உப்புமா 23
சும்மா தான் இருக்கிறாள்/ன்
காலை விழித்தது முதல்
இரவு விழிகளை மூடும் வரை
அவள் சும்மா தான் இருக்கிறாள்..
சும்மாவே இருக்கிறாள்...
சும்மா
இருந்துகொண்டே
வீட்டிலுள்ளோர்க்கு தேவையில்லை என்றாலும் உணவு படைத்துக்கொண்டே இருக்கிறாள்
சும்மா இருந்துகொண்டே
பள்ளியிலிருந்தும்
பணியிடத்திலிருந்தும் திரும்பும்
வீட்டினர்க்கு தனக்குப் பிடித்ததை தயார் செய்துவிட்டு காத்துக் கொண்டே இருக்கிறாள்
சும்மா இருந்துகொண்டே
வீணாக வீட்டையும் பாத்திரங்களையும் சுத்தப்படுத்தி வீட்டின் அழுக்குகளையெல்லாம் அழித்துக் கொண்டே இருக்கிறாள்
சும்மா இருந்துகொண்டே
அனைவரும் அணிந்த உடைகளை சுத்தம் செய்து உலர்த்திவிட்டு
மீண்டும் அணியச் சொல்லி
வற்புறுத்துகிறாள்
சும்மா இருந்துகொண்டே
தன் குழந்தைகளை
படிக்கும்படியும் வீட்டுப்பாடம்
செய்யும்படியும் தினமும்
இம்சை செய்கிறாள்
சும்மா இருந்துகொண்டே
வீட்டில் உள்ளோர்க்கு
உடல்நிலை சரியில்லையெனில்
தனக்குத் தெரிந்த வைத்திய முறைகளை அவர்கள் மீது
திணிக்கிறாள்
சும்மா இருந்துகொண்டே
தம் குழந்தைகள் வளரும் வரை
தான் மட்டுமே அவர்களை
பள்ளிக்கு அழைத்து செல்வேன்
என்று அடம் பிடிக்கிறாள்
சும்மா இருந்துகொண்டே
வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு
அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று காபி குடிக்கச் சொல்லி தொந்தரவு செய்கிறாள்
பள்ளியிலிருந்து வீடு திரும்பும்
தம் பிள்ளைகளை
பூட்டிய கதவுகள் வரவேற்று சொந்தம் கொண்டாடுவதை விரும்பாமல்...
வீட்டின் சுவர்களும் ஜன்னல்களும்
தன் பிள்ளைகளோடு உரையாடி மகிழ்ந்துவிடுமோ என்று
பொறாமை கொண்டு...
சோம்பல் முறித்தபடி
வீட்டிலேயே சுகமாய் சும்மா இருக்கிறாள்...
தன் சுய ஒளியை
பட்டப்பகலில் மனமகிழ்ச்சியோடு கொள்ளையடிக்க விட்டுவிட்டு தன்னையே தேடி
இருட்டில் அலைகிறாள்!
அவளின் தன்னம்பிக்கையோடு
அவளுக்கு
தோள் கொடுக்கவும்
தட்டிக் கொடுக்கவும்
ஒரு கை போதும்..
சும்மா அதிரும்படி மீண்டும் ஒளிர்வாள்!
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment