Saturday, May 30, 2026

} சிலம்பொடு ஒரு பயணம்* (23) •••••••••••••••••••••••••••••• *அரங்கேற்ற காதை* *காதை சுருக்கம் விளக்கும் வெண்பா* ••••••••••••••••••••••••••••••

 *{23} சிலம்பொடு ஒரு பயணம்*


••••••••••••••••••••••••••••••

*அரங்கேற்ற காதை*


*காதை சுருக்கம் விளக்கும் வெண்பா*

••••••••••••••••••••••••••••••


அரங்கேற்றக் காதையின் நாயகியான மாதவி பற்றி காதையின் நிறைவாக எழுதப்பட்ட மிக சிறப்பானதொரு வெண்பா பற்றி இப்போது பார்க்கலாம்:


*எண்ணும் எழுத்தும் இயலைந்தும் பண்ணான்கும்*


*பண்ணின்ற கூத்துப் பதினொன்றும்-- மண்ணி ன்மேற்*


*போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன்*


*வாக்கினால் ஆடரங்கின் வந்து.*


அதாவது, புகார் நகரிலே பொன்னாலாகிய வளை அணிந்த மாதவியானவள், தலை அரங்கிலே வந்து, 

எண்ணும், எழுத்தும், இயல் ஐந்தும், 

பண் நான்கும், பண்ணுக்கிசைந்த பதினொரு வகையான கூத்தும் கலந்து தன் நாட்டிய திறமையை வெளிப் படுத்தி, உலகம் முழுதும் உள்ளோரெல்லாம் புகழ்ந்து பேசும் படியாக, ஆடியும் பாடியும் பார்ப்போர் மனம் கவர்ந்தாள். அதனால், உலகு போற்றும் சிறப்பும் பெற்றாள்.


மாதவியின் அறிமுகம், அகத்திய முனியால் இடப்பட்ட சாபம், ஊர்வசியே மாதவியாய் இந்திரன் மகன் சயந்தனே தலைக்கோலாய் பிறந்திட்ட நிகழ்வு, 

தலைக் கோலின் சிறப்பு, ஆடற் கலையின் சிறப்புகள் - வகைகள், ஆடரங்கின் அமைப்பு மற்றும்  அமைக்கும் விதங்கள், வாத்திய கருவிகளின் சிறப்புகள் மற்றும் வகைகள், மாதவியின் ஆடற் பெருமை, அரசன் கொடுத்த பரிசுகள், 

வினை விளை காலம் விளைந்தது, 1008 கழஞ்சு உள்ள மாலை விற்றது, அதனை கோவலன் பணம் கொடுத்து வாங்கி பெற்றது, விற்ற கூனியோடு மாதவி இல்லம் ஏகியது, கண்ணகியை அறவே மறந்தது என அடுத்தடுத்த நிகழ்வுகளை விளக்கிய அரங்கேற்றுக் காதையின் முத்தாய்ப்பாக மாதவியின் அழகை - நடன நளினத்தை விளக்கும் வெண்பாவோடு இக்காதை நிறைவுறுகிறது.


மழைக்கவி மோகன் ஐயா தொடர்கிறார்:


ஐயா,வணக்கம்.

அரங்கற்றக்காதையின் முடிவில், அடிகள்  ஒரு வெண்பா மூலம் காதையின் சுருக்கத்தை விளக்குகிறார். நீரும் வெண்பாவின் கருத்தை , சிறப்பாக எடுத்துரைத்தீர்.


சிலப்பதிகாரம் முழுவதும் நிலைமண்டில ஆசிரியப்பா என்னும் பாவகையால் ஆனது. எனினும், இது உரைநடையும் பாடல்களும் கலந்து அமைந்த *'உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்'* ஆகும். 


சிலப்பதிகாரத்தில் வெண்பாக்களும் உள்ளன.

சிலப்பதிகாரத்தில் வெண்பாக்கள் ஏன் உள்ளன?


சிலப்பதிகாரத்தில் வெண்பாக்கள் இடம் பெறுவதற்கு முக்கிய காரணம், கதையின் காப்பியம் முழுவதும் ஆசிரியப்பாக்களால் அமைந்திருந்தாலும், உணர்ச்சிப் பெருக்கின் உச்சத்தில் அல்லது காதைகளின் இறுதியில் வெண்பாக்கள் பிரத்யேகமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன. 

சிலப்பதிகாரத்தில் வெண்பாக்கள் கையாளப் பட்டதற்கான மற்ற காரணங்கள் :

-ஒரு காதையின் முக்கிய நிகழ்வு முடிவடையும் தருணத்தில், அக்காதையின் சாராம்சத்தை வாசகர்களின் மனதில் ஆழமாகப் பதிய வைக்க வெண்பாக்கள் உதவுகின்றன.

-கதாபாத்திரங்களின் உணர்வுகளை நேரடியாக வெளிப்படுத்த வெண்பாக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

-சான்றோர் கூற்று கதை்கு நம்பகத் தன்மையை வழங்குகின்றன.


*இலக்கிய மரபு:* வெண்பா இலக்கணக் கட்டமைப்பானது ஓசை நயமும் பொருள் செறிவும் கொண்டது. எனவே, பழந்தமிழ் இலக்கிய மரபைப் பின்பற்றி இளங்கோவடிகள் இதைப் பயன்படுத்தியுள்ளார்.


*"எண்ணும் எழுத்தும்"* -

எண்ணிக் கணக்கிடும் எண், எழுதிக் கருத்தை வெளிப்படுத்தும் எழுத்து, 


*"இயல் ஐந்தும்"-*

இயற்றமிழின் ஐந்து இலக்கணங்களைக் குறிக்கிறது (எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி).


*"பண் நான்கும்"-*

இசைத் தமிழுக்குரிய பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி ஆகிய நான்கு வகையான பண்கள் (இராகங்கள்).


பண் என்பது இசையின் அடிப்படை வடிவங்களில் ஒன்று.

தற்காலத்தில் தென்னிந்திய கருநாடக இசை மற்றும், இந்துஸ்தானி இசைகளில்வழங்கும் இராகங்கள் என்பது பண்ணிற்கு ஏறத்தாழ இணையான ஒரு வடிவம்

பிரிக்கப் படுகின்றன. 

உதாரணம்- பண் கௌசிகம்- இராகம் பைரவி.


*"கூத்து பதினொன்றும்"*

பதினோரு கூத்து வகைகள்: -கொடுகொட்டி:  சிவபெருமான் திரிபுரம் எரித்தது

-அல்லியம்: கண்ணன் - கம்சன்

-மல்லாடல் (மல்லியம்): கண்ணன் மல்லர்களோடு

-குடைக்கூத்து: முருகன் குடையுடன் ஆட்டம்

-குடக்கூத்து: திருமால் தண்ன் பெயரனை சிறை மீட்ட ஆட்டம்

-துடிக் கூத்து: முருகன் சூரபத்மனை வென்றபின் துடி என்ற இசைக் கருவியுடன் ஆடிய ஆட்டம்.

-பேடிக்கூத்து: மன்மதன் (காமன்) பேடி உருவம் கொண்டு ஆடிய ஆட்டம்.

-மரக்கால் கூத்து: துர்க்கை மரக்கால் (காலணி) கொண்டு ஆடிய ஆட்டம்.

-பாவைக் கூத்து: திருமகள் (இலக்குமி) பாவை (பொம்மை) போல வேடமிட்டு ஆடிய ஆட்டம்.

-கடையக் கூத்து: இந்திரனின் மனைவி இந்திராணி அசுரர்களை வென்று ஆடிய ஆட்டம்.


ம்ம்ம்- பார்ப்பவருக்கே மாற்றி மாற்றி வந்த ஆட்டங்கள் பிரமிப்பில் மூச்சு முட்ட வைத்திருக்குமே.!வெவ்வேறு தாள கதிகள், பின்பாட்டுகள், அலங்கார மாற்றங்கள். அப்பப்பா! உடனுக்குடன் செய்ய வேண்டிய மாற்றங்கள். ஆம் , அரசரைக் காக்க வைக்க முடியாதே.


பயணத்தின் அடுத்த கட்டமாக, *அந்திமாலை சிறப்பு செய் காதை* யில் பிரவேசிக்கிறோம்.

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...