Monday, February 9, 2026

ராக்கி

 ராக்கி


கல்லூரியில் இருந்து வீட்டிற்கு போக வேண்டும் என்றால் 2 மணி நேரம் ஆகும். வழியெங்கும்

பச்சை பசேல் என வளர்ந்திருக்கும் புற்கள். அவற்றிடமிருந்து தானியங்களைக் கடனாக வாங்கிச் செல்லும் பறவைகள். பின்னால் உரமாக திருப்பித் தருகிறேன் என்று சொல்லிவிட்டு  ஒரே நேரத்தில் கொத்தாக பறந்து சென்றன. ஆனால் இவை எதுவும் என்னை வியக்க வைக்கவில்லை. ராக்கி. அவன் மட்டும்தான் எனது முழு சிந்தனையிலும் உள்ளான். அன்றைக்கு ஒரே மழை. எல்லோரும் மழையை எமன் போல பாவித்து நனைத்து கொள்ளாமல் குடை பிடித்து சென்றனர்.  ஆனால் ராக்கி மட்டும் பாவம். நனைந்தபடி நடுரோட்டில் தத்தளித்துக் கொண்டிருந்தான். அவனுடைய அம்மாவை ஏதோ பெரிய வண்டி ஏற்றி சென்று விட்டது, தனது அம்மா செத்தது கூட தெரியாமல்,  அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள் என நினைத்து பால் குடிக்க எழுப்பிக் கொண்டிருந்தான். செத்த பிறகும் தனது பிள்ளைக்காக பால்மடியை காட்டிக்கொண்டே படுத்திருந்தாள் அவன் அம்மா. இதை பார்த்தவுடன் எனக்குள் ஏதோ ஒரு அழுகை. அவனை தூக்கிச் சென்று வளர்க்க வேண்டும் என்று தோன்றியது.  ஆனால் என்னம்மா என்ன சொல்வாள்? கண்டிப்பாக அவனை ஏற்றுக் கொள்ள மாட்டாள்.  ஏனென்றால் அவள் சின்ன வயதில் இருக்கும் பொழுது நாய் கடித்ததை இன்றும் அடிக்கடி சொல்லிக் காமித்துக் கொண்டிருக்கிறாள். இருந்தாலும் அம்மாவிடம் கெஞ்சிப் பார்ப்போம் என்று தூக்கிச் சென்றேன்.  வழி எங்கும் என் அம்மாவிடமிருந்து ஏன் என்னை பிரித்துக் கொண்டு போகிறாய் என்று ராக்கி கேட்டது போல இருந்தது. அம்மா என்னையும் நாயையும் பார்த்தது தான் தாமதம். உடனே சப்பாத்தி குழவியை எடுத்து அடிக்க வந்தது போல் ஏன்டா நாயே! என்று திட்ட ஆரம்பித்து விட்டாள்.  அம்மாவிடம் எப்படியோ காலில் விழுந்து கெஞ்சாத குறையை கெஞ்சி அவனை வீட்டுக்குள் கொண்டு போய் விட்டேன். ஒரு வழியாக அவனுக்கு பாலும் கொடுத்தாகிவிட்டது. நன்றாய் உறங்கிப் போனான். 


அன்று முதல் ராக்கி எங்கள் தெருவிற்கே செல்ல குழந்தையாக மாறிவிட்டான். எல்லோரும் வந்து கொஞ்சத் தொடங்கினார்கள் . ராக்கியை தூக்காத நபர்கள் ஒரு சிலர் மட்டும்தான். அதில் ஒன்று என்னுடைய அம்மா. இரண்டாவது எதிர் வீட்டு போலீஸ் அங்கிள். அம்மா எப்போதுமே ராக்கியை ஏதோ எதிரியை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனை எப்ப பார்த்தாலும் கரிச்சி கூட்டிக் கொண்டே இருப்பாள். ஒரு நாள் திடீரென இரண்டு பேர் வீட்டிற்குள் வந்து ராக்கியை பற்றி விசாரித்தார்கள். அவர்கள் தான் ராக்கியின் அம்மாவை வளர்த்தவர்கள் என்றும் சொன்னார்கள்.  அப்போது என் அம்மா சண்டை பிடிக்கத் தொடங்கினாள. இவன் இந்த நாயை கொண்டு வந்து ஆறு மாதம் இருக்கும் இத்தனை நாள் எங்கே போனீர்கள் என்று கையில் சமைத்த பாத்திரத்தை வைத்துக் கொண்டு சத்தம் போட்டு கேட்டு கொண்டிருந்தாள். அப்போதுதான் நான் புரிந்து கொண்டேன். என் அம்மாவையும் ராக்கி ஆக்கிரமித்துக் கொண்டிருந்தான். என் அம்மாவிடம் கேட்டேன் என்னம்மா ராக்கியை உனக்கும் பிடித்து போச்சா என்று. என்னை கடிக்காமல் ஓரமாக போனால் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்லிக்கொண்டே சாப்பாடு எடுத்து வந்து கொடுத்தாள். 


ராக்கி. அவனிடம் ஏதோ மாயாஜால சக்தி உள்ளது.  ஒரு நாள் எதிர்வீட்டு சங்கீதா அக்கா ராக்கிக்கு ஒரு செயின் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தாள். அந்த சங்கிலியை போட்டவுடன் ராக்கி இங்கும் அங்கும் துள்ளத் தொடங்கினான். இதை பார்த்துக் கொண்டே வந்த சங்கீதா அக்காவின் அப்பா போலீசங்கள் சங்கீதா அக்காவை திட்டினார். நான் உடனே அந்த சங்கிலியை கழட்டி அக்காவிடம் கொடுத்து ராசியை உள்ளே கூட்டிக் கொண்டு போய் விட்டேன்.  ஆனால் இந்த அங்கிள் எப்ப தான் திருந்த போகிறார் தெரியவில்லை. 


ஒரு நாள் ராத்திரி சுமார் மூன்று மணி இருக்கும். ராக்கி வீட்டின் முன்பு நின்று சத்தமாக குறைத்துக் கொண்டிருந்தான். எங்களுக்கும் ஒன்றும் புரியாமல் வெளியில் வந்து பார்த்தோம். அப்போது தான் தெரிந்தது போலீஸ் அங்கிள் வீட்டு வாசலில் இருந்து இரண்டு மூன்று பேர் திபு திபு என ஓடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் போகும்போது ராக்கியின் மேல் மிளகாய் பொடியை தூவி விட்டு போயிருக்கிறார்கள். போலீஸ் அங்கிள் வெளியில் வந்து பார்த்த பிறகு தான் தெரிந்தது அவர்கள் இந்த வீட்டில் திருட வந்தவர்கள் என்று. ஆனால் ராக்கி குறைக்கும் சத்தத்தை கேட்டு ஓடியே விட்டார்கள். போலீஸ அங்கிள் அன்று உண்மையிலேயே ராக்கியைப் பற்றி புரிந்து கொண்டிருப்பார். மறுநாள் காலையில் போலீஸ் அங்கிள் ராக்கியை பார்க்க வந்தார். அவனை ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய் இருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் அங்கேயே வந்து விட்டார். கையில் செயினுடன் ஹாஸ்பிடல் வாசலில் காத்திருந்து நானும் ராக்கியும் வெளியில் வந்தவுடன் அவரை அதை போட்டும் விட்டார் ஒரு வழியாக போலீஸ் அங்கிளையும் மடக்கி விட்டான். அன்று முதல் நிறைய நாள் போலீஸ் அங்களோடு தான் வாக்கிங் போவான் எப்படியோ அங்கிள் அவனை கொஞ்ச ஆரம்பித்து விட்டார் 


என்னுடைய தம்பி எப்போதும் ராக்கி கட்டி புரளுவான். அவனுக்கு ராக்கியை அவ்வளவு பிடிக்கும். ஒரு நாள் அம்மா தம்பி ராக்கி மூன்று பேரும் காலையில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது நிறைய நாய்கள் என் தம்பியை பார்த்து குறைக்க ஆரம்பித்து விட்டன. தம்பி சொன்னான் ராக்கி ஒருவனாக நின்று அத்தனை நாய்களையும் துரத்தி விட்டானாம் இதைக் கேட்டவுடன் அவனுக்கு உண்மையிலேயே பெரிய மாயாஜால சக்தி தான் உள்ளது என்று நான் நம்ப ஆரம்பித்து விட்டேன் எப்படியோ அன்று முதல் அம்மாவையும் வளைத்து போட்டு விட்டான் வீட்டுக்கு வந்தவுடன் அம்மா அவனைப் பற்றி கொஞ்சம் அதிகமாகவே புகழ்ந்தாள்.  அன்றுதான் முதல்முறையாக அம்மா ராக்கியைத் தொட்டாள்.  அம்மா தொட்டு தடவி கொடுத்தது தான் தாமதம் உடனேவே அம்மாவின் மடியில் போய் உட்கார்ந்து விட்டான்.  என்னமோ பெத்த அம்மாவை பார்த்த சந்தோஷம் வந்தது போல அவனும் சிணுங்க தொடங்கி விட்டான் அப்புறம் என்ன அம்மாவும் ராக்கியும் ராசி ஆகிவிட்டார்கள். 


அன்று முதல் அம்மா தான் ராக்கிக்கு சாப்பாடு ஊட்டி விடுவாள். அவனை குளிப்பாட்டுவாயள்.  அவனுக்கு உடம்பில் முடியை வாரி விடுவாள். அம்மா என்ன செய்தாலும் ராக்கியை பக்கத்தில் வைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டாள். என் தம்பி ராக்கியின் வாயில் சோப்பு சாமானை போட்டு திரும்ப எடுத்து விளையாடுவான்.முகத்தை பிடித்து இழுப்பான்.  ராக்கி ஒண்ணுமே சொல்ல மாட்டான். கத்தவும் மாட்டான். எப்படியோ இரண்டு பேரும் அண்ணன் தம்பியாகவே மாறி விட்டனர்.  எங்கள் தெரு முழுக்க எல்லோருக்கும் ராக்கி ஹீரோதான்.  அவனோடு விளையாடாதவர்களே கிடையாது என்று சொல்லலாம். ராக்கி வந்து இரண்டு வருடம்  முடிந்து விட்டது.  ஹாஸ்டலுக்கு போன பிறகு ராக்கியை அடிக்கடி பார்க்க முடியாமல் போனது. கண் முழுக்க கண்ணீர். பக்கத்தில் இருப்பவர்கள் என்னை உத்து உத்து பார்க்கிறார்கள் என்று கூட கவனிக்காமல் அழுது கொண்டே வீட்டிற்குச் சென்றேன். அம்மா வீட்டின் சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருந்தாள். ஆனால் கத்திக் கொண்டே இருந்தாள். தம்பி தூங்கிக் கொண்டிருந்தான் ஆனால் எங்கேயுமே ராக்கியின் போட்டோவை காணவில்லை ஆமாம் ராக்கி இப்போது போட்டோவில் தான் இருக்கிறான். இரண்டு நாட்களுக்கு முன்னாடி தம்பியை நல்ல பாம்பு கடிக்க வந்தபோது அதனோடு சண்டையிட்டு இறந்து போய் விட்டான். தம்பியையே காப்பாற்றி விட்டு இறந்ததனால் அம்மா என்ன செய்வது என்றே தெரியாமல் அவனைத் தூக்கிக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு ஓடி இருக்கிறாள். ஆனால் ராக்கி இறந்து விட்டதாக சொன்னார்களாம் அம்மா அழுது கொண்டே எனக்கு போன் பண்ணினாள்.  


இரண்டு நாட்களில் எக்ஸாம் முடிந்து வருவதற்குள் எல்லாம் முடிந்தாகிவிட்டது. ராக்கி இப்போது போட்டோவில் தான் இருக்கிறான். ஆனால் அந்த போட்டோவையும் காணும். எங்க போச்சு என்று அம்மாவிடம் கேட்டேன். அம்மா அழவில்லை.  ஆனால் அழுத குரலில் சொன்னாள். அவன் நம்ம வீட்டு குல சாமி டா. அதனால சாமி ரூம்ல வச்சிருக்கேன்னு சொன்னாள். உடனே சாமி ரூமுக்கு போய் பார்த்தேன்.முருகர் படத்துக்கு பக்கத்தில் ராக்கியின் போட்டோவை வைத்து குங்கும போட்டு வைத்து பூ சாத்தப்பட்டிருந்தது.  இதை பார்த்தவுடன் இதுவரை அடக்கி வைத்துக் கொண்டிருந்த அழுகை எல்லாம் பீறிட்டு வந்தது. நான் என்னவென்று சொல்லி அழுவேன். ராக்கி செத்துவிட்டதை நினைத்தா? அல்லது இந்த தெருவில் எல்லோருக்கும் நல்லது செய்து விட்டு செத்தான் என்பதை நினைத்தா? 


அழுது கொண்டே அவனை புதைத்த இடத்திற்கு போயிட்டு வரேன் அம்மா என்று சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினேன்.  ஒரே மழை. மீண்டும் நடுத்தெருவில் ஒரு குட்டி நாய் தவித்துக் கொண்டிருந்ததை பார்த்தேன்.



-  ராக்கி

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...