*{22} சிலம்பொடு ஒரு பயணம்*
*அரங்கேற்ற காதை*
*வினை விளை காலம்*
நடனத்திற்கு இலக்கணமாக மாதவிப் பொன்மயிலாள்
களி நடம் புரிந்தாள்.
தன்னிலை மறந்து அனைவரும் கண்டு களித்தனர்.
இரண்டே வரிகளில் இதனை அருமையாக கூறுகிறார் இளங்கோ:
*பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள்*
இக்கால கவிஞர் *மாதவிப் பொன்மயிலாள்* என்று உரைத்ததை நாம் அறிவோம்.
இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோ அடிகளோ *பொன்னியல் பூங்கொடி* என்று வர்ணிக்கிறார்.
அதாவது ஓர் அழகிய பூங்கொடி பொன்னால் வடிவமைக்கப் பட்டிருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தாளாம் மாதவி. அப்படி ஒளிர்ந்தால
லாம் மாதவி!
அவள் நடனம் *நாட்டிய நன்னூல்*
அதாவது நடன இலக்கணத்தை வகுத்தெறிந்து கூறும் நூல் கூறியது போல அமைந்திருந்ததாம்.
கண்டு களித்து அகமகிழ்ந்த *காவல் வேந்தன்* (அரசனும்)
*தலைக்கோல் எய்தித் தலை அரங்கு ஏறி, விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு ஒரு முறையாகப் பெற்றனள்...*
அந்த நடன மணிக்கு அந்நாட்டு வழக்கப்படி பச்சை மாலையும், தலைக்கோல் பட்டமும், ஆயிரத்து எட்டு கழஞ்சுப் பொன்னும் பரிசாகத் தர மாதவி பெற்றுக் கொண்டாள்.
*இதன் பிறகு தான் கதையில் ஒரு முக்கிய திருப்பம் நிகழ்கிறது. அதனால் அதனைக் கூறும் பாடல் "வினை விளை காலம்" எனும் தலைப்பில் வருகிறது. அதையும் பார்க்கலாம்:*
பரிசில் பெற்ற மாதவியோ நம் மாலையை தனக்கென வைத்துக் கொள்ளாமல் அவள் செய்த செயலே சிலப்பதிகாரத்தின் முக்கிய திருப்பம் ஆகும்.
*நூறு பத்து அடுக்கி எட்டுக் கடை (1008 என்பதன் விளக்கம்) நிறுத்த வீறு உயர் பசும்பொன் பெறுவது இம்மாலை*
*மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கென மான் அமர் நோக்கி ஓர் கூனி கைக் கொடுத்து*
ஆயிரத்து எட்டு பொன் கலைஞ்சு கொண்ட அம்மாலையை ஒரு கூனியின் கையில் கொடுத்து இதனை அதே விலை கொடுத்து நகரில் யார் வாங்குகிறாரோ அவரை என் இல்லம் அழைத்து வா என்று கூறிச் செல்கிறாள் மாதவி.
கூனியும் இம்மாலை வாங்குவோரே மாதவியின் மணாளன் எனக் கூறி கடை வீதியில் விற்க அதனை யார் வாங்குகிறார்கள் என நாம் அனைவரும் அறிவோம். சிலம்பின் வரிகளில் அதனைப் பார்ப்போம்:
*கோவலன் வாங்கிக் கூனி தன்னோடு மணமனை புக்கு மாதவி தன்னோடு ... அயர்ந்தினன் மயங்கி*
அம் மாலையை 1008 பொற்காசுகள் கொடுத்து வாங்கிய கோவலன் அக்கூனியோடு மாதவி இல்லம் செல்கிறான். அந்த இல்லத்தில் நுழைகிறான். மாதவியோடு இன்பம் துய்க்கிறான்.
*வடு நீங்கு சிறப்பின் தன் மனை அகம் மறந்து*
அதாவது மாதவியுடன் கூடி மகிழ்ந்த கோவலன் அவள் மீது வைத்த மையலால் குற்றமற்ற குலக்கொடி மனைவி கண்ணகியையும் தனது வீட்டையும் அறவே மறந்து போனான். மதி மயங்கி தன் வயம் இழந்த நிலை அடைகிறான்.
அரங்கேற்ற காதையின் நிறைவு பாடலாக ஒரு வெண்பா வருகிறது அவ் வெண்பாவின் விளக்கத்தில் எண்ணற்ற விளக்கங்கள் காணப் படுகின்றன. அவற்றை அடுத்த பதிவில் காண்பதே நன்று.
இப்போது மழலைக் கவி மோகன் ஐயா:
மாதவியின் வாழ்வில் பொன் வசந்தமாக , புகுந்த கோவலன் நிகழ்வு, என் கோணத்தில்;
சிறந்த ஒளி, ஒலி அமைப்புகளோடு ஆடலுக்கென்றே அளவிடப்பட்டு அமைந்த அரங்கில் பொன்னால் செய்த பூங்கொடி போல் மாந்தர் போற்றும் மாதவியின் நடனம். மாதவி என்றால் வடமொழியில் வசந்த காலத்தில் பூத்த முல்லைக்கொடி என்று பொருளாம்.
என்ன பொருத்தம்! இந்த பொருத்தம்!!
ஆடலரங்கு அளவோடு அமைந்தது போல இவளும் கொடி போன்ற உடல் அளவுகளோடு பொன் ஆபரணங்கள் பளபளக்க, சுழன்று சுழன்று ஆடுவது பொற்கொடியின் நாட்டியம் போல என வர்ணிக்கிறார் அடிகள்.
எனக்கு ஆடி அசைந்து வரும் அலங்காரத் தேர் நினைவுக்கு வருகிறது.
அதுவும் மேல் சிறுத்து, கீழ் பெருத்து அலங்காரங்கள் காற்றில் அசைய மெல்ல மெல்ல ஆடி வரும்தானே!
நாட்டிய நன்னூல். என்கிறார்.
இந்நூல் நாட்டியத்தை வேத்தியல் (அரசவை ஆடல்) மற்றும் பொதுவியல் (நாடக ஆடல்) என இரு வகைகளாகப் பிரிக்கிறது.
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடும் 'நாட்டிய நன்னூல்' என்பது சங்க காலத் தமிழ் மரபுகளை அடிப்படையாகக் கொண்ட பரதநாட்டிய சாஸ்திரம் போன்ற ஒரு தமிழ் இலக்கண நூலாகும் என்று ஒரு குறிப்பு, கிடைக்கிறது.
எப்படி ஆடினாள் அவள்?
ஆறும் நாலும் அம்முறை போக்கி" -
ஆறு வகையான கூத்துக்களையும், நான்கு வகையான நாடக மரபுகளையும் முறைப்படி பின்பற்றி ஆடினாளாம்.
"கூறிய ஐந்தின் கொள்கை" என்பது நாட்டியத்தில் கை, கால், முகம், உடல் அசைவு, மற்றும் கண் ஆகிய ஐந்து உறுப்புகளும் ஒருங்கிணைந்து ஆடும் முறை.
ஆடல்மகளுக்கு நாடாளும் கோன் , கோல்- நம்ம தலைக்கோல்தான் (!), கூட "இலைப்பூங்கோதை-(இலையும் பூவும் தொடுத்த மாலை) ஒன்றையும் பரிசாக அளித்தான்.
அது மட்டுமா?
ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன்னும் கொடுத்தான்.
கழஞ்சு? ழகரக்கவி எழுதலாமா இதைப்பற்றி?!
கழஞ்சு என்பது தற்கால அளவில் 5 கிராம்பொன். 1008 கழஞ்சு என்பது 5.04 கிலோகிராம். இன்றைய நிலவரம் ஒரு கிலோ தங்கம்- 24 காரட்- விலை 1 60, 91, 000 ரூபாய்கள்.
மாலையின விலை
8,10,98,640 ரூபாய்கள்!
கணக்குப்போடுவதற்கே மூச்சு வாங்குகிறதே!
இதைக் கொடுத்து, கோவலன் கடைத்தெருவில் கூவி விற்ற கூனி ஒருவளிடம் மாலையை, அலட்சியமாக வாங்கினான் என்றால் அவன் அக்கால அம்பானி குடும்பத்தவன்தான்!
பொற்கொடி போன்றவளுக்கு மேலும் பொன் தேவையோ?
அதனால்தான் விற்க அனுப்பினாளோ?!
மாலை மாற்றி மணம் செய்த மனையாளை மறந்து மாலை விற்றவள் "மனையேறினான்" மாசாத்துவான் மகன்.
அந்தோ!
மாதவிக் கொடியோடு பிணைந்து இளைப்பாற அல்லவோ செய்கிறான். கலங்கிய கண்ணினாள் கண்ணகி "வடு நீங்கிய சிறப்புடை மனையாள்"
தனியாள் ஆனாள்.
இக்காலத் தொலைக்காட்சித்தொடராக இருந்தால், திரை மூன்று பிரிவுகளாக- இடது பக்கம் மகிழ்வுக்கண்ணினாள் மாதவி நடுவில் " அலையும் கண்களோடு" கோவலன் , வலது பக்கம் கண்கள் கலங்கிய கண்ணகி; வலது கோடியில் கீழே- தொடரும், என்று முத்தாய்ப்பு வைத்திருப்பார்கள்.
நாமும் பயணத்தைத்
தொடருவோம்.
No comments:
Post a Comment