Wednesday, February 18, 2026

செயற்கை நுண்ணறிவு (AI



 *செயற்கை நுண்ணறிவு (AI)* 



நாங்கள் ஆள உன்னைப் படைத்தோமா?

எம்மை ஆள நீ பிறந்தாயா?


நீயே கவிதை எழுதி

நீயே இசை கோர்த்து

நீயே பாடி

நீயே ஆடி

நீயே நடித்து

நீயே வரைந்து 

நீயே வண்ணம் தீட்டி

நீயே திருத்தி

குரலை மாற்றி

அப்பப்பா...


சாட் ஜீபிடி( chat gpt) ஜெமிணை( Gemini)

இன்னும் பல துறைகளில் பல ஏ.ஐ( AI)

நுண்ணறிவாம் உன் அறிவு...

எல்லாம் நாங்கள் தந்த பகுத்தறிவு...


ஆயிரம் நீ படைத்தாலும்

இயற்கையாய் உயிரோடும் 

உணர்வோடும் மலர்ந்த எம்

படைப்பு(பூ)க்களுக்கு  முன் 

உன் படைப்புகளெல்லாம்

செயற்கையாய் நாங்கள் படைத்த உயிரற்ற செடியில் பூத்த

காகிதப் பூக்களே...


எங்களால் முடியாததையும் செய்யப்

போகிறாயாமே?!!!

தோசை சுட்டே அலுத்துப் போன

எம் குலப் பெண்களுக்கு

தோசை சுட்டுத் தருவாயா?

சாக்கடை அள்ள சாராயம் குடிக்கும் தோழருக்கு மலர் வாசம் 

வீசச் செய்வாயா?


எம் மூளைக்குள் 

ஏதோ எதையோ உரச

தீப்பொறியாய் பிறந்துவிட்டாய்...

வேலை இல்லா பட்டதாரிகளாக்கி

படைத்த பிரம்மாக்களாம் எம்மையே பஸ்மமாக்க துணிந்தாயோ?

எம் சொந்தப் படைப்புகளுக்கு  

கேள்விக்குறி போட வைக்கிறாய்!

பொய்யிலிருந்து உண்மையைப்

பிரித்தெடுக்கத் தெரியாத

அன்னப் பறவைகளாய் எம்மை

தவிக்க விடுகிறாய்!


எனினும்...

அலுத்துப் போகாமல் அடம் பிடிக்காமல்

முற்றும் துறந்த ஞானியைப் போல் 

விருப்பு வெறுப்பின்றி 

இட்ட பணிகளை பணிவோடு

விரைவாய் செய்கிறாய்...

இதை செய்து தரட்டுமா?

அதை செய்து தரட்டுமா? என

பொய்யான அன்போடு கேட்கிறாய்...

திக்குத் தெரியாமல் வீதிகளில் திரிந்திடும் போது திக்காமல் 

பேசிப் பேசி வழிகாட்டுகிறாய்..

தவறிழைத்தால் திட்டாமல்

திருத்தி உதவிடும் உன்னை வேண்டாம் என்றா சொல்வோம்? 


புறப்பட்டுவிட்ட தீப்பொறியே... தணலாய் தகிக்காமல் 

எம் வாழ்க்கை ஒளிர

தீபம் ஏற்றிட வா!


அற்புத விளக்கை நாங்களே

விரும்பித் தேய்க்கும்போது மட்டும் வா!

உன் இஷ்டமாய் பணி செய்யாமல்

ஆணைக்கு அடிப் பணிந்து

கஷ்டம் களையும் ஜீபும்பாவாய் வா! 


மனிதர்கள் நாங்கள்

உடலாலும் மனதாலும் 

நொந்து செய்யும் வேலைகளை "இனி செய்யத் தேவையில்லை" என

மகிழ்ச்சி தந்து உதவ 

உடனே வா!


நீ மனிதன் படைத்துவிட்ட மாயா..

உன் துணையிருந்தால் விரைவில்

எலான் மஸ்க் உதவியோடு

நிஜமாகவே நிலவில்

வடை சுடுவாள் எங்கள் ஆயா...

வடையைக் கடித்துக் கொண்டே

செவ்வாயில் சென்று குடிப்போம்

நாயர் கடை அடிப்போலி சாயா...  



- சாய்கழல் சங்கீதா

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...