*{6} இளங்கோ காவியம் எழுத ஒப்புதல்*
குறிஞ்சி மக்கள் கூறியதைக் கேட்டு
கற்சிலையாய் நின்ற இளங்கோவிடம்
கூல வாணிகன் தாமே முன்வந்து
கற்பு நிறை நின்ற கண்ணகிக் கதையை
மனம் உவந்து சொல்லியதோடு
அக்காப்பியத்தை அடிகளே வடித்தெடுக்க
வேண்டுகோளும் வைத்திடவே
மணி மகுடம் துறந்து சமண துறவியாய் ஆன இளங்கோ அடிகளும்
தன் நண்பர் கூறியதைக் கேட்டு
*அரைசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்று ஆவதூஉம்* – எனப் பகன்று
கண்ணகி காப்பியத்தை எழுதவும் முடிவெடுத்தார்.
தன் தோழர் சாத்தனாரிடம்
*உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதும், சூழ்வினைச் சிலம்பு காரணமாக, சிலப்பதிகாரம் எனும் பெயரால், நாட்டுதும் யான் ஓர் பாட்டுடைச் செய்யுள்* என உறுதி சொன்னார்.
இளங்கோ அடிகளின் இந்தக் கூற்றில்
ஊழ்வினை காரணமாக
கோவலன் மாண்டான்
எனும் கருத்து எதிரொலிப்பதை
காணலாம் நாமும்.
சிலம்பொடு நாம் பயணிக்கையில்
நமக்கு ஒன்று உறுதியாய் புலப்படுகிறது.
ஐம்பெருங் காப்பியங்கள் ஐந்திலுமே
ஊழ்வினையே முந்தி வந்து நிற்கிறது.
உலகப் பொதுமறை தந்த
ஐயன் வள்ளுவனும்
ஊழ்வினைக்கென ஓர் அதிகாரமே படைத்தான்.
சங்க இலக்கியங்களில் முந்தைய தான பதினெண்மேற் கணக்கு நூல்களில்
ஊழ்வினை பற்றி குறிப்புகள் இல்லை.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளில் மட்டும் ஓர் அதிகாரம் ஊழ்வினைக்காய் உண்டு.
சங்க இலக்கிய காலத்தைத் தொடர்ந்து
வந்திட்ட ஐம்பெருங் காப்பியங்களில்
ஊழ்வினையே முக்கிய பாத்திரம்
வகிப்பதை அறிக!
சங்ககாலத்தில்
தொல்குடியினர் யாவரும்
ஊழ்வினை என்ற ஒன்று
இருப்பதாகக் கருதவில்லை
எனக் கொள்க!!
சங்ககாலத்திற்கு பின்னரே,
காப்பியங்கள் படைக்கப்பட்ட காலத்தில்
ஊழ்வினை என்பது
கருப்பொருளாய் ஆனது
என்பதை உணர்க.
இளங்கோ உறுதி கூறிய பின்,
சீத்தலைச் சாத்தனார்
மனம் குளிரக் கூறலானார்:
*முடி கெழு வேந்தர் மூவர்க்கும் உரியது அடிகள் நீரே அருளுக* என மகிழ்வோடு வழிமொழிந்தார்.
(சிலம்பொடு நம் பயணத்தை தொடர்வோம்..)
*ஶ்ரீவி*