கள்தாம்*


நமது பெற்றோர்கள் நமக்குச் சொல்லிக் கொடுத்த அடிச்சுவடி *நாம் வாங்கும் சம்பளத்தில் பத்து சதவிகிதமாவது சேமிப்பு செய்ய வேண்டும். அதுவே நம் முதல் செலவாக இருக்க வேண்டும்* என்பதுதானே. அதனை நாம் தாரக மந்திரமாக ஏற்று வாழ்க்கையை நடத்தினோம். 


நமது வாழ்க்கை நமக்கு சொல்லிக் கொடுத்த இன்னொரு முக்கிய விடயம் *தவிர்க்கப்படும் ஒவ்வொரு அனாவசிய செலவும் ஒரு வருமானமே* எனும் ஒரு பொருளாதாரத் தத்துவம். 


இப்படி வளர்ந்த நாம் பல்வேறு செலவுகளை அனாவசியமாக பார்ப்பதில் தவறேதும் இல்லை. ஏனெனில் அதுதான் நமது மனநிலை. 


*நாம் செலவழிக்க தெரியாத முதியவர்கள்தாம்*


ஆனால் ஓர் உண்மையை இங்கு கூறியே ஆக வேண்டும். நமக்கு என்று வருகிறபோது யோசிக்கும் நாம், நம் குழந்தைகளுக்கும் - பேரக் குழந்தைகளுக்கும் செலவழிக்க நேர்கையில் நமது சிக்கனம் ஒதுங்கி வழி விடத்தான் செய்கிறது. அவர்களுக்கு செலவழிக்கையில் நம் கை தாராளமாகவே இருக்கிறது. 


இங்குதான் நாம் தவறு செய்கிறோமோ என்கிற ஒரு குற்ற மனப்பான்மை வந்து நம் நெஞ்சை ஆக்கிரமிக்கிறது. நம் பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்த பொருளாதாரப் பாடங்களை - வாழ்க்கை நடத்தும் அடிப்படை அரிச்சுவடிகளை - நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தர தவறி இருக்கிறோமோ என்கின்ற ஒரு கேள்வி எழுகிறது. 


எது எப்படியோ.. 

*நாம் செலவழிக்க தெரியாத முதியவர்கள்தாம்*


நிறைவாக இப்படிச் சொல்லி முடிக்கிறேன்: 

என் தந்தை என்னிடம் அடிக்கடி கூறுவது உண்டு *"ஒரு பொருளை வாங்கும் முன் இரண்டு அல்லது மூன்று முறை யோசித்து வாங்கு*". இந்த அறிவுரை என்னை வாழ்க்கையில் முன்னேற்றியது என்பதை சொல்லவும் வேண்டுமோ! இன்றளவும் நான் அப்படியே நடந்து வருகிறேன். என் இறுதி மூச்சு இருக்கும் வரையில் அப்படியே வாழ்ந்திடுவேன். 


ஆகையால், 

*நான் தாறுமாறாக/ நினைத்தபடி செலவழிக்கத் தெரியாத முதியவனே*


*இந்த விளக்கு இப்படியே இருந்து - ஒளி உமிழ்ந்து விட்டுப் போகட்டும். ஸ்விட்சை மாற்ற வேண்டாம்*

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...