பயணங்கள் முடிவதில்லை…
*பரவசமூட்டிய பறக்கும் முத்தம்…*
பயணம் என்பது விமானத்தில் ஏறிய தருணத்தில் தொடங்குவது போல தோன்றினாலும்,
அது உண்மையில் குடிவரவு சோதனை மேசையின் முன் தான் தனது நிறைவை அடைகிறது.
இன்றைய உலகில் குடிவரவு நடைமுறைகள் ஒரு சாதாரண சடங்கல்ல அது ஒரு சோதனை.
கைப்பையில் என்ன இருக்கிறது என்பதைக் காண்பதற்காக மட்டுமல்ல; உங்கள் முகத்தில் எவ்வளவு நம்பிக்கை, எவ்வளவு தெளிவு இருக்கிறது என்பதைக் காணும் கண்காணிப்பு மேடை அது.
புதிய பொருட்கள் எடுத்துச் சென்றால் விலைப்பட்டியல் கேட்கப்படும். ஆனால் விலை குறிப்பு அட்டை பொருளில் இதுக்கக்கூடாது.
உணவுப் பொருட்கள் இருந்தால் அவை வீட்டில் தயாரித்தவை என நிரூபிக்க வேண்டும்.
ஒவ்வொன்றுக்கும் தெளிவான விளக்கம் தேவை.
அந்த அளவுக்கு நிபந்தனைகள்.
அந்த அளவுக்கு கண்காணிப்பு.
அதனால் நான் ஒரு முன் ஏற்பாடு செய்திருந்தேன். ஒவ்வொரு பெட்டிக்கும் தனித்தனி பொருள் பட்டியல் தயாரித்து, அச்சிட்டு வைத்துக்கொண்டிருந்த்தேன்.
எந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது என்பதை வரிசையாக, எளிமையாக, தெளிவாக.
*Abu Dhabi International Airport* விமான நிலையத்தில் எங்களை வரவேற்றது ஒரு பெண் குடிவரவு அதிகாரி.
அவர் கேள்விகள் கேட்ட விதம்
வெறும் நடைமுறைச் செயல் அல்ல; *குடிவரவையே கேள்விக்குள்ளாக்கும் ஒரு உளவியல் விசாரணை போல.*
எங்களை வழிநடத்திய உதவியாளர் கூட,
*சிறிது கவனமாகப் பேசுங்கள்…* என்று எச்சரித்தார்.
*நீங்கள் அனைவரும் ஒரே குடும்பமா?*
யார் யார்?”
“நான், என் மனைவி, மற்றும் சகோதரி,” என்றேன்.
“சகோதரி என்றால், உங்களுக்கு ஒரே தாய் தந்தையா?”
ஒரு நொடி தடுமாறினேன் சிறிய அதிர்ச்சி.
ஆனால் உடனே தெளிவுபடுத்தினேன்
“இவர் என் மனைவியின் அத்தை மகள்.” என்று.
திரையில் உணவுப் பொருட்கள், புதிய துணிகள் இருந்த இரண்டு பெட்டிகள் தெளிவாகத் தெரிந்தன.
மீண்டும் கேள்விகள்.
ஒரு கணம் வார்த்தைகள் சற்று தடுமாறின.
அப்போது அமைதியாக அச்சிட்டு வைத்திருந்த பொருள் பட்டியலை நீட்டினேன்.
அவர் அதை எடுத்துப் பார்த்தார்.
முகபாவனை மாறியது.
சில நொடிகள் அமைதி.
பின்னர், திருப்தி புன்னகை. ஒரு கை அசைவு. முடிவில், எதிர்பாராத *ஒரு சிறிய பறக்கும் முத்தம்.*
குடிவரவு முத்திரை பதியப்பட்டது.
அங்கே இருந்தவர்கள் வியப்புடன் பார்த்தனர்.
“என்ன விசேஷம்?” என்ற கேள்வி அவர்களின் கண்களில்.
என் மனைவிக்கோ,
*சிறிது பொறாமை கலந்த புன்னகை.*
எனக்கோ, *என் முன் ஏற்பாட்டின் அமைதியான பெருமை.*
Chicago (– 16) டிகிரி.
“நன்கு தயாராகி வர வேண்டும்…”
“குளிர் கடுமையாக இருக்கும்…”
“கவனமாக இரு…”
அறிவுரைகள் தொடர்ந்து வந்தன.
அவர்கள் அனுபவத்தை நம்பினர்;
*நான் என் நினைவுகளை நம்பினேன்.* இது தான் அசட்டு தைரியம் என்பதோ…
*நான் தில்லியில் பன்னிரண்டு வருடம் இருந்தவன்.
(-4) டிகிரி வரை பழகியவன்.”
அந்த ஒரு வாக்கியம் தன்னம்பிக்கையா? திமிரா?
இன்றும் எனக்கு தெளிவில்லை.
*தலைக்கு மேல் வெள்ளம் ஒரு அடி போனாலும், ஒன்பது அடி போனாலும் ஒன்றுதான்* (-14, -16 )
என்ற மனநிலையுடன்
அரைக்கை சட்டைகளையே பயணச் சாமான்களில் அடுக்கிக்கொண்டேன்.
குளிர் என்பது வெறும் எண்ணிக்கை அல்ல;
அது ஒரு அனுபவம்.
அது ஒரு உடல் மொழி.
காற்று முகத்தில் அடித்த அந்த நொடி
“இது தில்லி அல்ல” என்று உடம்பே அறிவித்தது.
குளிர் எலும்புக்குள் ஊடுருவி,
நினைவுகளை தளர்த்தி,
நிகழ்காலத்தைப் பேச வைத்தது.
அப்போது தான் புரிந்தது *அசட்டு தைரியம்* என்பது துணிச்சல் அல்ல; அறியாமையும் கலந்த கலவை என்று.
ஆம்… அவதிப்பட்டேன்.
ஆனால் அந்த அவதி தான்
இந்தக் கதையின் விதை.
இப்போது நான் Texas மாநிலத்தில்,
Richardson பகுதியில் இருக்கிறேன்.
இங்கே வந்ததும் ஒரு பெரும் ஆச்சரியம்
நம் பள்ளிக்கரணையை விட அதிக கோயில்கள்!
இது பக்தியின் அளவுகோல் மட்டும் அல்ல.
இதற்குப் பின்னால் பல அடுக்குகள் உள்ளன.
நகர எல்லைகளுக்கு வெளியே
பல ஏக்கர் நிலம் வாங்க முடிகிறது. வரி மிச்சப்படுத்த முடிகிறது.
இங்கே கோயில் என்பது வழிபாட்டிற்கான இடம் மட்டும் அல்ல, ஒரு வளாகம். இந்துக்கள் பரிச்சயம் கிட்ட,
திருமண அரங்குகள்,
இசை–நடன வகுப்புகள்,
மொழிப் பயிற்சிகள்,
பெரிய சமையலறைகள்,
நூற்றுக்கணக்கான வாகன நிறுத்துமிடங்கள்
அனைத்தும் ஒரே வளாகத்தில்.
பொது போக்குவரத்து குறைவு.
அனைவரும் தனிப்பட்ட வாகனங்களில் தான் வரவேண்டும்.
அதனால் பரந்த நிலப்பரப்பு அவசியம்.
தீயணைப்பு பாதுகாப்பு, கூட்ட நெரிசல் கட்டுப்பாடு, அவசர வாகன பாதைகள், ஒவ்வொன்றும் இடம் கேட்கும்.
*வாழ்க்கையில் ஒருமுறை தான் கட்டுகிறோம்* என்ற மனநிலை.
“இந்தியாவை பிரதிபலிக்க வேண்டும்.” என்ற ஆசை.
*அடுத்த தலைமுறைக்கு அடையாளமாக இருக்க வேண்டும்.* என்ற எண்ணம்.
அதனால் சிறியதாக அல்ல
நிலையானதாக, பெரியதாக
சிக்காகோவின் குளிர்
எனக்கு தாழ்மையை கற்றுக்கொடுத்தது.
டெக்சாஸின் கோயில்கள்
புலம்பெயர் மனத்தின் பரப்பை உணர்த்தின.
பயணம் என்னை மாற்றவில்லை.
என்னைப் பற்றிய என் புரிதலை மாற்றியது.
அசட்டு தைரியம், சில நேரம் நடுங்க வைக்கும்.
ஆனால் பின்னால் திரும்பிப் பார்க்கும்போது
அதே அனுபவம் ஒரு கதையாக மாறிவிடும். 😆
No comments:
Post a Comment