*பயணக் கட்டுரை*
*அன்றும்… இன்றும்…*
2000-ஆம் ஆண்டு.
கல்கத்தா விமான நிலையத்திலிருந்து சென்னைக்குப் பயணிக்க, முதன்முறையாக என் ஆறு வயது மகனுடனும் மனவியுடனும் விமானத்தில் ஏறினேன். சகாரா விமானம். என் மகன் அரவிந்திற்கு அது அவனது முதல் விமானப் பயணம்.
விமான நிலையத்தில் காலடி வைத்ததுமே, ஏர்லைன் நிறுவனத்தினர் எங்களை ஒரு கல்யாண வரவேற்பைப் போல அன்போடும் புன்னகையோடும் வரவேற்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு சிறிய பரிசுப் பெட்டி
அதில் சாக்லேட், பிஸ்கட், பஞ்சு, பேனா, மற்றும் “லிமிலி” என்று அழைக்கப்படும் இனிய மிட்டாய்.
பயணம் தொடங்கும் முன்பே மனம் இனிப்பில் நனைந்தது.
விமானம் மேல் நோக்கி எழத் தொடங்கிய அந்த நொடியில்,
அச்சம் என் மகனின் கண்களில் குடிகொண்டது. அழுகை வெடித்தது.
அந்தக் கணமே, விமான பணிப்பெண் ஒரு தாயின் கருணையுடன் வந்தார்.
அவனது கையில் ஒரு அழகிய கார்ட்டூன் கதைப்புத்தகம்,
படம் வரையும் நோட்டு,
கிரையான் கலர் பென்சில்கள்
அதோடு *அவனை விமானியின் அறைக்கே அழைத்துச் சென்று,*
*அந்த பயத்தை ஆச்சரியமாக மாற்றினர்.*
அழுகை நின்றது.
அதற்கு பதிலாக, அவன் முகத்தில் *ஒரு புதிய உலகத்தை கண்ட புன்னகை மலர்ந்தது.*
அந்தப் பயணம்
ஒரு நினைவாக அல்ல,
ஒரு அனுபவமாக அவன் மனதில் பதிந்தது.
*இன்று*
30-01-2026.
என் மனைவியுடன் அகாஷா விமானத்தில் ஒரு பயணம்.
அதுவும் சர்வதேசப் பயணம்.
விமான நிலையம் மாறியிருக்கிறது.
விமானமும் மாறியிருக்கிறது.
காலம் வேகமாக முன்னேறியிருக்கிறது.
ஆனால்… மனிதம்?
வரவேற்பு என்று ஒன்றுமில்லை.
ஒரு புன்னகை கூட இல்லை.
நாம் வந்தோம், அமர்ந்தோம், புறப்பட்டோம், அவ்வளவுதான்.
*என் மகனைப் போலவே ஒரு சிறு குழந்தை அழுகிறது.*
அழுகை விமானத்தின் ஓசையோடு கலந்து மறைந்து போகிறது.
யாரும் திரும்பிப் பார்க்கவில்லை.
*யாருக்கும் அது ஒரு மனிதக் குரலாகவே தோன்றவில்லை.*
இரு துண்டு ரொட்டிக்குள் அடுக்கப்பட்ட உணவு ஒன்று, (Sandwich) ஒரு பழச்சாறு
*கடமை முடிந்ததற்கான சான்றாக வழங்கப்பட்டது.*
அன்பாக அல்ல… அவசியமாக.
பயணத்தின் நடுவில்
என் மனைவிக்கு கடுமையான காது வலி. அவஸ்தை.
அந்த வலியின் உச்சத்தில்,
மிகுந்த எதிர்பார்ப்போடு
விமான பணிப்பெண்ணிடம்
பஞ்சு கேட்டேன்.
*”இல்லை”* ஒரே சொல்லில் முடிந்தது.
அந்த “இல்லை” பஞ்சு இல்லை என்பதற்காக அல்ல… அதன் பின்னால் ஒரு முயற்சியும் இல்லை, ஒரு மாற்று யோசனையும் இல்லை,
ஒரு கருணையும் இல்லை என்பதற்காக.
என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது
விமானத்தில் பஞ்சு கொடுக்கும் பழக்கம் இல்லாமல் போயிருக்கட்டும். ஆனால்
முதல் உதவி பெட்டியிலிருந்து
ஒரு சிறிய அளவு பஞ்சு எடுக்கக் கூட ஏன் தோன்றவில்லை?
மனிதம் தொலைந்துவிட்டதா?
அல்லது அந்த அளவு உடனடி சிந்தனைத் திறன் (presence of mind) இல்லாமல் போய்விட்டதா?
இல்லை… அதுவும் இல்லை.
*கடமை மட்டும்.*
*கால அட்டவணை மட்டும்.*
*நடைமுறை விதிமுறை மட்டும்.*
*கருணை?*
அது இப்போது
பயணப் பெட்டியில் சேர்க்கப்படாத
ஒரு கூடுதல் பொருளாகிவிட்டதா?
அன்று
ஒரு குழந்தையின் அழுகை
ஒரு விமானப் பயணத்தை
அழகான நினைவாக மாற்றியது.
இன்று
ஒரு மனிதனின் வலி
ஒரு நடைமுறை விதிமுறையின் கீழ்
மௌனமாக்கப்பட்டது.
அன்றும் விமானம் பறந்தது.
இன்றும் விமானம் பறந்தது.
ஆனால்
அன்று மனிதம் உயரத்தில் இருந்தது.
இன்று அது
தரையில் எங்கோ
விழுந்து கிடக்கிறதோ என்ற
சந்தேகம் மட்டும்
என்னுடன் பயணம் செய்தது.
No comments:
Post a Comment