Tuesday, January 27, 2026

காத்திரு!

காத்திரு!


இருள் சூழ்ந்த வேளை 

காத்திரு!

வெளிச்சத்தின் கீறல்

இமை முடி வருடி 

இருளை கிழித்து

தன் இயல்பினை

இயம்பும் வரை

காத்திரு!


அடைய வேண்டியதும்

அடையும் பாதையும்

அறிவின் ஆளுமைக்குள்

அடங்க மறுக்கும்போது

அச்சம் சிறிதுமின்றி 

அலறிடும் குழப்பக் கூச்சல்கள் 

அடங்கி ஒடுங்கும் வரை 

அமைதியாய்  காத்திரு!


சேற்று நீர்

தெளியும் வரை காத்திரு

ஊற்று நீர் 

சுரக்கும் வரை காத்திரு

சீறும் புயல் காற்று 

தென்றலாய் புன்னகைக்கும்

வரை காத்திரு

வறண்ட பூமியில்

வசந்த மழை கொட்டும் 

வரை காத்திரு

விதை தன் வீரியத்தை

விளக்கும் வரை

காத்திரு!


கூட்டுப் புழுவாய்

நீ இருக்க நேர்ந்தால்

வெறுமை உலகில்

வண்ணங்களை தெளிக்க

நீ விரும்பினால்..

சுதந்திர வானில்

சிறகடித்துப் பறக்கும்

பட்டாம்பூச்சியாய் 

உருமாறும் வரை 

காத்திரு!


காத்திரு!

காத்திருப்பின் கடைசி நொடி வரை

கலங்காமல் காத்திரு!

காத்துக் கொண்டே

காலம் கழிக்காமல்

காத்திருப்பை உடைக்கும்

கருவியாய் உன்னையே

உருவாக்கி மெருகேற்றி

உருப்படியாய் காத்திரு! 



- சாய்கழல் சங்கீதா

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...