Friday, January 9, 2026

அஜீரணம்

 உப்புமா 24


அஜீரணம்


போஜனம் அளவுக்கு மிஞ்சினால்...அஜீரணம்!!!


கூடவே உணவு சகிப்புத்தன்மையின்மை,

பறக்க பறக்க உண்ணும் போது பறக்கும் வாயுவையும் விழுங்குதல்,

அமிலத்தை அதிகரிக்கும் காரசாரமான உணவு,தூக்கமின்மை

காபி,மது,உடல் பருமன்,

பெப்ஸி கோக் மிராண்டா

மிட்நைட் பிரியாணி

மன அழுத்தம் 


என பல காரணம்.......


வயிற்றில் வாயு போடும் குட்டிக்கரணம்....

உலகத்தை சுற்றிப்பார்க்க

வெளியே கிளம்பினால் 

சுற்றியிருப்போர் எல்லை

தாண்டி ஓடனும்..


பூரி போல்  வயிறு உப்பும்

ஏப்பம் குமட்டலோடு 

விட்டு விட்டு வலியும் 

விடாமல் மிரட்டும்..


ஜெலுசில்,கேவிஸ்கான் ,

டைஜீன்

எதையாவது தேடி ஓடனும்..

வுட்வர்ட்ஸ் க்ரைப் வாட்டரோ குழந்தைகளுக்கு மட்டும் ...

சித்த மருத்துவத்தில்

திரிபலா சூரணம்...

கதைகளுக்கும் கஷாயத்திற்கும் பாட்டியிடமே சரணம்..


கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் ஏன் செய்யனும்?

வருமுன் காப்பதில் தானே

உண்டு பிரயோஜனம்


உடம்பை நிறைக்கும் வாய்வு

வயிறுக்கு வேண்டும் ஓய்வு!


மனசும் வயிறும் நோகாம பாத்துக்கணும்..

சோம்பு,சீரகம், ஓமம், பெருங்காயம்,சுக்கு

இஞ்சி,பூண்டு ,தயிர்,மோர்

உணவில் சேர்த்துக்கணும்..

கண்டதையெல்லாம் உண்ண நினைக்கும் முன் யோசிக்கனும்..

இல்லை என்றால் 

அஜீரணத்தின் ஆட்டம் அதகளம்..




- சாய்கழல் சங்கீதா

Wednesday, January 7, 2026

சும்மா தான் இருக்கிறாள்/ன்

 உப்புமா 23


சும்மா தான் இருக்கிறாள்/ன்



காலை விழித்தது முதல்

இரவு விழிகளை மூடும் வரை

அவள் சும்மா தான் இருக்கிறாள்..

சும்மாவே இருக்கிறாள்...


சும்மா

இருந்துகொண்டே 

வீட்டிலுள்ளோர்க்கு தேவையில்லை என்றாலும் உணவு படைத்துக்கொண்டே இருக்கிறாள் 


சும்மா இருந்துகொண்டே

பள்ளியிலிருந்தும்

பணியிடத்திலிருந்தும் திரும்பும்

வீட்டினர்க்கு தனக்குப் பிடித்ததை தயார் செய்துவிட்டு காத்துக் கொண்டே இருக்கிறாள்

  

சும்மா இருந்துகொண்டே

வீணாக வீட்டையும் பாத்திரங்களையும் சுத்தப்படுத்தி வீட்டின் அழுக்குகளையெல்லாம் அழித்துக் கொண்டே இருக்கிறாள் 


சும்மா இருந்துகொண்டே

அனைவரும் அணிந்த உடைகளை சுத்தம் செய்து உலர்த்திவிட்டு

மீண்டும் அணியச் சொல்லி 

வற்புறுத்துகிறாள் 


சும்மா இருந்துகொண்டே 

தன் குழந்தைகளை

படிக்கும்படியும் வீட்டுப்பாடம்

செய்யும்படியும் தினமும் 

இம்சை செய்கிறாள்


சும்மா இருந்துகொண்டே 

வீட்டில் உள்ளோர்க்கு

உடல்நிலை சரியில்லையெனில் 

தனக்குத் தெரிந்த வைத்திய முறைகளை அவர்கள் மீது

திணிக்கிறாள்


சும்மா இருந்துகொண்டே

தம் குழந்தைகள் வளரும் வரை

தான் மட்டுமே அவர்களை

பள்ளிக்கு அழைத்து செல்வேன்

என்று அடம் பிடிக்கிறாள்


சும்மா இருந்துகொண்டே

வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு

அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று காபி குடிக்கச் சொல்லி தொந்தரவு செய்கிறாள் 


பள்ளியிலிருந்து வீடு திரும்பும்

தம் பிள்ளைகளை

பூட்டிய கதவுகள் வரவேற்று சொந்தம் கொண்டாடுவதை விரும்பாமல்...


வீட்டின் சுவர்களும் ஜன்னல்களும்

தன் பிள்ளைகளோடு உரையாடி மகிழ்ந்துவிடுமோ என்று 

பொறாமை கொண்டு...


சோம்பல் முறித்தபடி

வீட்டிலேயே சுகமாய் சும்மா இருக்கிறாள்...


தன் சுய ஒளியை

பட்டப்பகலில் மனமகிழ்ச்சியோடு கொள்ளையடிக்க விட்டுவிட்டு தன்னையே தேடி

இருட்டில் அலைகிறாள்!


அவளின் தன்னம்பிக்கையோடு

அவளுக்கு

தோள் கொடுக்கவும் 

தட்டிக் கொடுக்கவும் 

ஒரு கை போதும்..

சும்மா அதிரும்படி மீண்டும் ஒளிர்வாள்!

 


- சாய்கழல் சங்கீதா

Monday, January 5, 2026

*உலகில் உய்ய வழி*

 ••••••••••••••••••••••••••••••••

*உலகில் உய்ய வழி*

••••••••••••••••••••••••••••••••


உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் 

என வாழ்வோன் உத்தமன் 


உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மனிதன் கொடூரன் 


உலகினிலே உத்தமரும் 

இருந்திடுவர் 


உறவாடிக் கெடுப்போரும் 

இருந்திடுவர் 


ஆய்ந்தறிந்து பழகுதலே

உலகில் உய்ய வழியாம்!


*ஸ்ரீவி*

Saturday, January 3, 2026

திருஷ்டிப் பொட்டு!

 நற்சுனை 28


திருஷ்டிப் பொட்டு!


தன் குழந்தைக்கு எதிராக தொடுக்கப்படும் கண் அஸ்திரங்களை

முறியடிக்கும் கேடயமாய்


எதிராளிகளின் மனக் கருமை ஊடுருவாமல் பிரதிபலிக்கும்

கருப்புக் கண்ணாடியாய் 


தன் கண்மணியின் கன்னத்தில் "கண்"மை" வைத்தாள்..

கண் திருஷ்டி உண்மையா என

அலசி ஆராய்ந்து அறிந்து கொள்ள விரும்பாத  அன்னை! 


- சாய்கழல் சங்கீதா

Thursday, January 1, 2026

முள்ளை உதிர்த்த ரோஜா

 ••••••••••••••••••••••••••••••••••••

முள்ளை உதிர்த்த ரோஜா

••••••••••••••••••••••••••••••••••••


தொட்டியில் இருந்த ரோஜா செடியில் 

ரத்த சிவப்பில் ரோஜா ஒன்று மலர்ந்தது!

கண்ணை பறிக்கும் நிறத்தில் ஒளிர்ந்தது. 


தன்னைப் பார்த்து அழகில் மயங்கி 

தன்னை நோக்கி தவழ்ந்து வந்த

அழகிய சிறு குழந்தை கண்டதுமே


அன்றலர்ந்த அந்த ரோஜாவோ 

தானே மனமுவந்து தன் முள்ளை உதிர்த்தது.

வருகின்ற குழந்தையை ஆசையாய்ப் பார்த்தது


அதனாலேயே அந்த அழகிய ரோஜா 

இருந்ததை விட

மேலும் அழகானது. 

கதிரொளியில் வைரம் போல் ஜொலித்தது.


- ஸ்ரீவி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...