••••••••••••••••••••••••••••••••
*{28} சிலம்பொடு ஒரு பயணம்*
*இந்திர விழவு ஊர் எடுத்த காதை*
*காலை இளம் கதிரும் - மருவூர்ப் பா*
••••••••••••••••••••••••••••••••
இரவுப் பொழுதும் முடிந்தது
விடியல் பொழுது புலர்ந்தது
செங்கதிரும் எழுந்தது
இவ்வழகை அடிகள் வரிகளில் பார்ப்போம்:
*ஆரப் பேரியாற்று மாரிக் கூந்தல்*
மலைமுகடை தழுவி ஓடும் கரிய மேகங்களே கருங்கூந்தல் ஆக
(எங்கே நமக்கு, *அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்.. சரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்* எனும் கவியரசின் வரிகள் நினைவுக்கு வருகிறது அல்லவா)
*மண்ணக மடந்தை புதைஇருள் படாஅம் போக நீக்கி*
பூமகள் மேல் போர்த்தியிருந்த இருள் எனும் கரிய போர்வையை விலக்கிட
*உலகு விளங்கு அவிர்ஒளி மலர்கதிர் பரப்பி,*
மலையின் உச்சியிலே விரிகதிர் விரித்து செங்கதிரவன் கீழ் திசையில் உலகம் விழித்திட உதித்தான்.
காலையில் கதிரவன் எழும் நிகழ்வை கூறி பின் மருவூரப் பாக்கம் எனும் நகரை மிக அருமையாக வர்ணிக்கிறான்:
*வேயா மாடமும், வியன்கல இருக்கையும், மான்கண் காதலர் மாளிகை இடங்களும்,*
கூரைகள் மேயாத மாடங்களும், விலை உயர்ந்த ஆபரணங்கள் இருக்கும் அறையும்,
சிறிய மான் கண்களைப் போன்ற சாளரங்கள் கொண்ட விதானமும் கொண்ட வீடுகள் நிறைந்திருந்தன.
*கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள் கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்,*
திரை கடலோடி வணிகம் செய்து பெரும் செல்வம் திரட்டிய மீகாமர்கள் வசிக்கும் கடற்கரை குடியிருப்புகள் அதிகம் இருந்தன.
*வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும் பூவும் புகையும் மேவிய விரையும் பகர்வனர் திரிதரு நகர வீதியும்,*
வண்ணக் குழம்பு சுண்ணப் பொடி, வாசக் குளிர் சந்தனம், பல நிற பூக்கள், பூமாலைகள் அகில் போன்ற நறுமண பொருட்களை விற்பவர்கள் சுற்றிக் கொண்டிருக்கிற நகர வீதியும்
*மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா*
விலைமதிக்க முடியாத முத்துக்களும், வைர வைடூரியங்களும், பொன்னும் இன்னும் பல விலை உயர்ந்த பொருட்களும் கொட்டிக் கிடக்கும் வணிக வீதிகளும் இருந்தன.
ஊரின் சிறப்பைத் தொடர இதோ வருகிறார் மழலைக் கவி:
ஐயா,
இந்திர விழவைப் புகார் நகரம் கொண்டாடும் விதத்தை நாம் இருவர் பார்வையில் காண ஆரம்பிக்கிறோம்.
மழை வளம் , வேளாண் நலம் போன்றவை வேண்டி இந்திரனைச் சிறப்பித்து சித்திரை மாத பௌர்ணமியில் தொடங்கி 28 நாட்கள் தொடரும் விழா இது.
தூங்கெயிலெறிந்த தொடித்தோள் செம்பியன்' என்ற சோழ மன்னன் ஆரம்பித்த விழா இது என்று அறியப்படுகிறது.
புகார் நகரம் இரு பிரிவுகளாக இருந்தது. மருவூர்பாக்கம் நகரின் உட்பகுதியாக, வாணிபம், தொழில் செய்வோரைக்கொண்டது. பட்டினப்பாக்கம் கடலோரம் மேட்டுக்குடியினர் வசிக்கும் இடம், நம்சென்னையின் கிழக்கு கடற்கரை சாலை போல!
நாம் மருவூர்பாக்க வீதிகளில் சுற்றிப்பார்க்க நுழைந்து விட்டோம்.
" பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டும் நுண்வினைக்காருகர்"-நுட்பமாக ஆடைகளை உருவாக்கும் தையல் கலைஞர்கள்,
கூலம் (தானியங்கள்) குவித்த
கூலவீதி( தானியங்கள விற்கும் அங்காடிகள்நிறைந்த தெரு)
பிட்டு விற்கும் காழியர் ,
அப்பம் விற்கும் கூவியர் ,
கள் விற்கும் பெண்டிர் -யாட்டியர்
மீன் விற்கும் பரதவர்
உப்பு விற்பவர் -பகருனர்- (உமணர் )
வெற்றிலை விற்கும் பாசவர் ,
வாசவர்-
(சூடம், சாம்பிராணி போன்ற ) வாசனைப்பொருள்களை விற்பவர் ,
பலவகையான புலால் கறிகளை விற்கும் "பல்நிணவிலைஞர்,
எண்ணெய் வகைகள் விற்கும் ஓசுநர் ,
ஆகியோரின் இருப்பிடங்கள் இருந்தன.
வெண்கலப் பொருள்கள் செய்வோர் - கஞ்சகாரர்(!),
செம்புப் பொருள்கள் செய்வோர் - செம்பு செய்குநர்,
மரப் பொருட்கள் செய்யும் தச்சர் - மரங்கொல் தச்சர்,
இரும்புக் கருவிகள் செய்யும் கொல்லர் -கருங்கைக் கொல்லர்,கண்ணுள்-வினைஞர் -ஓவியர்கள்,கைவினைக்
கலைஞர்கள்,
மண்ணில் பாண்டங்களும் பொம்மைகளும் செய்யும் மண்ணீட்டாளர் ,
பொற்கொல்லர்கள்- பொன் செய்கொல்லர்,
துணி தைப்போர் -
துன்னகாரர்,தோல்-அணி தைப்போர் -தோலின் துன்னர்
( துன்னுதல் என்றால் தைப்பது. சென்னைத்தமிழில் வேறு பொருள்!)
கிழி -ஓவியம் வரையப்படும் துணி, கிடை-மரப்பலகை இவற்றை வைத்து, தொழில் பல பெருக்குவோர்,
ஏழு ஸ்வரங்களில் எத்தனை பண்கள் என வியக்க இசை பாடும் "பெரும்பாணர்கள்
சிறு குறுங்கை வினைஞர்(micro" நுண்ணிய தொழில் எனப்பாகுபாடு அக்காலத்திலேயே!)
பிற வினையாளர்-பிறர்க்கு ஏவல் செய்வோர்( நமக்குப் பழக்கப்பட்ட ஒன்றுதானே!)
இப்படிப் பலவகைப்பட்ட தொழிலாளர்கள் பகுதி பகுதியாக வாழ்ந்தனர். எத்தனை தூய தமிழ் பெயர்கள், ஒவ்வொரு தொழில் புரிபவர்களுக்கு! டாக்டர், இஞ்சினியர், டிரைவர் என்று ஆங்கிலத்திலேயே வளைய வரும் இக்கால இளைய சமுதாயம் அறிய வேண்டிய பெயர்கள்.
ஒன்றும் வாங்காமல்"அங்காடி நோட்டம்"விட்டதற்கே மூச்சு முட்டுதே சாமி!
இக்கால தி. நகர், பாண்டி பஜாரை நினைவூட்டும் அங்காடிகள் அமைப்புகள்.
ஆனால், மருவூர் பாக்கம்" மறு இன்றி" விளங்கியது.ஆம் திட்டமிடப்பட்ட நகர அமைப்பு, விதிகள் மீறல் கிடையாது எனில் குற்றமின்றி சிறப்புற்றதில் வியப்பென்ன!
No comments:
Post a Comment